Madras Kural

புழல் சிறையில் புதிய வசதிகள் ! நீதிபதி தொடங்கி வைத்தார்…

சென்னை புழல் மத்திய சிறையில் புதிதாக கட்டப்பட்ட சிறைவாசிகள் காத்திருப்பு அறையை, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சிறைத்துறை அதிகாரிகளுடன் நீதிபதிகள் பங்கேற்றனர். சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்து நீதிபதி டி.ராஜா
பங்கேற்றுள்ள கடைசி நிகழ்ச்சியும் இதுதான். ஆம்! அவர், இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.


அவருக்கு அடுத்த மூத்த நீதிபதியாக உள்ள எஸ். வைத்தியநாதன், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்து குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். விழாவின் ஒரு பகுதியாக புழல் சிறை வளாகத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.


இதனையடுத்து சிறைவாசிகள் மத்தியில் தலைமை நீதிபதி சிறப்புரை ஆற்றினார். ’இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்’என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி சிறைவாசிகள் தங்களை திருத்தி கொள்ள வேண்டும் என அப்போது குறிப்பிட்டார். நிகழ்வின் போது சிறைவாசிகள் இசைக்கருவிகளை இசைத்து தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தி மெய் சிலிர்க்க வைத்தனர். அடுத்ததாக நிகழ்வில் சிறைவாசிகளுக்காக தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை உண்டு
உணவின் தரத்தை நீதிபதிகள் பாராட்டினர். சிறையில் கைதிகள் மேற்கொள்ளும் தையல் உள்ளிட்ட தொழில்கள் குறித்தும் தலைமை நீதிபதி பார்வையிட்டு சிறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.


நிகழ்வில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சுந்தர், ஜி.கே.இளந்திரையன், ஜி.சந்திரசேகரன், சிறை மற்றும்
சீர்திருத்தப் பள்ளிகள் துறையின் தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.) அம்ரேஷ் பூஜாரி, டி.ஐ.ஜி. முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பொன். கோ. முத்து

Exit mobile version