Madras Kural

முதலமைச்சர் முயற்சிக்கு முட்டுக்கட்டை …

செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டத்தை நடத்தும் முதல்நாடு இந்தியாவின் தமிழ்நாடு. 44-ஆவது ஒலிம்பியாட் போட்டிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஜோதி தொடர் ஓட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஜூன் 19-2022 அன்று, தில்லி இந்திராகாந்தி விளையாட்டரங்கில் தொடங்கி வைத்து பேசினார். ஒலிம்பியாட் ஜோதியை 40 நாட்களுக்குள் இந்தியாவின் 75 நகரங்களுக்கு கொண்டு சென்று இறுதி நாளில் மாமல்லபுரம் விழாவில், ஜோதி ஏற்றி வைக்கப் படுகிறது. ஜூலை 28-2022 நாளன்று தொடங்கி ஆகஸ்ட் 10-2022 ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது.

செஸ் ஒலிம்பியாட் சாலை…

கிராண்ட் மாஸ்டர்கள் உள்பட சுமார் இரண்டாயிரம் வீரர்கள், 189 நாடுகளிலிருந்து பங்கேற்கும் இந்த விழா, இதுவரை நடந்த போட்டிகளிலேயே அதிக வீரர்களைக் கொண்ட விழா என்பது தனிச்சிறப்பு. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்விழா சிறப்பாக நடந்தேற தொடர்ந்து ஆர்வம் காட்டிவருவது அறிந்ததே. அதன் ஒரு பகுதியாகத்தான் போட்டியை சிறப்பாக நடத்திட 23 குழுக்களை அமைத்ததும். மாமல்லபுரம் சிறப்புநிலை பேரூராட்சி மூலம் ரூபாய் 10 கோடியை ஒதுக்கி அடிப்படை வசதிகளை உடனே செய்து முடித்திட உத்தரவிட்டதும் அதன் ஒரு பகுதிதான்.

முடிவடையாத பணிகள்…

மாமல்லபுரத்தின் பூஞ்சேரி கிராமத்திலுள்ள ஃபோர்பாய்ண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர ஹோட்டல் வளாகத்தில் 52 ஆயிரம் சதுர அடியில் நவீன சதுரங்க உள் விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டு வருவதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனித்த அக்கறையை வெளிப்படுத்துகிற ஒன்று. உலகளாவிய சதுரங்கக் கூட்டமைப்பினர், பத்திரிகையாளர்கள், சிறப்பு பார்வையாளர்கள் தங்குவதற்கு வசதியாக இரண்டாயிரம் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் போட்டியை ரசிக்க டிஜிட்டல் திரைகள், எந்த உதவிக்கும் ஓடிவரவும், தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றவும் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

வேலை நடக்கிறது….

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடிப்படை வசதிக்காக, ரூ.10 கோடியை மாமல்லபுரம் சிறப்புநிலை பேரூராட்சி மூலம் ஒதுக்கியுள்ளார் ! முதலமைச்சர் பெயரை முடிந்தவரை ரிப்பேராக்க ஊருக்கு நாலுபேர் இருப்பது போல் இங்கும் சிலர்…
பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவரை சம்மதிக்க வைத்து (?!) 60% ஒப்பந்தப் பணிகளை வாங்கிக் கொண்டவர்கள், இதுவரை 30% கூட வேலையை முடித்துக் கொடுக்காமல் (சதுரங்கம் விளையாட ஆள்கள் வந்துட்டேயிருக்காங்க சாமீயளா) இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாலு அடிக்கும் கீழே பதிக்க வேண்டிய மின்சார கேபிள்களை இரண்டு அடிக்குள்ளேயே பதித்து வருவதாகவும் அடுத்த குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. ஒப்பந்ததாரர்களை (காண்ட்ராக்டர்கள்) எதிர்த்து தோழமைக் கட்சியான உள்ளூர் வி.சி.க.வினர், மாமல்லபுரம் சிறப்புநிலை பேரூராட்சிக்கு எதிராக போராடி வருகின்றனர். பேரூராட்சியின் தலைவராக இருப்பவர் அதிமுககாரர் என்பது சிறப்புத் தகவலா என்று தெரியவில்லை… ஒப்பந்த வேலைகளை எடுத்தது அதிமுகவினர் இல்லை என்பது மட்டும் சிறப்புத் தகவல்… இன்னும் 15 நாள்கள் கூட இல்லை, ஒலிம்பியாட் 44 -ஐ தொடங்க… பிரீத்தி எஸ்

Exit mobile version