Madras Kural

பொதுக்கழிப்பறை விழிப்புணர்வு! கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் செய்ய வேண்டியது என்ன?

தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி பல்வேறு சமூகநல செயற்பாடுகளிலும் கவனம் செலுத்தி வருகிற நபராக அறியப் படுகிறவர். திரைத்துறை இயக்குநர்- தயாரிப்பாளர் போன்ற பணிகளிலும் இயங்கிவரும் திருமதி. கிருத்திகா, பொதுமக்களுக்கான பொது கழிப்பறை குறித்தும் பேச ஆரம்பித்திருக்கிறார். தம்முடைய டுவிட்டர் பக்கத்தில், பொதுக் கழிப்பறையை அனைத்துத் தரப்பு மக்களுக்குமான பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்து அதில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

‘சின்ன வயதிலிருந்தே பயணம் செய்வது பிடிக்கும். என்னுடைய அப்பாவுடன் நிறைய பயணம் செய்துள்ளேன். பயணம் நல்லதொரு
அனுபவமாக இருந்தாலும், எல்லாரும் சொல்லக்கூடிய ஒரு அனுபவம்; கழிவறை மோசம் என்பதுதான் !

நிறைய முறை, யார் என்றே தெரியாதவர்கள் வீட்டில் நின்று அவர்கள் கழிவறையை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கேட்டிருக்கிறேன்.
இதற்கு ஒரு தீர்வு காணும் வகையில்தான் தற்போது மேப்பத்தான் சாந்தோம் உயர் நிலைப் பள்ளியில் ஒரு விழிப்புணர்வுக்கான திட்டமிடலில் அனைவரும் ஒன்று கூடுகிறோம். ரீசைகிள் பின், சியர் ஆர்கனைசேஷன், டச் மினிஸ்ட்ரி, சென்னை பெருநகர மாநகராட்சி இணைந்து நடத்தக் கூடிய விழிப்புணர்வு நிகழ்ச்சியாக அது இருக்கும். சென்னையிலுள்ள பொதுக் கழிப்பறைகளை, இதில் இணையும் அமைப்பினரும் நிர்வாகத்தினரும் அடையாளம் காணவுள்ளனர். மீண்டும், பொதுக் கழிப்பறைகளை மக்கள் பயன்பாட்டுக்கு எப்படி கொண்டுவரலாம் என்பது குறித்து ஆலோசிப்போம்’ இவ்வாறு டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கிருத்திகா உதயநிதிஸ்டாலின் பேசியிருக்கிறார். பொதுக்கழிப்பறை குறித்து அவரவர் கருத்துகளை சொல்லலாம் என்றும் வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார். நம்ம ‘மெட்ராஸ் குரல்’ கருத்தையும் இந்தத் தருணத்தில் சொல்வது சிறப்பாய் இருக்கும் என்று நம்புகிறோம். இதோ நம்ம கருத்து :
சென்னை மாநகராட்சியின் பல கட்டணமில்லாக் கழிப்பறைகள் உள்ளூர் ‘சக்திமான்’களின் கைகளில் இருக்கிறது. திடீரென்று ஒருநாள், ‘கட்டண வசூலிப்பாளர்’ களை மாநகராட்சி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் கைது செய்தனர். சரி, கக்கூஸ்களின் நிலை? பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள, அங்கே புதிய ஆட்களைப் போட வேண்டுமல்லவா, அதைச் செய்யவில்லை. அப்படியே விட்டு விட்டார்கள். ஜாமீனில் வெளியே வந்த முன்னாள், ‘கட்டண வசூலிப்பாளர்’ களே மீண்டும் கக்கூஸ்களைக் கையில் எடுத்துக் கொண்டார்கள்.’ “எங்களை விட்டால் யார் இதைக் கவனிப்பார்கள், ஏதோ நாங்களாச்சும் பப்ளிக் சர்வீஸ் செய்து கொண்டிருந்தோம், இப்பப் பாருங்க, நாங்க இல்லாம நாறிடுச்சு” என்று வசூலிப்புக்குப் புதுவிளக்கமும் கொடுத்தார்கள். முக்கியப் பேருந்து நிலையங்களில், பேருந்து மறைவுகளில், இயற்கை உபாதையைக் கழிக்கும் அவலம் தொடர்கதையாக இருப்பதற்கு, இரண்டு காரணங்கள் இருக்கிறது. காசு வசூலிக்கும் கழிப்பறைகள் கண்றாவியாக இருப்பது முதல் காரணம். அந்த நேர அவசரத்துக்கு மக்கள் கையில் காசு இல்லாமல் இருப்பது, இரண்டாவது காரணம். மழைக்காலங்களில் பேருந்து நிலையங்களில் நிற்கும் நீரில், ‘நீர்மட்டும்’ இல்லை. மனித உடல் உபாதைகளின் எச்சமும் கூடவே தேங்கி நிற்கிறது. ஊரெல்லாம் காலரா, மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, எலிக் காய்ச்சல், என்று நோய்கள் அணிவகுத்த பின்னால், சுகாதாரத் துறையினர் கைகளில் ‘வெள்ளைநிற’ பவுடரோடும், கொசு மருந்துத் தெளிப்பானோடும் வந்து விடுவார்கள். உயிரினங்கள் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பது, இயற்கை நியதி. நோய்களும் அப்படியே சார்ந்திருக்க வழிவகுப்பது மனித சக்திகளின் திட்டமிட்ட சதி !
கட்டணவிபரம் விசாரித்தேன் ! சிறுநீர் கழிக்க 3 அல்லது 5 ரூபாயும், மலஜலம் போக 5 அல்லது 7 ரூபாயும் வசூலிக்கிறார்களாம். “நாங்க தண்ணி ஊத்தி மருந்து போட்டு வைக்கலேன்னா நாறிடுமே… எங்க உழைப்புக்கு கூலிதான் இந்த வசூல் வேட்டை” என்கிறார்கள் வெளிப்படையாகவே. கக்கூஸ் (பொதுக் கழிப்பறை) அதிகம் இருக்கிற வார்டுகளில் கவுன்சிலர் சீட்டை வாங்க கடும் போட்டி நிலவும் அளவுக்கு அதில் வருமானம் கொட்டுகிறது… அரசாங்கத்துக்கு அந்த வசூல் போனாலும் ஒரு நியாயம் இருக்கிறது, அடுத்து வரக்கூடிய சுகாதார சீர்கேட்டு சிக்கலைத் தீர்க்க ஃபண்டை இதன் வருவாய் மூலம் கொடுக்கலாம். அறிவிப்போ கட்டணமில்லா இலவசக் கழிப்பிடம், நடைமுறையில் காசு, துட்டு, மணி, மணிதான். சென்னை பெருநகரில் மெரீனாவில் அமைந்துள்ள பொதுக் கழிப்பறையும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பொதுக்கழிப்பறையும் மட்டுமே கட்டணம் வாங்காமல் சுத்தமான முறையில் பராமரிக்கப் படுகிறது. பிற இடங்களில் கட்டணமும் உண்டு, நாற்றமும் உண்டு ! இதையும் கொஞ்சம் கவனத்தில் வைங்க தாயீ @ கிருத்திகா உதயநிதி ஸ்டாலின்…

– ந.பா.சேதுராமன்-

Exit mobile version