Madras Kural

ஆன்லைன் ரம்மி சாவுகள்… ! தமிழ்நாடு அரசு இதைத்தான் செய்யணும்…

ஆன் லைன் சூதாட்டம் (?) என்று சொல்லப்படுகிற ஆன் லைன் ரம்மி ஆட்டம், ஒரு சூதாட்டமே இல்லை என்றுதான் அனைத்துத் தரப்பிலும் நிறுவப்பட்டு இருக்கிறது. “பலர் பணத்தை இழக்கிறார்களே, பலர் சாகிறார்களே” என்றெல்லாம் ஆதங்கத்தோடு எதையாவது கிறுக்கக்கூடாது என்பதையும் எழுத்துலகில் உள்ளோர் புரிந்து கொள்வது நன்மை பயக்கும்.

ஆன்லைன்- ரம்மியின் கரங்கள், சீட்டுக் கட்டுகளின் எண்ணிக்கையை விட நீளமானவை! ஆன்லைன் சூதாட்டத்தில் இழப்பு ஏற்பட்டால், வழக்கு போடலாம் என்ற நினைப்பு சிலருக்கு இருக்கக்கூடும் – அதுவும் தவறான எண்ணமே. சம்பந்தப்பட்ட ஆன்லைன் (கவனிக்க : சூதாட்ட கம்பெனி அல்ல) கம்பெனி மீது வழக்குப் போட, கம்பெனி விதிமுறைப் படி, வெளிநாட்டில் உள்ள நீதிமன்றப் பெயரைத்தான் தெரிவித்துள்ளனர். சென்னையில் பத்திரிகை ஆபீஸ் வைத்துக் கொண்டு நம்ம ஊரில் சொல்வோமே, “எங்கள் மீதான வழக்கு பரிவர்த்தனைகள் யாவும் கோயம்புத்தூர் சிட்டி சிவில் கோர்ட் எல்லைக்கு உட்பட்டது” என்று, அதுபோலவே ஆன் லைன் ரம்மி ஆட்டம் தொடர்பான வழக்குகளைப் போட அயர்லாந்து அல்லது அமெரிக்கா, அர்ஜென்டைனா என்றுதான் போக வேண்டும். சில மாதங்கள் முன்னர் சென்னை அரசு கெஸ்ட்ஹவுஸ் வாசலில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ் கான்ஸ்டபிள், துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொன்று தற்கொலைக்கு முயற்சித்தது நினைவில் வருகிறதா? அது தொடர்பாக ஏதேனும் எதிர்தரப்பு (?!) மீது வழக்குப் போடப்பட்டிருக்கிறதா என்று பாருங்களேன்… அதை விடுங்கள், அது தொடர்பான அடுத்தக்கட்ட செய்தி (பாலோ அப்) ஏதாவது மீடியாக்களில் தான் வந்ததா? பிக் சைஸ் சேனல்களை விடுங்க, யூடியூப் சேனல்கள் லெவலிலாவது யாராவது கருத்து மோதல் (டிபேட்)களில் கலந்தார்களா? ஒன்று மட்டுமே உண்மை. தற்கொலைக்கு முயன்ற போலீஸ் கான்ஸ்டபிள் ஆன்லைன் ரம்மியில் 7 லட்ச ரூபாய் வரையில் சொந்தப் பணத்தையும், கடன் வாங்கிய தொகையையும் இழந்துள்ளார் ! ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அவசர சட்டத்தை 2020 நவம்பரில் அ.தி.மு.க அரசு, கொண்டு வந்தது. எப்போதுமே அவசரகதியில் கொண்டு வரப்படும் சட்ட மசோதாக்கள், பலகீனப்பட்டு தோற்றதே கடந்த கால எஸ்டீடி என்பதால் இதிலும் அதுவேதான் நடந்தது. ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வதற்கு சரியான காரணத்தை அரசாணையில் கூறவில்லை என்று கூறிய சென்னை ஐகோர்ட் அதை தள்ளுபடி செய்துவிட்டது.
“ஆன்லைன் விளையாட்டை தடை செய்வதைவிட, அதனை முறைப்படுத்த வேண்டும்” என்றும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. அத்தோடு ஆன்லைன் சூதாட்டமான ரம்மியைத் தடைசெய்ய வேண்டும் என்று தொடர்ந்து பேசிவந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் போன்றோரும் பேசுவதை குறைத்துக் கொண்டனர். ஆன்லைன் சூதாட்ட ரம்மி என்று ஊடகங்களில் ஸ்க்ரால் உருட்டியவர்களும், அச்சு ஊடகங்களில் டைப் அடித்தவர்களும் தங்கள் எழுத்தின் தன்மையை மாற்றிக் கொண்டனர். “ஆன்லைன் விளையாட்டு ரம்மி… எங்கே இன்னொரு தபா திருப்பிச் சொல்லு” என்று சீப்கள் எடிட்டோரியலில் வகுப்பெடுக்கும் நிலைமை உண்டானது. போகிற போக்கில் சில சம்பவங்களையும் சொல்லிப் போனால், மக்களாகப் பார்த்து மனமாற்றம் பெறமுடியும் என்று தம்மாத்தூண்டு நப்பாசை நமக்கு ! சென்னையில் உள்ள திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையம் பக்கம் யாராவது போயிருக்கீங்களா ? எப்பவாவது போனா, இந்த ரியல் ஸ்டோரி உங்களுக்கு இனிமேல் நினைப்புல வந்தே தீரும். பறக்கும் ரயிலேறி பறக்க வரும் பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்குறவரு டீக்காராம். அதிகாலையில யாரோ மூணு பேரு துப்பாக்கிய காட்டி டீக்காராமை கட்டிப் போட்டுட்டு ஒன்னேகால் லட்ச ரூபாயை கொள்ளையடிச்சுக்கிட்டு போயிட்டாங்கன்னு ரயில்வே போலீசுக்கு தகவல் போவுது. அப்ப, ரயில்வே டிஐஜியா இருந்த எம்.வி. ஜெயகவுரி, ஐந்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகிறோம்னு சொன்னாங்க. போலீசுக்கு வரக்கூடிய டெக்னிக்கல் சந்தேகத்துல ஒரு சின்ன பீஸூ டீக்காராம் மேலயும் வரவே அவரை தனியே தூக்கிட்டுப் போயி விசாரிச்சுருக்காங்க. “ஆன்லைன் ரம்மி ஆட்டத்துல சூதாடி சூதாடி பல லட்சங்களை இழந்துட்டேன், கடனும் நிறைய ஆயிடுச்சு, அதான் சென்ட்ரல் கவர்மென்டு பணம்ன்னு கூட பாக்காம கொஞ்சம் கைய வெச்சுட்டேன்” னு ஸ்டேட்மென்ட் குடுத்துட்டாரு. டீக்காராமோட கூட்டாளியா அவரோட சம்சாரம்தான் இருந்திருக்காங்க… சென்ட்ரல் கவர்ன்மென்ட்ல டீக்காராமுக்கு பிடிப்பு போக கையில வர்ற மாசச் சம்பளமே ஒரு லட்சத்த தொடும். வெறும் ஒன்னே கால் லட்சத்துக்கு அவர் எதுக்கு ஆசைப்படணும்? சூதாட்ட மனங்களை கிண்டிக் கிளறி பரபரக்க வைக்கும் மனம்தான் அதற்கு முழுக்காரணம். சோனமுத்தா எல்லாம் போச்சா என்ற கதையாக வழக்கு விசாரணை என்று போய்க் கொண்டிருக்கிறார் டீக்காராம். இன்னொரு சம்பவம், நினைவூட்டுக்காக : சென்னை பெருங்குடி பகுதியில் பிளாட்டில் வசித்தவர் மணிகண்டன். போரூரில் ஒரு பேங்க்கில் அஸிஸ்டென்ட் மேனேஜர். கொரோனா முதல் அலையில், ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ னு ஹோம்ல உக்காந்தவருக்கு, ஆன்லைன் ரம்மி எப்படியோ மேட்ச் ஆயிடுச்சு. “ஓடினாள் ஓடினாள் கல்யாணி, வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்” என்பது போல, “ஆடினார் ஆடினார் மணிகண்டன் விடிய விடிய ரம்மி ஆடினார்” ஒரு கட்டத்தில் நட்புகள், உறவுகளிடம் மணிகண்டன் வாங்கிய கடன் தொகையும் கோடியை கிராஸ் செய்து விட்டது. குடும்பத்தில் நெருக்கடி. கணவன் – மனைவிக்குள் சண்டை அதிகரித்தது. சீராட்டி வளர்த்த ஆண்பிள்ளைகள் இருவர் மீதும் எரிந்து விழுகிற சூழல் வலுவில் உண்டானது. வொர்க் ஃப்ரம் ஆபீஸ் என்று அறிவித்து இரண்டு மாதம் ஆகியும் பேங்க் பக்கம் போகவில்லை மணிகண்டன். முடிவில், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை கொன்று விட்டு மணிகண்டனும் தற்கொலை செய்து கொண்டார். மணிகண்டன் வகித்த பதவியோ அவர் படித்து வாங்கிய பட்டமோ அவரைக் காப்பாற்றவில்லை.
ஏப்ரல் 2022 -29ம் தேதி நடந்த சம்பவம் : சென்னை போரூரில் மனைவி, மகளோடு வசித்து வந்தவர் பிரபு. இப்போது உயிரோடு இல்லை. உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். ஆன்லைன் ரம்மி விளையாடிய வகையில் ஏற்பட்ட 15 லட்ச ரூபாய் கடன்சுமை கொடுத்த தொடர் அழுத்தமே தற்கொலைக்கு காரணம் என்கிறது விசாரணை நடத்திய எஸ்.ஆர்.எம். போலீஸ்… ஆன்லைன் ரம்மியை உடனே நிறுத்துவது (சூதாட்டம் என்பதே தவறுதான் !) அதன் மீது தடை விதிப்பது என்பது உடனடியாய் நடக்கக் கூடிய ஒன்றல்ல. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, சரியான காரணங்களோடு ‘ஆன்லைன் ரம்மி’ தடைக்கான அரசாணையை கொண்டு வந்தால் மேல் முறையீடுகள் செல்லாக்காசாகி விடும் என்பது நமது பார்வை. ஆன்லைன் ரம்மி மீதான தமிழ்நாடு அரசின் தடையாணையில் காரணங்கள் சரியாக இல்லை என்றுதான் அதிமுக அரசு கொண்டு வந்த அரசாணை மீது ஐகோர்ட் தடை விதித்தது என்பதை இங்கே நினைவில் கொள்ளலாம்…

ந.பா.சேதுராமன் –

Exit mobile version