Madras Kural

அரசியல்வாதிகள் VS ஜர்னலிஸ்ட்டுகள்|

விசுவல் மீடியா, பிரிண்ட் மீடியாக்களை நடத்தக்கூடிய முதலாளிகள் எல்லோருமே தங்கள் வாழ்நாளில் ஒரு முக்கியமான (நம்பிக்கைத் துரோக) அனுபவத்தை பெற்றிருப்பார்கள்.

எடிட்டர் பொறுப்பில் இருக்கக்கூடிய நபர், ஒரு நாள் திடீரென கூடாரத்தை காலி செய்து தொழிலில் நேரடி போட்டியாளர் அல்லது நேரடி எதிர் கருத்தாளர்கள் முகாமுக்குப் போய் விடுவார். அப்படிப் போகும்போது வெறுங்கையை வீசிக் கொண்டு போக மாட்டார். தனக்கு ஒத்துவரக் கூடிய (அ) ஒத்து ஊதக்கூடிய ஆள்களாகப் பார்த்து, பழைய கூடாரத்திலிருந்து புது கூடாரத்துக்கு பெயர்த்துக் கொண்டு போய்விடுவார். பழைய நிறுவனம் இதனால் மிகவும் திணறிப் போய்விடும்.

இதுநாள்வரை கம்பேனியில் அதிக பங்களிப்பு கொடுத்த மொத்தபேரும் புது கம்பேனிக்கு தாவி விட்டிருப்பதை பழைய கம்பேனி கண்டு பிடித்து நிலைமையை சீர்செய்ய கொஞ்சம் கூடுதலாய் வேலை பார்க்கும். பின்னர் நிலைமை சரிசெய்யப் பட்டுவிடும். எதிர்முகாமில் அடைக்கலமாகி விட்ட பழைய எடிட்டரை ‘போட்டுத்தாக்கும்’ வேலை, இப்போது இன்னும் வேகமாகும்.

ஃபயர் வெப்பனை குறி தவறாமல் விடுவதற்காகவே வேலைக்கு எடுக்கப்பட்ட புதிய ஆட்களுக்கு, பழைய கம்பேனி ஊதியத்தையும், உற்சாகத்தையும், அள்ளி அள்ளிக் கொடுக்கும். ஒரு காலத்தில்
இங்கு குப்பை கொட்டிய மாஜி எடிட்டருக்கு, இப்போது வேலை கொடுத்த முதலாளி,
அவர் சார்ந்த நிறுவனம், அவருடைய அரசியல் நகர்வு என- பல அம்சங்கள் இதன் பின்னர்தான் அட்டாக்கிங் ஏரியாவில் சிக்கும். உருளை ஒளிந்திராத சமோசா போல அப்போதுதான் சகலமும் நொறுங்கத் தொடங்கும். கைகளில் ஃபவர் இருக்கும் சூழ்நிலை இருந்தால் பதில் அட்டாக் உறுதி. இல்லை என்றால் பதுங்கு குழி. இதுதான் யதார்த்தம்.

தமிழ்நாட்டின் ஆட்சிக்கட்டிலில் இடம் பெற்றிருக்கும் மாண்புமிகு ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாட்டு அரசில், இப்படிப்பட்ட ஜம்ப்பிங் ஜனா எடிட்டர்களும், அவர்களுக்கு ஒத்துப்போகும் ஆட்களும் அரசியல்வாதிகள் என்ற அடையாளப் பெயரோடு நிரம்பியுள்ளனர்…

எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, சுயநலமாக தனக்கான ஒரு கூட்டத்தை சேர்த்துக் கொண்டு, திடீரென ஒருநாள் – பழைய சிம்மாசனத்தை எட்டி உதைத்துத் தள்ளிவிட்டு, புதிய அரண்மனை நோக்கி ஓடும் அரசியல்வாதிகளை, இதே ‘பாலிஸி’ யோடு வாழ்நாளை நகர்த்தும், (ஒரு சில) “எடிட்டர் அன் கோ” க்களுடன் பொருத்திப் பார்க்கிறேன்.

எந்த அரசியல்வாதியையும் விமர்சனம் செய்ய இவர்களைப் போன்ற ‘எடிட்டர்’ களுக்கு தார்மீக உரிமை இருக்கிறதா என்ன…

வெட்கக்கேடு!

ந.பா.சேதுராமன்
(02.07.2026)

Exit mobile version