
சென்னை பெரம்பூர் பேருந்து நிலைய நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது திடீரென சாலையின் நடுவே விரிசல் ஏற்பட்டு சாலை குலுங்கியது. அடுத்ததாக ஆறடி நீளத்திற்கு பயங்கர சத்தத்துடன் அங்கே பெரிய பள்ளம் ஏற்பட்டது. பள்ளத்தின் உள்ளேயிருந்து தண்ணீர் பொங்கியது. அவ்வழியாக வந்து கொண்டிருந்த வாகன ஓட்டிகள் நில அதிர்வு ஏற்பட்டு விட்டதோ என இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஏற்கனவே அப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளமானது, போதிய அளவில் மண் கொட்டி மூடப்படாமல் இருந்துள்ளதும், மூடாத பள்ளத்தின் மீது தார் சாலை அமைக்கப்பட்டதும் ஆய்வுக்குப்பின் தெரியவே, ‘யாரை நொந்து கொள்ள’ என விசாரணை அதிகாரிகள் சைலண்ட் மோடுக்குப் போய்விட்டனர். கடந்த இரு தினங்களாக பெய்த மழையின் காரணமாக, ஏற்கனவே பள்ளம் தோண்டி மூடப்பட்ட இடத்தில் மண் சரிவு ஏற்பட்டதின் விளைவே சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதாக ஒரு முடிவுக்கு வந்து பள்ளத்தை மூடும் வேலையில் ஈடுபட்டனர். அடுத்தகட்டமாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள்,”பள்ளமே பாதுகாப்பாய் மூடிக்கொள், சூ… மந்திர காளி” என்ற தொனியில் பள்ளத்துக்கு அருகே தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தி எடுத்து ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தை மூடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
P.K.M.