Madras Kural

ஆன்-லைன் மோசடி! காங்கிரஸ் பிரமுகர் தலைமறைவு…

ஆன் -லைனில் கார் வாடகை விடுகிறீர்களா? எச்சரிக்கை மக்களே, எச்சரிக்கை…

வீட்டில் கார் சும்மாதானே கிடக்கிறது… அதுவும் தேடிவந்து ஆவணங்களையும்
கொடுத்து வாடகைப்பணமும் கொடுக்கிறார்களே என்று ஆசை வருவது இயல்புதான். அதேவேளையில் எச்சரிக்கையோடு இருங்கள். என்ன
ஆதாரத்தைக் காட்டினாலும் ஆன் -லைன் மூலம் வாடகைக்கு கொடுக்க -வாங்க நேரும் போது உஷாராகவே இருங்கள். இல்லையென்றால் இப்படித்தான் நடக்கும்.

சென்னை புழல் பகுதியில் நடந்துள்ள சம்பவம் ஒன்றே அதற்கான சாட்சியாக உள்ளது. சென்னை புறநகர் புழலில் ஆன்லைனில் காரை வாடகைக்கு எடுப்பது போல் நடித்து காரை விற்ற இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த காரை பறிமுதல் செய்தனர்.

புழல் அம்பத்தூர் சாலையில் லேக் சைடு அப்பார்ட்மெண்ட்ஸ் குடியிருப்பில் வசிப்பவர் பாலாஜிசங்கர். தனியார் கம்பெனி ஊழியர். 2023 மார்ச் 5 ம் தேதியன்று பாலாஜி சங்கருக்கு சொந்தமான மாருதி ஷிப்ட் காரை ஆன் லைன் மூலமாக வாடகைக்கு பெற தொலைபேசியில் தொடர்பு
கொண்டு காரை வாடகைக்கு எடுத்துக் கொள்வதாக இருவர் பேசியுள்ளனர்.
தகுந்த ஆதாரங்களையும் காட்டியதால், காரை பாலாஜிசங்கர் கொடுத்துள்ளார்.

காரை எடுத்துச் சென்றவர்களிடமிருந்து குறிப்பிட்ட நேரம் ஆகியும் கார் திரும்பி வராததோடு, ஜி.பி.எஸ். கருவியின் செயல்பாடும் துண்டிக்பட்டதால் சந்தேகம் அடைந்த பாலாஜிசங்கர்,
புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். க்ரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காரோடு போனவர்களை தேடத் தொடங்கினார்.
புழல் போலீஸ் உதவி கமிஷனர் ஆதிமூலம் தலைமையிலான சிறப்பு தனிப்படை போலீஸ் டீமும் களத்தில் இறங்கி சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து குற்றவாளியை தேடத்தொடங்கியது.

இந்நிலையில், கதிர்வேடு அருகில் கடத்தல் ஆசாமிகள் சிக்கிக் கொண்டனர். ஐயப்பன்தாங்கல் பரணிபுத்தூரை சேர்ந்த சண்முக சுந்தரத்தின் மகன் அகிலன்தான்
கார் திருட்டுக்கு உடந்தையாக செயல்பட்டவர் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அகிலன் கொடுத்த தகவலின் பேரில் , திருவாரூர் மாவட்டம் , குடவாசலை சேர்ந்த சம்பந்தம் மகன் ஆர்.எஸ். பாபுவை போலீசார் பிடித்து விசாரிக்க,
அடுத்தகட்ட தகவல்கள் வெளியானது. திருடிச்செல்லும் கார்களை போலி
ஆவணங்கள் மூலம் வெளி மாநிலங்களுக்கு விற்பதே நான் தான் என்று ஆர்.எஸ்.பாபு ஒப்புக்கொண்டார். பின்னர் மாருதி ஸ்விப்ட் காரை பறிமுதல் செய்ததோடு இருவரையும் கைது செய்த போலீசார், வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியாக நாகப்பட்டினத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாகப்பட்டினம் காங்கிரஸ் பிரமுகர் போலீசார் கைகளில் சிக்கினால் ‘ஆன் – லைன்’ வழியில் அபேஸ் ஆன கார்கள் பல சிக்கலாம் என்று போலீசார் கருதுவதால் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
குற்றம் நடந்த ஓரிரு நாட்களில் திறமையுடன் செயல்பட்ட சிறப்பு தனிப்படை போலீசாருக்கு வாழ்த்துகள். பொன்கோ.முத்து

Exit mobile version