Madras Kural

பேரூராட்சியில் குடியேறுவோம் ! நரிக்குறவர்கள் எச்சரிக்கை…

https://madraskural.com/wp-content/uploads/2022/04/WhatsApp-Video-2022-04-27-at-12.14.18-PM.mp4

குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கோரி, பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட நரிக்குறவர்கள், போராட்டத்தில் குதித்தனர். எங்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் பேரூராட்சி அலுவலகத்தில் குடியேறுவோம் என்றும் அப்போது எச்சரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில், மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 11 வது வார்டில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக 60 நரிக்குறவர் குடும்பத்தினர் குறிப்பிட்ட இடத்தில் கூடாரம் அமைத்து வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவை வழங்கப் பட்டுள்ளன. வீட்டு மனைப் பட்டா மட்டும் இவர்களுக்கு வழங்கப்படாததால் தேவையான குடிநீர், பொது கழிப்பிட வசதி, சாலைவசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம், நரிக்குறவர்களின் கோரிக்கையை இதுநாள் வரையிலும் ஏற்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட நரிக்குறவர்கள் இதுகுறித்து வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பல முறை மனுக்கள் அளித்து வந்தனர். ஒரு கட்டத்தில் மனுக்கள் மீது விசாரணை நடத்தி அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்து பரிசீலனை செய்யுமாறு மாவட்ட நிர்வாகம்,பேரூராட்சி அதிகாரிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டதாக தெரிகிறது. பேரூராட்சி நிர்வாகம் தரப்போ, நரிக்குறவர்கள் கோரும் இடம், தனி நபர் ஒருவருக்கு சொந்தமானது என கூறி அடிப்படை வசதிகளை செய்து தர மறுத்து வருகிறது. இதுகுறித்து பாமக வார்டு உறுப்பினர் ஜோதி இளஞ்செல்வன், கடந்த மாதம் நடைபெற்ற பேரூராட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில், பாதிக்கப்பட்ட நரிக்குறவர் மக்களுக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தருமாறு கோரிக்கை விடுத்தார். அதன் பின்பும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இதுகுறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று பிரச்சினைக்கு உரிய தீர்வு காண்பதாக அளித்த உறுதியை நரிக்குறவர்கள் ஏற்றுக் கொண்டனர். தங்கள் கோரிக்கை நிறைவேற்றப் படாவிட்டால் அடுத்த கட்டமாக பேரூராட்சி அலுவலகத்திற்குள் குடியேறும் போராட்டம் நடத்தப் போவதாகவும் நரிக்குறவ சமூக மக்கள் எச்சரித்தனர்.

– தேனீஸ்வரன் –

Exit mobile version