Madras Kural

பொதுநலனும் காவல் அதிகாரி பிரேமாவும்…

நாலு பேர் வேடிக்கை பார்த்து விட்டுப் போவது போல் போவது அல்ல, காவல்பணி என்பதை அவ்வப்போது போலீசார் உணர்த்தி வருகின்றனர். வெள்ளிக்கிழமை (06.5.2022 -) காலை அண்ணாநகர்- கீழ்பாக்கம் நியூ ஆவடி சாலை சந்திப்பு காந்தி நகர் மருத்துவமனை அருகில் வழக்கம்போல் பொதுமக்களின் போக்குவரத்து நடந்து கொண்டிருக்கிறது. அதே இடத்தில் சாலையில் கேபிள் ஒயர் ஒன்று அறுந்து தொங்கியபடி அடிக்கிற காற்றுக்கு ஏற்றார்போல் ஆடிக் கொண்டிருந்தது. அவ்வழியே டூ- வீலரில் சென்று கொண்டிருந்த பெண் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஒருவர் பார்வையில் பட்டுள்ளது, ஆடிக் கொண்டிருந்த கேபிள் வயர். அப்பொழுதே டூ வீலரை ஓரமாய் நிறுத்தி விட்டு இறங்கிய அந்த சப்- இன்ஸ்பெக்டர், மொத்த ஒயரையும் மெதுவாக சுருட்டி மடித்து அருகிலிருந்த ஒரு மரத்தின் பலகையில் அதை சுற்றி வைத்து விட்டு “அப்பாடா” என்று அங்கிருந்து கிளம்பிப் போயிருக்கிறார். மூன்று சக்கர வாகனத்தில் சென்ற மாற்றுத்திறனாளி அன்பர் ஒருவர், இந்தக் காட்சியை படம் பிடித்து வாட்சப்பில் போட்டு விட்டு ‘அந்த போலீஸ் அதிகாரிக்கு நன்றி’ என்று குறிப்பிட்டிருந்தார். தகவலை உறுதிப்படுத்திக் கொள்ள நான் விசாரிக்கையில், அத்தனையும் உண்மை என்று தெரிய வந்தது. சென்னை பெரவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரேமாதான் புகைப்படத்தில் இருப்பவர் என்றும் தெரிந்தது. மாற்றுத் திறனாளியின் உள்ளக் கிடக்கையை நினைத்து பெருமைப் படுவதா, பல விபத்துகளை போகிற போக்கில் சாதாரணமாய் தடு(விர்)த்து விட்டு எதையோ சாதித்து விட்டோம் என்று மிதக்காமல் கிளம்பிப் போய்விட்ட சப்- இன்ஸ்பெக்டர் பிரேமாவின் செயலுக்கு வாழ்த்தி நிற்பதா தெரியவில்லை! நாம சொல்றதை சொல்லிடுவோம். மகிழ்ச்சி. சிறப்பு. நன்றி. வாழ்த்துகள் தாயீ…

-சே –

Exit mobile version