Madras Kural

தேசிய போலீஸ் அகாடமி புதிய இயக்குனர் ஏ.எஸ்.ராஜன் !

ஏ.எஸ்.ராஜன்


ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக, உளவுத்துறையின் சிறப்பு இயக்குநர் பொறுப்பில் இருந்து வந்த ஏ.எஸ். ராஜன் என்ற சேர்மராஜன் நியமிக்கப் பட்டிருக்கிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ.எஸ். ராஜன் பீகார் கேடரைச் சேர்ந்த, 1987- ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் அதிகாரி ஆவார். தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் பிறந்த ராஜன், முதல் தலைமுறை பட்டதாரி. இவரது பெற்றோர் மறைந்த எஸ் கே அய்யாசாமி மற்றும் ஏ. ரத்தினம்மாள் ஆவர்.

பத்தாம் வகுப்பு வரை ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வி, தேனி சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் (பிளஸ் டூ) உயர்நிலை பள்ளிக்கல்வி, அதே தேனி மாவட்ட உத்தமபாளையம், ஹாஜி கருத்த ஹவுதியா கல்லூரியில் இளங்கலை வரலாறு பட்டப்படிப்பு முடித்தபின், மதுரை வெள்ளைச்சாமி கல்லூரியில் முதுகலை வரலாற்றில் பட்டம் பெற்றார். 1987ல் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றதும், பீகார் மாநில கேடரில், ஏ.எஸ்.ராஜனுக்கு பணி ஒதுக்கப்பட்டது. அன்றைய பிரிக்கப்படாத பீகாரின் ராஞ்சியில் பயிற்சி ஐபிஎஸ் (ஏ.எஸ்.பி.,) அதிகாரியாக ஐபிஎஸ் பயணத்தை ராஜன் தொடங்கினார்.

சட்டம் – ஒழுங்கு, குற்றம் மற்றும் தேர்தல் கால சிறப்புப் பணிகளில் நிபுணத்துவம் மிக்க அதிகாரியாக தன்னை செதுக்கிக் கொண்ட ஏ.எஸ்.ராஜன், பீகாரின் கடினமான காவல் மாவட்டங்களாக அறியப்படும் ரோஹ்தாஸ், பாகல்பூர், முசாபர்பூர், ஜெகனாபாத் மற்றும் கிழக்கு சம்பாரண் போன்றவற்றில் பணியாற்றியுள்ளார். பீகாரில் பணியில் இருந்த போதே மத்தியப் (அயலகப்பணி) பணியைத் தேர்ந்தெடுத்த, ஏ.எஸ்.ராஜன், 1999-ஆம் ஆண்டில் புலனாய்வுப் (ஐ.பி.,) பணியகத்தில் சேர்ந்தார். புதுடில்லி, தமிழ்நாடு, குஜராத், லடாக் (ம) உ.பி. போன்ற இடங்களில் பணியாற்றியதோடு லண்டனில் உள்ள இந்திய ஹை கமிஷனின் அரசு முறை ஒருங்கிணைப்பாளராகவும் மூன்றாண்டுகள் பணியாற்றியுள்ளார். தற்போது தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குநர் பொறுப்புக்கு வந்திருக்கிறார் ஏ.எஸ்.ராஜன். ராஜ் – செல்வா

Exit mobile version