சென்னை மயிலாப்பூர் போலீஸ் லிமிட்டில் செல்போனை மாமூலாக வாங்கும் போலீசார் பற்றிய செய்தித் தொகுப்புதான் இது.
செல்போன் மாமூலுக்கும் அரசு டாஸ்மாக் மதுபானக்கடைக்கும் நடுவில் ஓடுகிறது, ஒற்றுமையான ரேகை ஒன்று.
இங்கே -அதாவது டாஸ்மாக்கில் மது கிடைக்கும். ‘பார்’ கிடைக்காது. தமிழ்நாடு முழுவதும் அப்படி அல்ல, சிலஇடங்களில் மட்டுமே ‘பார்’ இல்லை என்று சொல்கிறார்கள். சரி போகட்டும். இங்கே பூ மற்றும் காய்கறி வியாபாரம் செய்யும் பெண்கள், மதுபானக் கடைகளுக்கு அருகே பிளாஸ்டிக் டம்ளர்கள், வாட்டர் பாட்டில்கள் அதிகமாய் விற்பனை ஆகிறது என்பதால் அவற்றை வாங்கி விற்பனை செய்கிறார்கள். எல்லோருமே அன்றாடங் காய்ச்சிதான். பிளாஸ்டிக் பாட்டில் விற்கத் தடை என்றால் அது சாலையோர வியாபார ஏழைகளுக்கு மட்டுமே பொருந்துமா, டாஸ்மாக் கடைகளில் விற்றால் அங்கே தடை என்பது கிடையாதா என்பதெல்லாம் தனிக்கேள்விகள்.
சாலையில் வாட்டர் பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்களை விற்கும் பெண்களிடம் அதை பறித்துக் கொண்டு போவதோடு கையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொண்டு, “உன்னை ரிமாண்ட் பண்ணாதான் அடங்குவே” என்று எச்சரித்து மயிலாப்பூர் ஸ்டேசனுக்கு வரச் சொல்வதுதான் இதுநாள் வரை நடந்து வந்தது.
இப்போது அது டெவலப் ஆகியுள்ளது. சாலையோர வாட்டர் பாட்டில் டம்ளர் விற்பனையால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு விட்டதாக கன்ட்ரோல் ரூம் தகவலின் பேரில் (?) வந்ததாக கைம்பெண்ணான செல்வி என்பவரை மிரட்டி அவருடைய செல்போனை பறித்துக் கொண்டு ‘ஸ்டேசனில் வந்து என்னைப் பாரு’ என்று சொல்லிப் போயிருக்கிறார் ரவி என்ற காக்கி. ‘அய்யா உங்களை எப்படி கேக்கறது அங்க வந்து’ என்று வெள்ளேந்தியாக செல்வி கேட்க, “சப் இன்ஸ்பெக்டர் ரவி கூப்பிட்டாருன்னு சொல்லு” என்று தம்மை அடையாளப் படுத்தி விட்டுப் போயிருக்கிறார் அந்தக் காக்கி.
“வரும் போது கையில மூணாயிரம் ரூபாய் கொண்டாந்து குடுத்துட்டு செல்போனை வாங்கிட்டுப் போ” என்று அப்போது சொல்லி விட்டுப் போயிருக்கிறார் ரவி. கடந்த மூன்று நாட்களாக ஆயிரம், ஆயிரத்து ஐநூறு என்று பழம்- பூ விற்று கிடைத்த தொகையோடு மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேசனுக்கு நடையாய் நடக்கிறார் செல்வி. “பைசா குறைந்தாலும் செல்போன் உன் கைக்கு வராது, நீ செய்திருப்பது சாதாரண குற்றம் இல்லை. ரிமாண்ட் பண்ணினா பெயிலே கிடைக்காது” என்றிருக்கிறார் ரவி. கைம்பெண் செல்வியின் உறவினர் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார் போலிருக்கிறது. “சார் ஒரு சின்ன உதவி, இந்த நம்பரைக் கொஞ்சம் போட்டுக் குடுக்கறீங்களா?” என்று செல்வி, நம்மிடம் உதவி கேட்ட போதுதான் செல்போன் மாமூல் போலீஸ் கதை தெரியவந்தது. இதெல்லாம் ஒரு பொழப்பு…
இதே மயிலாப்பூர் ஸ்டேசனில் மகேந்திரன் என்ற ஒரு கேரக்டர் போன வருடம் வரை இதே போன்ற ஆட்டத்தில் இருந்தது. நடைபாதை வியாபாரிகளின் தராசு மற்றும் பம்பு ஸ்டவ் போன்றன தவிர மேற்கொண்டு பாத்து ரூபாய்க்கு கூட ஆசைப்படாத ஒரு கேரக்டர் அந்த கேரக்டர். இப்ப எங்க இருக்காரோ, அவர் டியூட்டி பாக்குற ஏரியா மக்கள் எப்படி இருக்காங்களோ…
உயரதிகாரிகள் குறிப்பாய் உளவு அதிகாரிகள் கவனத்துக்கு இதுபோன்ற விஷயங்களை முன்பெல்லாம் அடிக்கடி கொண்டு செல்வேன். காதும் காதும் வைத்தாற்போல் நடவடிக்கை இருக்கும். பொதுவெளியில் போலீசின் நற்பெயர் டேமேஜ் ஆகாது.
இப்போதெல்லாம் அவை கனாக்காலம் போல் இருக்கிறது. உளவு அதிகாரிகள் ஆகட்டும், உள்ளூர் அதிகாரிகள் ஆகட்டும், நெருக்க வட்டத்தில் இருக்கிற நபர்களின் போனை மட்டுமே எடுத்தால் நாம் என்னதான் செய்வது? இவர்கள் நம்முடைய செல்போன் அழைப்பை எடுப்பதற்காகவே நாம் ‘நெருக்கம்’ ஏற்படுத்திக் கொள்வது சரியாய் இருக்குமா?
ந.பா.சேதுராமன்