Madras Kural

சென்னை போலீஸ் அதிகாரியின் மனிதநேய பணி தொடர்கிறது…

சென்னை வேப்பேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக (ஆர்.ஐ) இருப்பவர் பாண்டிவேலு. காவல் பணியில் மனித நேயத்தை நாளும் வளர்த்துக் கொண்டிருக்கிற வெகுசிலரில் இவரும் ஒருவர் என்றுதான் சொல்ல வேண்டும். சாலைக்கு வந்தோமா, போக்குவரத்து நெரிசலை குறைத்தோமா, வீட்டுக்குப் போனோமா என்றிருப்போர் மத்தியில், ‘ஆதரவற்றோர் நலன்’ பேணும் குனக்குன்றாகவே நாளும் காவல் பணியை செய்து வருகிறார் பாண்டிவேலு.

கடந்த 23.07.2022 அன்று, புரசைவாக்கம் தானா தெருவில் ஒருவர் போக்குவரத்துக்கு இடையூறு செய்வதாக காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் வர, ஸ்பாட்டுக்குப் போனார், இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு. விசாரணையில், ‘இடையூறு’ மனிதர், மனநோயாளி என்று தெரிந்ததும், அவர் குறித்து விசாரித்து, குடும்பத்தாரிடமே அவரை கொண்டு போய் சேர்க்கும் வரை, இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு ஓயவில்லை.
மனநோயாளி என்றறியப்பட்ட அந்த மனிதருக்கு, தலைமுடியை சீர்செய்து, குளிக்க வைத்து, புத்தாடை அணிவித்து, உணவும் அளித்துதான் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார், பாண்டிவேலு.
சரியாய் பத்துநாள்கூட ஆகவில்லை, மீண்டும் அதேபோல் ஒரு மனிதர், இன்ஸ்பெக்டர் பாண்டிவேலுவின் கண்களில் மாட்டிக் கொண்டார்.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் அமைந்துள்ள வேப்பேரி, தந்தை ஈ.வெ.ரா. பெரியார் சாலை – ஈ வி கே சம்பத் சாலை சந்திப்பில்தான் ஒரு மனிதர், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்துள்ளார். ’சாலையில் வரும் வாகனங்கள் மீது குறுக்கே விழுந்து சாகப் போறேன்’ என்றபடி அங்குமிங்கும் ஆட்டம் காட்டியபடி யார் பிடியிலும் சிக்காமல் ஓடிக் கொண்டிருந்தார். லாரிக்கு முன்பாக பாய்ந்தார், போலீஸ் ஜீப் முன்பாக விழுந்தார், இப்படி பல வாகனங்கள் முன்பு விழுந்து எழுந்து மனம்போன போக்கில் அந்த மனிதர் செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு, அந்த மனிதரிடம் பக்குவமாக பேச்சுக் கொடுத்து அவரைப் பிடித்து சாலை ஓரமாக பிடித்து உட்கார வைத்து விசாரிக்க, ’நான் தஞ்சாவூர்’ என்பதைத் தவிர, அவருக்கு எதையும் சொல்லத் தெரியவில்லை. பின்னர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு தகவல் கொடுத்தார். பின்னர் அந்த மனிதரை மீட்ட போலீசார், அவரை அரசினர் கீழ்பாக்கம் மனநல மருத்துமனை மற்றும் காப்பகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். ந.பா.சேதுராமன்

Exit mobile version