சென்னை பெரம்பூர் ரயில் நிலைய எல்லையில் போதைப்பொருள் கடத்தும் கும்பல் வருகை குறித்த ரகசிய தகவல் போலீசாருக்குக் கிடைத்தது. தகவல் அடிப்படையில் போலீசார் அந்தப் பகுதியை தீவிர கண்காணிப்பில் கொண்டு வந்தனர். சென்னை வடக்கு போலீஸ் இணை கமிஷனர் ஆர்.வி. ரம்யாபாரதி, நேரடி களத்தில் இறங்கினார்.
அதே வேளையில் போதைப்பொருள் கடத்தல் கும்பல், ஆந்திராவின் நெல்லூரில் இருந்து சங்கமித்ரா ரயில் மூலம் சென்னைக்குள் நுழையப் போவதை சிறப்பு நுண்ணறிவுப் (ஐ.பி.,) பிரிவு போலீசார் உறுதி செய்து விட்டு அவர்களை பின் தொடர்ந்தனர். ஐ.பி., டிஎஸ்பி முகமது உசேன் தலைமையில் நெல்லூர் டூ சென்னை பெரம்பூர்வரை இரண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பின் தொடர்ந்தபடி இருந்தனர். அதேபோல் பல முக்கிய வழக்குகளை கையாண்ட கூடுதல் போலீஸ் துணை கமிஷனர் (ஹைகோர்ட்) லட்சுமணன், இதே வழக்கு தொடர்பாக கடத்தல் கும்பலை கண்காணித்தபடி வந்து கொண்டிருந்தார்.
போதைப்பொருள் கடத்தல் கும்பல் பெரம்பூர் ரயில்நிலையம் வந்ததும் அங்கிருந்து வெளியேறி ஆட்டோவை பிடித்து ஜமாலியாவுக்கு போக முயன்றனர். ஆனால் அது நிறைவேற வில்லை. அங்கே தயாராய் நின்றிருந்த சென்னை பெருநகர போலீசார், அவர்களை மடக்கினர். புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையில் உதவி கமிஷனர்கள் செம்பேடு பாபு, அழகேசன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஐயப்பன், முத்துச் செல்வன் மற்றும் தனிப்படை போலீசார் அவர்களை மொத்தமாகப் விசாரணைக்குள் கொண்டு வந்தனர்.
பீகார் உபேந்தர்குமார், நேபாலை சேர்ந்த ராம்சந்த்ரா மற்றும் முஸ்கான் ஜா என்ற பெண், இது தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.
குற்றவாளிகளுக்கு உதவியதாக ஓட்டேரி ஆட்டோ டிரைவர் சீயோன்ராஜ் என்பவரும் கைதானார்.
போதை பொருட்களை தயார் செய்யும் மூலப்பொருளான சாரஸ் என்கிற போதைப் பொருள் மற்றும் கஞ்சா ஆயில் ஆகிய ₹ 1கோடி மதிப்பு பொருள்கள் பறிமுதல் செய்யப் பட்டது.
பொன். கோ. முத்து