Madras Kural

பொங்கல் போச்சு! பரிசு என்னாச்சு?

பொன்னேரி நியாய விலை கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்குவதில் குளறுபடி, குடும்ப அட்டைதாரர்கள் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஊழியர் பற்றாக் குறையால் நிகழ்ந்த அவலம் குறித்து பார்ப்போம்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை முன்னிட்டு அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர் அனைவருக்கும் பொங்கல் தொகுப்புடன் கூடிய ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதற்காக வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியிலோ பெரும்பாலான பகுதிகளில் டோக்கன் விநியோகிக்கப் படவில்லை. நியாயவிலை கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்ட போதிலும் டோக்கன் வந்த பிறகுதான் தங்களுக்கு பொங்கல் தொகுப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து குடும்ப அட்டைதாரர்கள் காத்திருந்தும் வீடு தேடி டோக்கன் வராததால் பொங்கல் தொகுப்பு பெறுவதற்காக தங்கள் பகுதி கடைகளுக்கு சென்றனர். குறிப்பாக அங்குள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக உள்ள நியாய விலை கடை (வரிசை எண் 3-) க்கு டோக்கன் கிடைக்காதவர்கள் சென்று விசாரித்தனர். ஒருமுறை கடை பூட்டப் பட்டிருந்தது, மற்றொருமுறை பகல் 1-மணிக்கு மேல் கடை திறக்கப்படும் என கடை கதவில் எழுதப்பட்டிருந்தது. மீண்டும் ஒருமுறை சிலர் சென்றபோது கடை பூட்டி கிடந்துள்ளது. அருகில் உள்ள கடைக்காரர்களிடம் விசாரித்த போது, ‘இந்த நியாய விலை கடையில் பணிபுரியும் ஊழியரே ஆள் பற்றாக் குறையால் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏழு நியாய விலை கடைகளையும் சேர்த்தே கவனித்து வருகிறார், இதன் காரணமாக வேறு ஒரு கடைக்கு பொங்கல் தொகுப்பு வழங்க அவர் சென்றிருப்பார்” என தெரிவித்தனர்.

பண்டிகை முடிந்து பொங்கல் தொகுப்பு பெறுவதற்காக குடும்ப அட்டைதாரர்கள் மீண்டும் விடாமல் சென்ற போது, “ஜனவரி 14- ஆம் தேதியுடன் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி முடிந்து விட்டது, பொங்கல் தொகுப்பை பெறாதவர்களின் பணம் அரசு கஜானாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப் பட்டுவிட்டது” என்று தெரிவிக்கவே அதிர்ச்சி அடைந்த குடும்ப அட்டைதாரர்கள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது, அதற்கான உரிய விளக்கம் அளிக்கவில்லை.

பொங்கல் தொகுப்பும் ஆயிரம் ரூபாய் பணமும் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த குடும்ப அட்டைதாரர்கள் ஏராளம்.

பொன்னேரி வட்டத்தில் எத்தனை நியாய விலை கடைகள் உள்ளன, அதன் மூலம் எத்தனை குடும்ப அட்டை தாரர்கள் பயனடைந்து வருகின்றனர், பொங்கல் தொகுப்புக்காக அரசு ஒதுக்கிய தொகை எவ்வளவு, அதனை எத்தனை பேர் பெற்றனர், வழங்கப்பட்ட தொகை எவ்வளவு, எத்தனை பேர் வாங்கவில்லை, அரசுக்கு திருப்பி அனுப்பிய பணம் எவ்வளவு என்ற விபரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ளது.

ஒரு நியாய விலை கடையை பராமரிக்க வேண்டிய ஊழியரிடம் ஐந்து முதல் எட்டு நியாய விலை கடைகளை கவனித்து வருகின்றனர். இதனால் அன்றாட கூலி வேலைகளுக்கு சென்று வருபவர்கள் நாள்தோறும் நியாய விலைக் கடை வாசலை நாடி செல்ல முடியாததால் பொங்கல் தொகுப்பை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல நியாய விலை கடைகளுக்கு ஊழியர்கள் நியமிக்கப்படாமல் இருப்பது அரசின் அலட்சியப் போக்கு. அதற்காக குடும்ப அட்டைதாரர்களை வஞ்சிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.

வடசென்னை பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகளில் டோக்கன் கேட்டு இம்சிக்காமல் ரூ.ஆயிரத்தை மக்களுக்கு கொடுத்து விட்டனர். வேட்டி சேலையை மட்டும்தான் நிறைய இடங்களில் கொடுக்கவில்லை. “லோடு இறங்குனா பாத்து குடுத்துக்கலாம்”- என்று உள்ளூர் தாசில்தார்கள் சொன்னதாக நியாயவிலைக்கடை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

P.K.M.

Exit mobile version