Madras Kural

கொள்ளையனை பிடிக்க 5 கி.மீ சிசிடிவியை ஆராய்ந்த போலீஸ் !

கொள்ளையனை பிடிக்க 5 கி.மீ தூரம் சிசிடிவியை ஆராய்ந்த போலீஸ், அதற்கு உறுதுணையாக இருந்து பொறுமை காத்த பொதுமக்களை பாராட்டிக் கொண்டிருக்கிறது. சென்னை வேளச்சேரி போலீசார் தான் அப்படி பாராட்டிக் கொண்டிருக்கிறவர்கள்…


சென்னை வேளச்சேரி, எம்ஜிஆர் நகர் 2வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் ரமேஷ். இவர் மனைவி அலமேலு. கடந்த 7-ஆம் தேதி, அலமேலு வீட்டில் தனியாக இருந்த பொழுது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், அலமேலுவின் கழுத்தை அறுத்து விட்டு, வீட்டில் இருந்த பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தலைமறைவானார். இது குறித்து வேளச்சேரி போலீசார், வழக்குப் பதிந்து, கொள்ளை ஆசாமியை தேடி வந்தனர். சம்பவத்தைப் பார்த்த நபர்கள் யாரும் இல்லாததால், போலீசார் அந்தப் பகுதி சிசிடிவி கேமராக்களை பெரிதும் நம்பினர்.
சம்பவம் நடந்த வீட்டிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்துக்கு சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். போலீசாரின் இந்த ஆய்வுப்பணிக்கு, அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்.
சிசிடிவியை ஆய்வு செய்யவும், நகல் எடுக்கவும் பொதுமக்கள் காட்டிய ஆர்வமும், துணை நின்ற வேகமும் போலீசாருக்கு பேருதவியாக அமைந்தது. சிக்கிக் கொண்டார், குற்றவாளி. அதே வேளச்சேரி, கருணாம்பிகை நகரைச் சேர்ந்த தட்சிணாமூர்த்திதான் கொடூர கொள்ளையன் என்பதை சிசிடிவி கேமரா தெளிவாகவே அடையாளம் சொன்னது. தட்சிணாமூர்த்தியை போலீசார் பிடித்து கைது செய்தனர். சொத்துகளை பறி கொடுத்ததோடு, கழுத்து அறுபட்டு மருத்துவ சிகிச்சையில் இருக்கும் அலமேலுவுக்கு கொஞ்சம் மன நிம்மதியை இந்தத் தகவல் கொடுத்திருக்கும் என்று நம்பலாம்.
பொதுமக்கள் மட்டும் முகஞ்சுளிக்காமல் உதவியிராவிட்டால், இந்த வழக்கு இத்தனை விரைவில் முடிவுக்கு வந்திருக்காது என்பதை உணர்ந்த வேளச்சேரி போலீசார், பொதுமக்களை பாராட்டு மழையில் குளிர வைத்துக் கொண்டிருக்கிறார்கள் !

-விகடகவி எஸ். கந்தசாமி –

Exit mobile version