Madras Kural

சென்னை|அதிகாலை “என்-கவு*ன்ட்” பின்னணி|

சென்னையில் அதிகாலை வேளையில் குற்றப்பின்னணி கொண்ட ஏ+ பட்டியல் ரவுடி தொப்பைகணேசன், போலீசாரோடு நடந்த துப்பாக்கி மோதலில் இறந்து போனார்.

சுருக்கமான பின்னணி: வட சென்னையில் சேரா- வெள்ளைரவி ஆகிய இரண்டு ரவுடித்தன குழுக்கள் 1990 தொடங்கி 2005 வரை வீரியத்துடன் செயல்பட்டு வந்தன. இந்நிலையில்தான் ஆள்கடத்தல், மிரட்டல், கட்டப்பஞ்சாயத்து புகார்கள் தொடர்பாக வெள்ளை ரவியையும், சேரா என்கிற சே.ராஜேந்திரனையும்; போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். வெள்ளைரவி மட்டும் அப்போது சிக்கிக் கொண்டார். ஆகஸ்ட் 2007-ல் ஓசூர் அடுத்த பாகலூர் பகுதியிலுள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்த வெள்ளைரவி, சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர்.ஜான்கிட் தலைமையிலான குழுவால் வளைக்கப்பட்டு மோதல் ஏற்பட்டதில்; வெள்ளைரவியும், கூட்டாளி என கருதப்படும் குணாவும் இறந்தனர். வெள்ளைரவிக்கு ஏற்பட்ட முடிவால் சென்னையை காலிசெய்த சேரா, தென் மாவட்டம் பக்கம் ஒதுங்கிக் கொண்டார். இருபது ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னே சென்னையில் தென்பட்ட சேராவை 2025- ல் போலீசார் கைது செய்து சிறைக்கு அனுப்பினர். சேரா களத்தில் இல்லை, வெள்ளைரவி உயிரோடு இல்லை என்றாலும் “கேங்க் -வார்” முற்றுப்பெறவில்லை. வெள்ளை ரவியின் பாலோயராக பழனி என்ற நபரும், சேராவின் பாலோயராகவும், சேராவின் மகன் கதிரவனின் நண்பராகவும், தொப்பை கணேசன் என்ற நபரும் இருவேறு குழுக்களாக எதிர் எதிரே முறுக்கிக் கொண்டு நின்றனர். பழனிக்கு பயத்தைக்காட்ட பழனியின் சித்தப்பாவும், திமுகவின் வட்டக்கழகச் செயலாளருமான இடிமுரசு இளங்கோவை, பெரம்பூர் பி.பி. சாலையில் வைத்து கொ*லை செய்து தொப்பை கணேசனும், கதிரவனும் கொ*லை கணக்கை முதலில் தொடங்குகின்றனர். பழனி தரப்பு பதிலடியாக முத்துபாட்ஷா என்பவரை முடித்து கணக்கை நேர்செய்கிறது. இன்னொரு கோல் போட்டால்தான் நாம் வின்னராக முடியும் என்பதுபோல கதிரவன்தரப்பு, பழனியின் ஆளான திவாகர் கணக்கை முடிக்கிறது. ஆட்டத்தில் சமன்நிலை பரவாயில்லை, கணக்கு குறைந்தால் வசூல் குறையுமோ என்னவோ பழனிதரப்பு; ஜப்பான் சரவணன் கணக்கை முடிக்கிறது. ஜப்பானுக்கும் சரவணனுக்கும் என்ன தொடர்போ எனக்குத் தெரியவில்லை. அதற்கடுத்து நடந்ததே வேறு. பழனியின் கதையையே முடித்து வைத்து, தொப்பை கணேசன்- கதிரவன் குழுவினர்; எதிர்த்து நிற்க, இனி ஆளேஇல்லை என்று நெஞ்சை நிமிர்த்துகிறது. அந்த நினைப்பும் சில நாள்களில் பொய்த்துப் போய் ‘சூழ்ச்சி’ சுரேஷ் என்ற புது கதாபாத்திரம் உள்ளே வருகிறது. கதை முடிக்கப்பட்ட பழனியின் தம்பிதான் சூழ்ச்சி. இந்தப் பெயர் நான் வைத்தது அல்ல, போலீஸ் ரெகார்ட் சொல்வதுதான். அண்ணன் பழனியின் எதிரணி கதையை முடிப்பதற்கு முன்னே, அவர்களுக்காக பெயில் பெட்டிசன் போடும் அட்வகேட் ராஜேஷை முடித்து முதல் டோக்கனை போடுவோம் என்று பழனியின் தம்பியான சூழ்ச்சி சுரேஷ் திட்டமிட்டு அதை சிறப்பாக முடித்தே விடுகிறார். அடுத்ததாக தொப்பை கணேசனுக்கும், கதிரவனுக்கும் பாலமாக, மூளையாக செயல்பட்டு வந்த சாலமோன் கதையையும் சூழ்ச்சி சுரேஷ் குழு முடிக்கிறது. இது எல்லாமே 2023 – வரை சிறிதாய் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு இடைவெளி விட்டு விட்டு நடந்தபடிதான் இருந்தது.

இப்படிப்பட்ட சூழலில்தான் தொப்பை கணேசன் கதை இன்று காலை முடிந்துள்ளது.

ரவுடிகள், தாதாக்கள் வீடு புகுந்து கொள்ளையடிப்பது அரிதானதுதான். அப்படியொரு சம்பவத்தை ஐந்து நபர்களோடு முகமூடி அணிந்துபோய், ஜனவரி 30, 2026- அன்று தொப்பை கணேசன் செய்திருக்கிறார்.12 சவரன் நகை, 25 லட்சம் ரொக்கம், வைரக் காதணி என அதில் சுருட்டியிருக்கிறார். அது தொடர்பான வழக்கில் மாதக் கணக்கில் தேடிய போலீசாரிடம் இன்று (16.03.2026) அதிகாலை சிக்கி மொத்தமாக முடிந்திருக்கிறார்.

ந.பா.சேதுராமன்

Exit mobile version