சென்னை புழல் மத்திய சிறை வாசி பெண்களுக்கு சுயவேலை வாய்ப்பு பயிற்றுமுகாம் மற்றும் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
70-ம் பிறந்தநாளில் 70 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலினின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டின் அனைத்து சிறைச் சாலைகளிலும் (மொத்தம்) 700 மரக்கன்றுகள் நடுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியாக சென்னை புழல் மத்திய சிறையிலும் 70 மரக்கன்றுகள் நடப்பட்டன.
சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பள்ளிகள் துறை தலைமை இயக்குனர் அமரேஷ் புஜாரி கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார்.
மரக்கன்றுகளுக்கு தண்டனை சிறைவாசிகள் பெயர் வைக்கப்பட்டு அதனை பராமரிக்கும் பணி அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள், “மரக்கன்றுகளை பராமரிப்பதன் மூலம் சம்பந்தப்பட்ட சிறைவாசியின் மன அழுத்தம் குறைவதோடு அவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த புரிதலும், பிற உயிர்களை நேசிக்கும் உயரிய சிந்தனையும் ஏற்படும்” என்றனர்.
ஏற்கனவே சிறைவாசிகளில் சிலர் காய்கறி தோட்டங்களை பராமரித்து வருவதால் கவலையை மறந்து தோட்ட வளர்ப்பில் முழு கவனம் செலுத்தி வருவதாகவும் காவல் – சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் சென்னை சரக டிஜஜி ஆ.முருகேசன், தலைமையிட டி.ஐ.ஜி. இரா. கனகராஜ், சிறை கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன், சிறை அலுவலர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதேபோல் பெண் சிறைவாசிகளுக்கு நெகிழி பட்டை மூலம் நாற்காலி, கட்டில் பின்னுதல் பயிற்சியும் வழங்கப்பட்டன,
புழல் மத்திய சிறையில் உள்ள பெண் சிறைவாசிகளுக்கு தன்னார்வ அமைப்பின் சார்பில் நெகிழி பட்டைகளை பயன்படுத்தி நாற்காலி, கட்டில், கூடை உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சி வழங்கப்பட்டன, பயிற்சியினை நிறைவு செய்த பெண் சிறைவாசிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவும் நடைபெற்றது.
சிறைகள் மற்றும் சீர்திருத்த பள்ளிகள் துறை தலைமை இயக்குனர் அமரேஷ் புஜாரி கலந்து கொண்டு 31 பெண் சிறைவாசிகளுக்கு பயிற்சி நிறைவு சான்றளித்து பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியிலும் சிறைத்துறை டி.ஐ.ஜி. க்கள் ஆ. முருகேசன், இரா. கனகராஜ், சிறை கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொன்கோ.முத்து