Madras Kural

சென்னை அருகே ஒரு தேவதானம்! கருடன் வலம் வரும் கோயில்…

கருடன் வலம் வரும் திருக்கோயில் !
அடியார்க்கு அருளிய அரங்கநாதன் !
அற்புதங்கள் நிகழும் அதிசயம்.

வடதேவதானம் கோயில் வீடியோ

பூலோக வைகுண்டம் என்று பெரியோர்கள் உவந்து கொண்டாடும்
திருவரங்கப் பெருமானை ஆழ்வார்கள் பலரும் பலவிதமாகத் தரிசித்து மகிழ்ந்து இருக்கிறார்கள். ஆனாலும், பெருமானை கொண்டாடிய
ஆண்டாள் நாச்சியாரின் தரிசனம் அற்புதம்!

தினமும் காலையில் கருடன் ஒன்று இத்திருத்தலத்தின் மேல் மூன்று முறை வலம் வந்து அங்கு உள்ள ஆலமரத்தின் மேல் சிறிது நேரம் அமர்ந்து செல்வதை ஊர்மக்கள் பலரும் நேரில்
பார்த்துள்ளனர். கருட ஆழ்வாரே அரங்கனை சுற்றிவந்து, ‌வணங்குவதாக கருதுகிறார்கள் .இங்குள்ள அடியார்கள்.

பெருமான் அவ்வப்போது தன் பக்தர்களின் கனவில் தோன்றி அவர்களுக்கு அருள் புரியும் அற்புதமும் இங்கு நிகழ்கிறது.

இத்திருகோவிலில் ஏழு சனிக்கிழமைகள் தொடர்ந்து, நெய் தீபம் ஏற்றி அரங்கனை வணங்கி வந்தால், நினைத்த காரியம் கை கூடுவதை கண்கூடாக பார்க்கலாம் என்பது பக்தர்களின் கருத்தாக சாட்சியமாக இருக்கிறது !

திருமணம், குழந்தை பாக்கியம், வேலை, தொழில் விருத்தி, செல்வப்பெருக்கு, ஆரோக்கியம், கடன் தொல்லை நீங்குதல் என மனிதகுலத்துக்கு தேவையான அத்தனை நல்லவைகளையும் இந்த தேவதான அரங்கன் – எம்பெருமான் அரங்கநாதன் அருளுகிறார்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இன்றைய பொன்னேரியை உள்ளடக்கிய இந்தப்பகுதியை ஆண்ட சாளுக்கிய மன்னன் ஸ்ரீரங்கம் ரங்க நாதன் மீது அளவற்ற பக்தி கொண்டவன். நேரம் கைகூடும் போதெல்லாம், ஸ்ரீரங்கம் சென்று ரங்க நாதனை தரிசிப்பதை தனது பிறவி பயன் என எண்ணி பெருமானை வழிபட்டு வந்தான், சாளுக்கிய மன்னன்.

காலப்போக்கில் மன்னனின் உடல்நிலை இடம் கொடுக்காததால், ஸ்ரீரங்கம் போன்று தனது நிலப் பரப்பிலேயே அதாவது பொன்னேரியிலேயே ஸ்ரீரங்கம் ரங்கநாதனை எழுந்தருள செய்து கட்டியதுதான் இந்த திருக்கோயில், கண்ணையும், கருத்தையும் ஒருங்கே கவரும் அரங்கன் வீற்றிருக்கும் இந்தத் திருக்கோயில், சாளுக்கிய மன்னன் பார்த்துப் பார்த்துக் கட்டியது.

சென்னை புறநகர் ரயில் நிலையத்திலிருந்து, கும்மிடிப்பூண்டி மார்க்கமாக செல்லும் தடத்தில், அனுப்பம்பட்டு என்ற இடத்தில் இறங்கினால், அங்கிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட தேவதானம் கிராமத்தில் உள்ள இக்கோயிலை அடையலாம்.
சென்னை, பேசின் பிரிட்ஜ் ரயில் மார்க்கம் அல்லது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து மூலமும் இக்கோயிலுக்கு சென்று வரலாம்.

அழகான மூர்த்தி ; அபூர்வமான ஆலயம்!
தேவதானத்தை தரிசித்தால் இந்த உண்மை புலப்படும்.

பொன்.கோ.முத்து

Exit mobile version