திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வல்லூர் தேசிய அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ₹12கோடி மதிப்பிலான எந்திரம் தீயில் கருகி சேதமானது.
திருவள்ளூர் மாவட்டம் வல்லூர தேசிய அனல் மின் நிலையத்தில் உள்ள மூன்று அலகுகளில், நாள் ஒன்றுக்கு தலா 500 வீதம் 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் முதல் அலகில் டர்பன் ஜெனரேட்டர் எனப்படும், ‘தானியங்கி அவசர மின்னாக்கி’ பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது. இந்த திடீர் தீ விபத்தால் பணியில் இருந்த ஊழியர்கள் அலறியபடி உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வெளியே ஓடினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவசர (அபாய மணி) எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு ஊழியர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
தீ விபத்து காரணமாக முதல் அலகில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மேலும் இரு அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப் பட்டன. அனல் மின் நிலைய வளாக தீயணைப்பு வீரர்கள் ரசாயனம் கலந்த தண்ணீரை பீச்சி அடித்து, பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதன்பின் மற்ற இரு அலகுகளிலும் மீண்டும், மின் உற்பத்தி தொடங்கியது. இந்த விபத்தில் 12 கோடி ரூபாய் மதிப்பிலான அதி நவீன டர்பன் ஜெனரேட்டர் முற்றிலுமாக சேதம் அடைந்தது. இதனால் முதல் அலகில் மின் உற்பத்தி தொடங்க தாமதம் ஆகும் என தெரிகிறது. இதனிடையே மீஞ்சூர் காவல்துறையினர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்.கோ.முத்து