செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம் ஊராட்சி – ஊர் பொது குளத்தை மறுசீரமைக்கும் பணிகள் சிறப்பாக நடந்துள்ளது. இயற்கை வளங்களை துண்டு போட்டு அடுக்ககம் ஆக்கிக் கொண்டு வரும் காலகட்டத்தில் பொதுக்குளத்தை மறுசீரமைப்பின் கீழ் கொண்டு வந்து சிறப்பாக்கி கொடுத்த இந்துஸ்தான் கல்லூரி, ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஸ்பாட்லைட்டினுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். விஷயத்தைக் கையிலெடுத்து பல்வேறு அமைப்புகளின் உதவியோடு குளத்தை மறு சீரமைப்புப் பணிகளை தொடங்கியதோடு, மகளிர்க்கான கழிவறையையும் அமைத்துக் கொடுத்திருக்கும், திருப்போரூர் ஒன்றிய தலைவர் எஸ்.ஆர்.எல். இதயவர்மனையும் அதேபோல் கட்சி பாகுபாடு இன்றி அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (படூர்) மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஸ்பாட்லைட் இணைந்து கேளம்பாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள உள்ளூர் குளத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்துஸ்தான் கல்லூரியின் இயக்குனரும், ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஸ்பாட்லைட்டின் தலைவருமான டாக்டர் சூசன் மார்த்தாண்டன்,கல்வியியல் இணை இயக்குனர் முனைவர் வி.ஜே.பிலிப், கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.திருமகன், துணை முதல்வர் சாமுவேல், ஒன்றிய கவுன்சிலர் திவ்யா வினோத் கண்ணன், சம்பத்குமார் ஆகியோர் நிகழ்வுக்கு முன்னிலை வகித்தனர். திருப்போரூர் ஒன்றிய தலைவர் எஸ்.ஆர்.எல்.இதயவர்மன் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். இதே நிகழ்வில், குளத்தினையொட்டி ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டன. கேளம்பாக்கம் ஊராட்சி மன்றத்தின் சார்பில் மகளிர்க்கான கழிவறையை கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தில், எஸ்.ஆர்.எல். இதயவர்மன் திறந்து வைத்தார். நன்றி நவிலல் நிகழ்வில் இந்துஸ்தான் கல்லூரி இயக்குனரும் ரோட்டரி கிளப் ஆப் சென்னை ஸ்பாட்லைட்டின் தலைவருமான சூசன் மார்த்தாண்டன், ராணிஎல்லப்பன், எக்ஸ்பிரஸ் எல்லப்பன் மற்றும் பாஸ்கரன் ஆகியோர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்துஸ்தான் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் .எல்.கிருஷ்ணசாமி, ஏ.உதயபானு மற்றும் தளப் பொறியாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தனர். மறுசீரமைப்பு திட்டமானது, கேளம்பாக்கம் பகுதியில் வசிப்பவர்களுக்கு எதிர் வருகிற நாாட்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொது குளம் சீரமைப்பு பணிக்காக ரோட்டரி கிளப் ஸ்பாட்லைட் மற்றும் படூர் இந்துஸ்தான் கல்லூரி இணைந்து ரூபாய் 27 லட்சத்தை ஒதுக்கீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரீத்தி எஸ். –