Madras Kural

சென்னை மத்திய புழல் சிறையில் போதை எதிர்ப்பு மறுவாழ்வு மையம்!

இந்தியாவிலேயே முன்மாதிரியாக சென்னை புழல் மத்திய சிறையில் போதை எதிர்ப்பு மறுவாழ்வு மையத்தை சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி திறந்து வைத்தார்,

தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் விசாரணை மற்றும் தண்டனை பிரிவில் ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து விடுபட முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகி அவதிக்குள்ளாகி வருபவர்களை மீட்பதற்காக சிறைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவிலேயே முன்மாதிரியாக சென்னை புழல் மத்திய சிறையில் போதை பழக்கத்திற்கு அடிமையான கைதிகளின் மறுவாழ்வுக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள போதை எதிர்ப்பு மறுவாழ்வு மையத்தை சட்டம், நீதி மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி இன்று திறந்து வைத்தார். பின்னர் கைதிகளுக்கு இடையிலான கிராமிய விளையாட்டுப் போட்டிகளையும் அவர் தொடங்கி வைத்தார்.

பின்னர், அமைச்சர் எஸ். ரகுபதி பேசும் போது, “மன அழுத்தத்திற்கு விளையாட்டை போன்று ஒரு நல்ல மருந்து இல்லை. நாட்டிலேயே முதன் முறையாக போதைப் பழக்கத்திற்கு அடிமையான சிறைவாசிகளை மீட்டு எடுப்பதற்காக போதை எதிர்ப்பு மறுவாழ்வு மையம் தமிழகத்தில்தான் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சிறைவாசிகளின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக அவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. சிறைகளில் 40 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த உணவுப் பழக்கத்தை மாற்றி சிறைவாசிகள் விரும்பும் உணவு வகைகள் வழங்கப்பட்டு வருகிறது” இவ்வாறு அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தமிழக சிறை மற்றும் சீர்திருத்தப் பள்ளிகள் துறை இயக்குனர் அமரேஷ் புஜாரி, சிறைத் துறை தலைமையக டி.ஐ.ஜி இரா. கனகராஜ், சென்னை சரக சிறைத் துறை டி.ஐ.ஜி ஆ.முருகேசன், சிறைத் துறை கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

P.K.M. – சேரா

Exit mobile version