சென்னை கொடுங்கையூர் போலீசாரின் பிடியில் இருந்த விசாரணை கைதி இறந்த விவகாரம் ஒரு மணி நேரத்திலேயே சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப் பட்டுள்ளது. இறந்து போன
ராஜசேகர் என்ற அப்பு மீது ஏராளமான திருட்டு வழக்குகள் இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் குற்ற வழக்கு தொடர்பாக அப்புவை விசாரிக்க கொடுங்கையூர் போலீசார் அழைத்து வந்து தங்கள் பொறுப்பில் வைத்துள்ளனர். அப்போது திடீரென அப்புவுக்கு உடல் நிலை பாதிக்கப் பட்டுள்ளது. உடனடியாக கொடுங்கையூர் போலீசார், அப்பு என்ற ராஜசேகரை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்களோ அப்புவை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி பரிந்துரை செய்துள்ளனர். போலீசார் அங்கிருந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அப்பு இறந்துவிட்டதை ஸ்டான்லி அரசு மருத்துவர்கள் உறுதி செய்தனர். தற்போது அப்பு (எ) ராஜசேகர் உடல், உடற்கூராய்வுக்காக அதே ஸ்டான்லியில் வைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் அலமாதி, முந்திரி தோப்பு, பேட்டைகாரன் பாளையத்தைச் சேர்ந்த அப்பு மீது சோழவரம் காவல் நிலையத்தில் மட்டுமே எட்டு வழக்குகள் உள்ளன. வியாசர்பாடி போலீஸ் ஸ்டேசனில் 2, எம்.கே.பி. நகர் போலீஸ் ஸ்டேசனில் 3, மணலி புதுநகர் போலீஸ் ஸ்டேசனில் 2, ஆவடி டேங்க் பேக்டரி ஸ்டேசனில் 4 மற்றும் திருநின்றவூர் ஸ்டேசனில் 4 வழக்குகள் என, அப்பு மீது 23 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணைக்காக ராஜசேகரை கொடுங்கையூர் போலீசார் நேற்று முன்தினமே (சனிக்கிழமை) அழைத்து போனதாக கூறப்படுகிறது. விசாரணை கைதி இறப்பையடுத்து வடக்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் டி.எஸ். அன்பு, இணை கமிஷனர் ராஜேஸ்வரி, புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் ஆகியோர் கொடுங்கையூர் ஸ்டேசனுக்கு நேரில் விசாரணை நடத்தினர். வருகின்றனர். 19.04.2022 அன்று தலைமைச் செயலக காலனி போலீசாரின் விசாரணையில் கைதி விக்னேஷ் இறந்து போனார். சப்- இன்ஸ்பெக்டர் உள்பட ஆறு போலீசார் இந்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டது. ஏழு நாள் கழித்து சிபிசிஐடி போலீசாரிடம் விவகாரம் சென்ற பின்னரே அனைத்தும் நடந்தது. ராஜசேகர் என்ற அப்பு மரணத்தில் இறந்த ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே விவகாரம் சிபிசிஐடி போலீஸ் பொறுப்புக்கு போய்விட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன், தலைமை காவலர்கள் ஜெயசேகர், மணிவண்ணன், மற்றும் முதல்நிலை காவலர் சத்தியமூர்த்தி ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம்(சஸ்பெண்ட்) செய்யப் பட்டுள்ளனர். விகடகவி எஸ். கந்தசாமி