Madras Kural

கள்ளக்குறிச்சி கலவரம் – யார் செய்த குற்றம்?

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் ‘சக்தி’ மெட்ரிக் மேனிலைப் பள்ளி 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதியின் மரணம், ஜூலை 13ம்தேதி நடந்துள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீமதி, பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். சம்பவ நாளன்று அதிகாலை ஐந்து மணியளவில் விடுதி வளாகத்தில் ரத்த காயங்களுடன் ஸ்ரீமதி கிடந்ததைப் பார்த்தவர்கள் சிகிச்சைக்காக தூக்கிக் கொண்டு போயுள்ளனர். பலனில்லை. முன்னரே இறந்ததை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். மூன்றுநாளாக சாம்பலுக்குள் புதைந்திருக்கும் நெருப்புபோல விஷயத்தை அப்படியே வைத்திருந்தவர்கள்தான் இன்றைய கலவரத்தின் சூத்திரதாரிகள். ‘வெளி நபர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர், ஆட்களை சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுப்போம்’ – என்பதெல்லாம் எதையோ விட்டுவிட்டு எதையோ பிடிக்க முயல்வது போன்ற கதைதான். கலவரங்கள், தன்னெழுச்சி போராட்டங்கள், தீ வைப்புகள், பொது சொத்துகளை சூறையாடுதல், பொதுமக்களோடு போலீசாரும் அடிபடுதல் போன்றவை இன்றுதான் நாட்டிலேயே முதல்முறை நடக்கிறதா என்ன ? எல்லா கலவரத்துக்கும் பின்னணியில் இருப்பது வெறும் ஒன் லைன் ஸ்டோரிதானே; அந்த ‘ஒன் லைன் ‘ தானே கலவரத்தின் விதை? விதை எதுவென்பதுதான் ஜூலை 15ஆம் தேதியே ஊருலகம் மொத்தத்துக்கும் தெரிந்துள்ளதே! விதை குறித்து தெரியவே தெரியாது என்போர் வாசிக்கவும்: பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்த மாணவி, அதிகாலை வேளையில் காயங்களுடன் செத்துக்கிடக்கிறார். மருத்துவமனைக்கு மாணவியை கொண்டு போகிறார்கள். மாணவி முன்னரே இறந்ததை மருத்துவம் உறுதி செய்கிறது. மாணவியின் குடும்பத்துக்கும் போலீசுக்கும் எப்போது தகவல் கொடுக்கப்பட்டது? மாணவியின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தரப்பின் பதிலைக் கேட்டு சமாதான நிலைக்கு வந்தார்களா? பள்ளி நிர்வாகத்திடம் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையின் பின் விளைவை யாராவது முன்னரே உணர்ந்தார்களா- அது குறித்து மாநில அரசு நிர்வாகத்துக்கு ‘நோட்’ போடப்பட்டதா ?நியாயம் கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று மாணவியின் பெற்றோர் உறுதி காட்டிய தகவலை, மாநில உளவுத்துறை; அரசின் உள்துறைக்கோ தலைமைச் செயலர் கவனத்துக்கோ கொண்டு போனதா? ‘விவகாரம் பெரிதாகிக் கொண்டே போகும் போலிருக்கிறது, கூடுதல் போலீஸ் ஃபவரை கள்ளக்குறிச்சி பக்கம் திருப்புங்கள்’ என்று மாவட்ட போலீஸ் டிஐஜி எம். பாண்டியனுக்கோ, மாவட்ட போலீஸ் எஸ்.பி. செல்வக்குமாருக்கோ எச்சரிக்கையாக தெரிவிக்கப்பட்டதா? போலீசாரோடு போலீசாராக டிஐஜியும் மாவட்ட போலீஸ் எஸ்.பி.யும் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெறும் நிலைமையை வலுவில் உருவாக்கிக் கொடுத்தது யார்? பொதுமக்கள் பலரும் காயமடைந்துள்ளனர். பள்ளியின் பேருந்துகளோடு போலீஸ் பேருந்துகளும் எரிக்கப்பட்டு இருப்பதற்கு முதல்கோணல் தானே முழுமையான காரணம்? மாவட்ட அளவில் (S.B) எஸ்.பி. இன்ஸ்பெக்டர் ஒருவர் எஸ்.பி. ஆபீசில் இருப்பார், அது போக டிஐஜி ஆபீசுக்கு இரண்டு (S.B) இன்ஸ்பெக்டர்கள் இருப்பார்கள் – இருக்க வேண்டும் – தவிர, ஒவ்வொரு போலீஸ் ஸ்டேசனுக்கும் ஒரு ஒற்றுப்பிரிவு (I.S) போலீஸ் இருப்பார் ! இதில் ஒருவர்கூட எதிர்வரக் கூடிய விளைவுகளை முன்னரே கணித்து மாநில முதலமைச்சர் சிறப்புப் பிரிவுக்கோ, மாவட்ட போலீஸ் எஸ்.பி.க்கோ, டிஐஜிக்கோ தகவல் கொடுக்கவில்லை என்றால் அதற்குப் பெயர்; ‘சோற்றில் பூசணிக்காய் மறைத்தல்’ தானே? இப்படிப்பட்ட உயர்தரமான அதிகாரிகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஒரு மாநகராட்சியைக் கூட சிறப்பாக வழி நடத்த முடியாது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே… ந.பா.சேதுராமன்

Exit mobile version