
“மனமிருந்தால் பறவை கூட்டில்
மான்கள் வாழலாம். வழி இருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம்…
துணிந்துவிட்டால் தலையில் எந்த
சுமையும் தாங்கலாம், குணம்-குணம்
அது கோவில் ஆகலாம்” – என்றெழுதிய கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாளில் இணைந்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துகள்.
ஒரு வருடத்துக்கு முன்பு நடந்திருந்தால் அரசியலிலும் குடும்பத்திலும் மகிழ்ச்சி இன்னும் கூடியிருக்கும். கடந்தகால கசப்பு காற்றோடு கரையட்டும், மறையட்டும்.
எதிரெதிர் கொள்கையாளர்களே அரசியலில் இரண்டறக்கலந்து எல்லாம் மறந்து கலர் கலராய் கேக் வெட்டுகிறார்கள்.
பேரன் பேத்தி என சின்னவரும் கொள்ளுப் பேரன் பேத்திகள் என பெரியவரும் தைலாபுரம் தோட்டத்தில் எப்போதும் போல வளைய வாருங்கள். பேசுங்கள். கைகோத்து நடந்து பாருங்கள். குடும்ப உறவுகளை தூர வீசிவிட்டு உண்ணும் யாதொன்றும் சுவைக்காது என்பதை உணருங்கள்.
நீங்கள் மட்டுமல்ல எந்த பேராளர் குடும்ப உறவுகளாயிருப்பினும் எதிரெதிரே நின்று கசந்துருகும் காட்சி நற்காட்சியாய் இருக்காது. பலருக்கு வழிகாட்டியாய் இருப்போரும் வாழவைப்போரும் முன்னுதாரண மாமணியாய் நானிலத்தில் வாழ்ந்திருப்பதே நன்று.
உறவுகள் பிரிந்து போவதற்கும் மீண்டும் இணைந்து உறவாடுவதற்கும் மனித மூளையின் சிறுசிறு சுரப்பிகளே காரணம்.
சிறுகோபம் பெரிதாகும். பெருநினைவுகள் இனிதாகும். பெருநினைவுகளே எப்போதும் மனித குலத்துக்குத் தேவை. போர்க்கால விளைவுகள் நாட்டையும் வீட்டையும் சேர்ந்தே கெடுக்கும்.
வருங்காலம் இனிதாக, சின்னவருக்கும் பெரியவருக்கும் வாழ்த்துகள்.
ந.பா.சேதுராமன்
(24.06.2026)