திருவள்ளூர் அருகே வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற கோழி மற்றும் தீவனம் வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு செத்துப்போன கோழி குஞ்சுகள் வினியோகம் செய்தது குறித்து கேள்வி எழுப்பிய நிருபர்கள் செல்போனை, டாக்டர் என்று அறிவித்துக் கொண்ட ஒரு நபர் கீழே தட்டி விட்டதாக நிருபர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டாரவளர்ச்சி அலுவலக வளாகத்தில் வாழ்வாதார இயக்கம் சார்பில் 13 ஊராட்சிகளைச் சேர்ந்த 130 பயனாளிகளுக்கு 1300 கோழிக் குஞ்சுகள் மற்றும் தீவனம் வழங்கும் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. காலை 10 மணிக்கு தொடங்க வேண்டிய நிகழ்ச்சியானது, அதிகாரிகள் யாரும் வராத நிலையில் மாலை 3 மணிக்கு தொடங்கியது. சுமார் 5 மணி நேரமாக காத்திருந்த பயனாளிகளுக்கு அப்போது உயிரிழந்த கோழிக்குஞ்சுகள், விநியோகிக்கப் பட்டன. இதனால் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். அது குறித்து தகவல் அறிந்து அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை தன்னை கால்நடை மருத்துவர் என்று கூறிக்கொண்ட ஒருவர் அவர்களை செய்தி சேகரிக்க விடாமல் தடுத்தும், படம் பிடித்த செய்தியாளர்களின் கைபேசியை தட்டியும் விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதால் அந்த நபர், அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளால் நிருபர்களைப் பார்த்து பேசியதோடு மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்ட வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் கீழ் இறந்த கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி, தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
P.K.M.