போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க புதிய திட்டத்தை சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் முன்னெடுத்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் ‘அம்மா மாளிகை’ யில் பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வக கருத்தரங்கை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தொடங்கி வைக்க, நிகழ்வில் பங்கேற்ற பின் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நிருபர்கள் மத்தியில் ஆற்றிய உரை: சென்னையில் குற்றச் சம்பவம் நடைபெறுவது புதிதல்ல. ஆனால் அதனை தடுக்க அதற்கேற்ப உரிய நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 25 % குற்றங்கள் குறைவாகவே இருந்துள்ளது. பள்ளி கல்லூரி வளாகங்கள் அமைந்திருக்கும் பகுதிகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர். போதை பொருளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப் படுகிறது. விற்பனை செய்பவர் மட்டுமல்லாது போதைப் பொருள் புழக்கத்துக்கான மூலகாரணமாக இருக்கும் நபர்கள் வரையிலும் பாரபட்சம் இல்லாது வழக்குப் பதிந்து கைது செய்யப்படுகின்றனர். போதை பொருளுக்கு எதிராக 240 பள்ளிகளில் விழிப்புணர்வு சேவை மையம் ஏற்படுத்தப்பட்டு இயங்கி வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருளுக்கு எதிரான தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் உள்ள இடங்கள், அவற்றுக்கான வழித்தடங்கள் ஆகியன போலீசாரால் குறிப்பிட்ட நேரங்களில் ரோந்துப்பணி மூலம் கண்காணிக்கப் படுகிறது. புறநகர் ரயில்களில் மக்கள் பாதுகாப்புக்காக போலீசார் பயணிப்பது போல, தேவைப்பட்டால் சென்னை மாநகர பேருந்துகளிலும் இரவு நேரங்களில் காவலர்கள் பயணம் செய்யும் திட்டம் நடைமுறைப் படுத்தப்படும்” – என்றார்.
– விகடகவி எஸ். கந்தசாமி.