Madras Kural

பட்டா- சிட்டா -அடங்கல் – பத்திரம் -சான்று-சொத்து! செத்து செத்து வெளாடலாமா ?

சின்னதாய் ஒரு என்ட்ரி (முதல் பாரா): நேரடியாக மேட்டருக்குள்
போக நினைப்போர், அப்படியே கடந்து போகலாம் !

முகநூல் முதல்வர் என்று போற்றப்படும் சீனியர் ஜர்னலிஸ்ட் திரு. ஏழுமலைவெங்கடேசனின் அண்மைய பதிவுகளில் டாகுமெண்ட், ரிஜிஸ்ட்ரேசன், பட்டா, சிட்டா, அடங்கல் குறித்தே அடங்காத ஒரு கோபம் ! அதே கோபம் இங்கேயும் இருக்கிறது. எழுதத்தான் நேரம் இல்லை. பதநீரில் நுங்கைப் பிரித்துப்போட்டு (15 நுங்குதான்) அடுத்தடுத்து இரண்டுநாள் பகல் பன்னிரெண்டு மணிவாக்கில் சாப்பிட்டு விட்டு ஓசி பண்ணை வீட்டில் தூங்கப் போய், அது ஒரு வாரக் காய்ச்சலில் படுக்க வைத்து விட்டது. ‘உனக்கே காய்ச்சலா, திருப்பதிக்கே லட்டா?’ என்று நக்கல் செய்தவர்களே அதிகம் ! தேறி விட்டேன், எழுதியிருக்கிறேன், அவ்வளவுதான்!

சில நாட்களாக ஒரு காலத்தில் அமெரிக்கன் எம்பஸியில் நின்ற கியூவை விட நீளமான கியூ, பத்திரப்பதிவு (ரிஜிஸ்ட்ரேசன்) அலுவலக வாசலிலும், வருவாய்த்துறை (ரெவின்யூ) அலுவலக வாசலிலும் காணக் கிடைக்கிறது. பிறப்பு -இறப்பு, டிரஸ்ட் தொடங்குதல், பள்ளிக்கூடம் ஆரம்பித்தல், வீடு -நிலம் பதிவு போன்றவைகளுக்கு பத்திரப்பதிவு அலுவலகம்…

வருவாய்த்துறை வாசலில், சாதிச்சான்று, வருமானச்சான்று, இருப்பிடச் சான்று, வாரிசுச் சான்று, புலம் பெயர்ந்தோர் சான்று, கைம்பெண் – கணவனால் கைவிடப்பட்ட சான்று, அடகுக்கடை வைக்க (?) சான்று, சிறு -குறு விவசாயி சான்று என ஆரம்பித்து ஒட்டு மொத்த சான்றுக்கான தலைமையகம் (கடல்) போல் திகழும் துறை என்பதால் இங்கும் கியூவுக்கு பஞ்சம் இல்லை!

வருவாய்த்துறையும், பத்திரப்பதிவுத்துறையும் ஒட்டிப்பிறந்த இரட்டைப் பிள்ளைகளை நினைவுக்கு கொண்டு வருகிற துறைகள் என்றே சொல்லிவிடலாம்.
அண்மையில் ரெய்டில் சிக்கிய ’ஆருத்ரா கோல்டு’ நிறுவனம், அப்படி ஒரு நிறுவனத்தைத் தொடங்குவதற்கு தேவைப்படும் சான்றை (வணிக வரித்துறை) இதே பத்திரப்பதிவுத்துறைதான் கொடுக்க வேண்டும் – கொடுத்திருக்கிறார்கள்…

நம்ம ஏரியாவுக்குள் வருவோம் ! பொதுமக்களாகிய நாம், வி.ஏ.ஓ. என்கிற கிராம நிர்வாக அலுவலரைப் பார்த்து ஒரு மனு கொடுக்கிறோம். மனு கொடுக்கத்தான் ஆயிரம் காரணம் இருக்கிறதே !
கூட்டுப்பட்டாவை பிரித்து வழங்குதல், தனி பட்டா பெறுதல், பட்டா பெயர் மாற்றம், பெயர் நீக்கம், பெயர் சேர்க்கை, பெயரில் திருத்தம் மற்றும் பிற்சேர்க்கை – என்று காரணங்கள் நீளுமே !

சரி அப்புறம் ? நம்முடைய மனு, விஏஓவிடமிருந்து தாலுகா ஆபீசுக்குப் போகிறது, சில நேரங்களில் தாசில்தாரை நேராகப் போய்ப் பார்த்து மனு கொடுத்தாலும் அது களப்பணியாளர் என்ற அடிப்படையில் வி.ஏ.ஓ. பார்வைக்குத்தான் வரும் – அப்படித்தான் வருகிறது, அதுதான் கள யதார்த்தம். தாசில்தார் விஏஓவை தேடிப்போய் பிடித்து பொதுமக்களின் மனுவை ஒப்படைத்து விட்டு வருவார் என்றெல்லாம் எண்ணத் தேவை இல்லை. தாசில்தார் ஆபீசுக்கு விஏஓ எப்போது போவாரோ அப்போது, அங்கு – அவருக்காக வந்திருக்கும் மனுக்களை வாங்கிக் கொள்வார் அவ்வளவுதான். ‘எப்போது போவாரோ?’ என்று ஒரு ‘க்’ வைத்ததற்கும் காரணம் உண்டு.
விஏஓக்கள் பலருக்கு (ம்) பணியாற்றும் இடத்தில் வீடு இருப்பது இல்லை – பத்துகிராமம் தாண்டிதான் விஏஓவின் வீடு இருக்கும். வாரத்தில் ஒருநாள் வந்து விட்டு மனுக்களை வாங்குவதும், மக்கள் குறைகளைக் கேட்பதுமாக அவர் வேலையில் கருத்துடன் இருந்து விடுவார். விஏஓ சார்பில் கிராமத்தின் குறைகளை தீர்க்க, கிராம உதவியாளரான தலையாரி இருப்பார்.
ஒருவழியாக நிலத்தையும் அதற்கு முன்னர் நமது மனுவையும் விஏஓ பார்த்து முடித்த பின், நில அளவையர் வசம் மனு போகிறது. எல்லாம் சரி என்று ஆன பின், மனுவுக்கான தீர்வு தாசில்தார் பார்வைக்கு தபால் ஆக போகிறது. தாசில்தார் பட்டா தருகிறார். விஏஓவிடம் சரியான பதில் வரவில்லை என்றால் அதையொட்டிதான் தாசில்தாரின் தீர்ப்பு இருக்கும்.
மனு தாரரான மிஸ்டர் பொதுஜனம் தாசில்தாருக்கு மேலே, கோட்டாட்சியர் வரை போய் முட்டி மோதிவிட்டு, கடைசியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கெரசின் கேனோடு வந்து விடுவார். ”ஃபயர் நியூஸ் ஏதும் இன்னிக்கு மாட்டலையே” என்று காத்திருக்கும் நண்பர்களுக்கு, பல ஆண்டுகள் பாதிப்பில் கிடந்தவரின் வேதனை, சூடான செய்தி ஆகும், பின்னர் ஆட்சியர் வருவார், மந்திரி வருவார் – இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது எல்லா கால கட்டங்களிலும் !
இப்படிப்பட்ட சிக்கல்களுக்கு காரணம் அந்த ஆட்சி, இந்த ஆட்சி என்று துலாக்கோல் வைத்து பார்க்க முடியாதவாறு எல்லாக் காலத்திலும் ஒரே ’வெயிட்டேஜ்’ ஜில் நகர்கிற துறையாக வருவாய்த்துறையும், பத்திரப்பதிவுத்துறையும் ஆணி அடித்தாற் போல் உறுதியான கொள்கையின் மீது ஸ்டூல் போட்டு உட்கார்ந்திருக்கிறது.

ஆதார் கார்டில் பெயரை டைப் செய்து மிஸ்டர் பொதுஜனத்துக்கு அளிக்கும் பொறுப்பை ஒரு தனியார் நிறுவனம் ஏற்றிருந்ததை அனைவரும் பார்த்திருப்போம். மகாதேவன் என்ற பெயரை மகடேவன் என்றும், சேதுராமனை சேடுரமன் என்றும் டைப் அடித்து அவர்கள் வைத்த புதுப் பெயரே பொதுபெயர் என்று ஆகி விட்டது போன்ற அதே தண்டனையை வருவாய் – பத்திர அலுவலகங்களில் பார்க்கலாம்.
சொத்து உள்ளிட்ட பரிமாற்றங்களின் போது நம்முடைய பெயரை அவர்கள் விரும்பியது போலவே டைப்பில் அடித்து முடித்து கையில் கொடுத்து அனுப்பி வைத்து விடுவார்கள். வீட்டுக்கு வந்து பார்த்து விட்டு மறுநாள் ஓடிப்போய், ‘அய்யா, இப்படி ஆகிடுச்சு’ என்றால், இது ஒன்னும் பண்ணமுடியாது, தாசில்தாரை பார்த்துடுங்க என்று பதில் வரும். சில நேரங்களில் கோட்டாட்சியர், ஆட்சியர் வரை போய் கூட இதுபோன்றவற்றுக்கு தீர்வு கிட்டியது இல்லை. மகள் திருமணத்துக்கு வீட்டை – நிலத்தை விற்கப் போகிறவன், பதிவு செய்யப் போகிறவன், பேரன் காலம்வரை நிலத்தை விற்க முடியாமல், பதிவு செய்ய முடியாமல் நிற்கும் பரிதாப நிலைதான் இங்கே எப்போதும் நிரந்தரம் !
பட்டா சிட்டா அடங்கல் போன்றவற்றுக்கு வருவாய்த்துறை, பத்திரம் பதிய பத்திரப் பதிவுத்துறை. இரண்டும் ரயில் தண்டவாளம் போன்று இணைந்து செயல்படவேண்டிய ஒன்று. மனித சக்திகளில் செய்யப்பட வேண்டிய உளவியல் மாற்றங்களே இப்போதும் எப்போதும் இந்தத் துறைகளுக்கு தலையாயத் தேவையாய் இருக்கிற ஒன்று. ஆனால் சொல்லிக் கொண்டிருப்பதோ சிஸ்டம் சரியில்லை !


கூட்டுப்பட்டாவை பிரித்து வழங்குதல், தனி பட்டா பெறுதல், பட்டா பெயர் மாற்றம், பெயர் நீக்கம், பெயர் சேர்க்கை, பெயரில் திருத்தம் மற்றும் பிற்சேர்க்கை போன்றவற்றுக்கு ஒரு அலுவலகம் தேவைப்படுகிறது. குறிப்பாய் அனைத்துக்கும் ஒரு ‘சீட்’ தேவைப்படுகிறது, ‘சீட்’ டில் வேலை நேரத்தில் இருக்கும்படி ஒரு மனிதசக்தி தேவைப்படுகிறது – சாத்தியமா என்று தெரியவில்லை.
ஆட்கள் என்று பார்த்தால், நில அளவையர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் (தாசில்தார்), தலையாரி (கிராம உதவியாளர்), வி.ஏ.ஓ., மற்றும் ஃபாண்டு பேப்பர் – கூடவே ஒரு டைப்பிஸ்ட் மெஷினோடு தேவைப்படுகிறார்கள். இங்கும் அனைத்துக்கும் ஒரு ‘சீட்’ தேவைப்படுகிறது, ‘சீட்’ டில் வேலை நேரத்தில் இருக்கும்படி ஒரு மனிதசக்தி தேவைப்படுகிறது – சாத்தியமா என்று தெரியவில்லை.
அலுவலகங்கள், ஆட்கள், கருவிகள் என்று பல இருந்தாலும் பயனாளியின் தேவையை முழுமையாய் பூர்த்தி செய்ய பணமும் மிக முக்கியமான ஒரு கருவி என்றே மக்களின் பொதுப்புத்தியில் அழுந்தப் பதிந்துப் போயுள்ளது – அது உண்மை இல்லை என்று நடைமுறையில் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் நல்லதொரு அரசாங்கத்துக்கு இருக்கிறது.


பத்திரப்பதிவுத்துறையில் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் வருவாய் இருப்பதாக சொல்கிறார்கள். வருவாய்த்துறையில் இதற்குக் குறைந்து வருவாய் வர வாய்ப்பில்லை – ஆகவே இரண்டுக்கும் சேர்த்து இருபதாயிரம் கோடி ரூபாய் ஆண்டு வருமானம் அரசுக்கு கிடைக்கிறது என்றே வைத்துக் கொள்வோம்.
நேரடியாக, அரசு விதித்துள்ள கட்டணங்களின் அடிப்படையில்தான் இத்தனை கோடி வருமான வரத்து. தவிர, பிற லாவணிகளில் அதிகாரப்பூர்வமற்ற வரும்படிகளை நாம் சேர்க்க வில்லை. அப்படி எந்த வகையிலும் நேர்மையற்ற வரும்படி வருவது இல்லை என்று மறுக்கவும் முடியாது. பத்திரப்பதிவுத்துறை மற்றும் வருவாய்த்துறைகளில் நடக்கும் ரெய்டின் போது சிக்கும் கணக்கில் வராத பணமே அதற்கு சாட்சி.
அண்மையில் கூட ஒரு சம்பவம் : விருதுநகர் மாவட்டம், திருச்சுழி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 500 ஏக்கர் நிலத்தில் குளறுபடிகள் செய்ததாக நிறுவனம் சார்பில் 2022 ஜனவரி வாக்கில் கோர்ட்டுக்குப் போனார்கள். வில்லங்கத்துக்கு காரணம் என்று திருச்சுழி பத்திரப்பதிவு துணைப் பதிவாளர் சரோஜாவை, மார்ச் 2- 2022 -ல் பத்திரப் பதிவு டி.ஐ.ஜி., ஜெகதீசன் சஸ்பெண்ட் செய்துள்ளார்.
· சாகித்ய அகாதமி விருதாளர் சோ.தர்மன் அவர்கள் தமது முகநூல் பக்கத்தில்,
”தூத்துக்குடி மாவட்டத்தில் 500 விவசாயிகளுக்கு சொந்தமான 2117 ஏக்கர் விவசாய நிலங்கள் புதுக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் ஒரே நாளில் தனி நபர் ஒருவருக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்களின் போராட்டத்தால் புதுக்கோட்டை சார் பதிவாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்று குறிப்பிட்டு வேதனையை பகிர்ந்துள்ளார்.

அடுத்து அவர் குறிப்பிட்டுள்ளது இன்னும் வேதனையானது ! ”என்னுடைய அப்பாவை ஏமாற்றி மோசடி செய்த ஆறு ஏக்கர் நிலத்தை மீட்பதற்காக நான் பல வருடங்களாக வருவாய் துறை அலுவலகங்கள் நீதி மன்றங்கள் என்று அலைந்து கொண்டிருக்கிறேன். நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் ஏராளமான சிவில் வழக்குகள் உண்டான வழக்குகள் அல்ல. அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட வழக்குகள். தீர்ப்பின் போது இது மாதிரியான வழக்குகள் உருவாக எந்த அதிகாரி காரணமாக இருந்தாரோ அவர் தண்டிக்கப்பட வேண்டும். ஓய்வு பெற்றிருந்தாலும் அவருடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். வெறும் சஸ்பெண்ட், பணியிடமாற்றம் எல்லாம் பயனளிக்காது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
திரு.சோ.தர்மனின் வரிகள் ஒவ்வொன்றிலும் ஒரிஜினல்
நில உரிமையாளனின் கண்ணீரும், ரத்தமும் கலந்திருக்கிறது.

பத்திரப் பதிவுத்துறையோ, வருவாய்த்துறையோ சில விஷயங்கள் அப்படியேதான் இருக்கிறது ! நெட் வேலை செய்யலை, வை – ஃபை டவுன், நெட் ஸ்பீட் இல்லை ! இந்தப் பக்கம் போனால், கலெக்டர் மீட்டிங்கில் இருக்கிறார் என்பார்கள். கலெக்டரை போய்ப் பார்த்து, ‘அய்யா நீங்க மீட்டிங்கில் இருப்பது உண்மையா?’ என்று மிஸ்டர் பொதுஜனம் கேள்வி கேட்கும் அளவுக்கு இன்னும் வளரவில்லை. கோட்டாட்சியர் மீட்டிங்கில் தாசில்தார்(வட்டாட்சியர்)இருப்பதாக தாசில்தார் தரப்பில் சொல்வார்கள். விஏஓவைத் தேடிப்போனால் தாசில்தார் மீட்டிங்கில் இருப்பதாக விஏஓ தரப்பில் சொல்வார்கள், விஏஓ மீட்டிங்கில் இருப்பதாக எப்போதுமே தலையாரி சொல்வார்.
எந்த மீட்டிங்கிலும் இல்லாமல் இருப்பது
எப்போதும் மறக்காமல் வாக்களிக்கும் நாம்தான் !

ரங்கநாயலு உதவியுடன் ந.பா.சேதுராமன்

Exit mobile version