Madras Kural

மக்கள் சேவையில் ‘டாக்டரேட்’ தோழர்…

வாழ்நாளெல்லாம் போராட்டம் சிறைவாசம் என்று மக்களுக்காகவே ஓடித் திரிந்த தோழர் என்.எஸ். (102) அவர்கள், உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலை இறந்தார். பொன்னுடல் மறைந்தாலும் புகழுடல் மறையாது என்பார்களே அப்படியான புகழுடல், 1921-ஜூலை 15 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் மண்ணில் உதித்தது. ஒன்பது வயதிலேயே பகத்சிங்கின் தியாகத்தை நேரில் கண்டு புரட்சித் தேரேறி பயணம் தொடங்கியவர் தோழர் சங்கரய்யா.


மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர். படிக்கும் போதே, விடுதலை போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். 1941-ல் கல்லூரி படிப்பை முடித்த கையோடு பட்டம் பெறுவதற்கு மாற்றாக சங்கரய்யாவுக்கு சிறையை பரிசளித்தது பிரிட்டிஷ் அரசு. 18மாத சிறைவாசம் முடித்து வெளியே வந்தவர், மீண்டும் மாணவர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால், சிறைவாசம் உறுதி என்றது பிரிட்டிஷ் அரசு. பாளையங்கோட்டை சிறை, காத்திருந்தது போராளி சிங்கத்தை சிறையிலடைக்க.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1964-ஆம் ஆண்டு உடைந்தபோது மார்க்சிஸ்ட் கட்சியை தொடங்கிய தலைவர்களில் ஒருவராக சங்கரய்யா இருக்கும் அளவிற்கு அவரது தியாகம் பேசியது.

வாழ்நாள் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டவர், 95 வயதிலும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக போராடி நீங்காப் புகழ் பெற்றார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தமிழ்நாடு அரசின் தகைசால் விருது முதல்முறையாக (2021) சங்கரய்யாவுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. விருதோடு இணைத்துக் கொடுத்த ரூபாய்10 லட்சத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கி, “மக்கள் மருத்துவர்” ஆனவர் தோழர் சங்கரய்யா. அவருக்கு இதற்குமேலும் ஒரு மருத்துவர் (Doctorate) பட்டத்தை வேறொருவர் கொடுத்து விட முடியுமா என்ன? அதிகார ‘ரெவி’ களால், ‘அய்யா’ க்கள் புகழை ஒருபோதும் சிதைத்துவிட முடியாது. இழிவுடன் ‘கழி’ந்திடும் வாழ்க்கையைத்தான் வரலாற்றுக்கு கொடுத்துப்போக முடியும்.

தமிழ்நாட்டின் மார்க்ஸிஸ்ட் கட்சியின் தொடக்க கால தோழர்கள் இருவர். ஒருவர் ‘கேரள’ அச்சுதானந்தன். இன்னொருவர், தமிழ்நாடு என்.எஸ். (எ) என். சங்கரய்யா.

பிரிட்டிஷ் அரசாங்கத்தால் மரண தண்டனை விதிக்கப் பெற்ற பின்னும் விடுதலைப் போராட்ட வீரராக தலைமறைவு வாழ்வை இளமைப் பொழுது முழுதும் கழித்தவர் என்.எஸ்.

ஜனசக்தி நாளிதழின் முதல் ஆசிரியர், மூத்தபத்திரிகையாளர், தோழர் NS (102). ‘சிங்கம்’ என்பது அவரது இன்னொரு பெயர்! தோழர்கள் அதை பொதுவில் வைப்பதில்லை.

பேராளரின் உடலுக்கு இறுதி மரியாதை செய்யும் பொருட்டு அன்னாரது பொன்னுடல் குரோம்பேட்டை இல்லத்தில் வைக்கப்பட்ட பின்னர் சென்னை தி.நகர் வைத்தியராமன் தெருவிலுள்ள சி.பி.எம். மாநில தலைமை அலுவலகத்தில் வைக்கப் பட்டுள்ளது.

பொன்.கோ.முத்து – ந.பா.சே….


Exit mobile version