Madras Kural

உள்ளே போகும் போது ‘குன்று’ ! வெளியே வரும் போது ‘மலை’…

தமிழ்சினிமா நடிகை கஸ்தூரி சென்னை மத்திய புழல் சிறையிலிருந்து இன்று மாலை விடுதலையானார்.
2024 நவம்பர் 3 ஆம் தேதி சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்தும், தெலுங்கு பெண்கள் குறித்தும் அவதூறாக நடிகை கஸ்தூரி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து தெலுங்கு அமைப்பினர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தனர்.
அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், அவர் தலைமறைவானார்.

இதனையடுத்து காவல் துறையினர் தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரியை தேடிவந்தனர். கடந்த 17 ஆம் தேதி ஹைதராபாத்தில் வைத்து நடிகை கஸ்தூரியை எழும்பூர் போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் மகளிர் சிறையில் அடைத்தனர்.‌

புழல் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை கஸ்தூரிக்கு எழும்பூர் நீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. எனினும் நடிகை கஸ்தூரிக்கு பிணைப் பத்திரம் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அவர் இன்று வரை சிறையில் இருந்து வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்ட நிலையில், இன்று மாலை சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி.

சிறையில் இருந்து வெளியே வந்த நடிகை கஸ்தூரியை அவரது ஆதரவாளர்கள் பலர் திரண்டு நின்று வரவேற்றனர். அப்போது, “மக்கள் தலைவி கஸ்தூரி வாழ்க!” என்று பிராமண சங்கத்தினர் முழக்கமிட்டனர். தொடர்ந்து சால்வை அணிவித்து வரவேற்றனர். புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த கஸ்தூரி செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலில் தமிழிலும், அடுத்தடுத்து ஆங்கிலம் தெலுங்கு என மூன்று மொழிகளிலும் தம்மை ஆதரித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.
தன்னை குடும்பம் போல் பாதுகாத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார். வழக்கறிஞர்களுக்கும் அரசியல் வித்தியாசம் பார்க்காமல், ஆதரவு தந்த அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார். தன்னை உயிருக்கு உயிராக நேசிக்கும் தமிழக மக்களுக்கும், ஆந்திரா, தெலுங்கானா மக்களுக்கும் மனம் நிறைந்த நன்றி தெரிவிப்பதாக கூறினார். புழல் சிறையில் தன்னை நன்றாக நடத்திய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். சிறு குரலாக இருந்த தன்னை, சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி என கூறினார்.
குன்றாக சிறைக்குள் சென்ற ‘தான்’ தற்போது மலையாக வெளியே வந்துள்ளதாகவும், குன்றாக இருந்த தன்னை மலையாக மாற்றியவர்களுக்கு நன்றி எனவும் கஸ்தூரி தெரிவித்தார்.

P.K.M.

Exit mobile version