இந்தியா சுதந்திரம் பெற்ற 77 ஆவது ஆண்டு விழாவை நாம் கொண்டாடும் இந்நேரத்தில் செங்கற்பட்டு மாவட்ட கடைக்கோடியில் உள்ள அச்சிறுபாக்கம் வட்டம் சிறுதாமூர் கிராமத்தைப் பாராட்டவேண்டியது அவசியமாகிறது. ஆம்! கடந்த ஐந்து ஆண்டுகளாக கிராமத்தின் நடுவில் தினமும் தேசியக் கொடியேற்றி, தேசத்தை வணங்கும் ஒரே கிராமம் சிறுதாமூர்.
ஒரு கிராமத்தை வளர் கிராமமாக உயர்த்த தொடர்ந்து பணி செய்து வருகிறது, சிறுதாமூர் கிராம ஊராட்சி மற்றும் சிறுதாமூர் ஸ்ரீ ஸ்ரீனிவாசர் அறக்கட்டளை. சுதந்திர- குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களின் போது தேசியக் கொடியேற்றி, தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடி தேசத்தை வணங்குவதோடு; இராணுவ வீரர்களையும், கிராம துப்புரவுப் பணியாளர்களையும் சிறப்பு விருந்தினர்களாக அழைத்துப் பாராட்டி வருகின்றது.
கவுரவிக்கப்படும் ராணுவ வீரர்களுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும்; எதிர்புறம் கிராம மக்கள் வரிசையாக நின்று; ஒரே நேரத்தில் அவர்களுக்கு வணக்கம் செய்யும் காட்சியை நாம் வேறெங்கும் காண்பது அரிது. இந்த ஆண்டு மிகவும் போற்றும் விதமாக மழையும் மண் வளமும் தரும் மரங்களில் தேசியக் கொடி வரைந்து நிழல் தரும் மரத்தைச் சுற்றி கிராம மக்கள் நின்று தேசியக் கொடிக்கும் , தேச மரத்திற்கும் வீர வணக்கம் செலுத்தினர்.
சுதந்திரதினவிழா மற்றும் குடியரசு தின விழாகொண்டாடி சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட வீரர்களை, தியாகிகளை நாம் ஒவ்வொரு ஆண்டும் போற்றுகிறோம். அத்தகைய தியாகிகள், தேசத் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களை; பள்ளிகள் இயங்காத கொரோனா நோய் தொற்று காலத்தில் கிராமத்தின் ஒவ்வொரு இல்லத்திலும் உள்ள மாணவர்களுக்கு வழங்கி; வருங்கால சமுதாயம் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள வைத்தது; இந்த கிராமத்தில் இயங்கும் சிறுதாமூர் ஸ்ரீ ஸ்ரீனிவாசர் அறக்கட்டளை.
சிறுதாமூர்கிராமத்தில் தினமும் தேசியகொடியேற்றி தேசீயகீதம் பாடி தேசத்தை வணங்கும் ஆறாம் ஆண்டு துவக்க விழா இன்று கிராம ஊராட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது. இவை அனைத்திற்கும் பின்புலமாக உள்ளவர், வளர்கிராமப் பணியாளரும் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநருமான கவிஞர் விஜயகிருஷ்ணன். இவர், சிறுதாமூர் மட்டுமல்லாமல் மேலும் ஐந்து கிராமங்களில் வளர் திட்டப்பணிகளை இன்று துவக்கினார்.
தமிழகத்தில் செங்கற்பட்டு மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம் சிறுதாமூர். சென்னையிலிருந்து 110- கிமீ தொலைவில் திண்டிவனத்திற்கு முன்பு உள்ள சிறுதாமூர் கிராமத்திற்கு மக்களுக்குப் பயன்தரும் வகையில் சாலை வசதி இல்லை. 1959ஆம் ஆண்டு அரசு உதவிபெறும் ஆரம்பப் பள்ளியாக திரு.சேஷாத்திரி என்பவர் துவக்கி ஐந்து ஆசிரியர்களுடன் நடத்திவந்த சிறுதாமூர் ஆரம்பப் பள்ளியில் இன்று ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை பயிலும் 82 மாணவர்களுக்கும் சேர்த்து ஒரே ஒரு ஆசிரியர் மட்டும்தான் பாடம் நடத்தும் நிலை உள்ளது. ஆறாம் வகுப்பு தொடங்கப் போதிய மாணவர்களின்
எண்ணிக்கையும் இடவசதியும் இருந்தும் கிராம மக்கள் நான்கு ஆண்டுகளாக முயற்சித்தும் கல்வித் துறையால் இன்னும் தொடங்கப் படவில்லை. ஆறாம் வகுப்பு பயில சூறைக்காற்று, வெயில், மழைகளை கடந்து வெகு தொலைவு மாணவர்கள் நடந்து செல்ல வேண்டும் என்பதால்; மாணவிகள் பெரும்பாலும் ஐந்தாம் வகுப்போடு பள்ளிக்குச் செல்வதை நிறுத்தி விடுகின்றனர்.
இதனால் சிறுதாமூர் கிராமத்தில் பெண்கல்வி 26 சதவிகிதம் என்று நாம் கேள்விப்படும் செய்தி நம்மை வருத்தமடையச் செய்கிறது. சிறுதாமூர் கிராம மக்களே ஒன்றிணைந்து ஊரின் நடுவில் விக்ரம சோழன் காலத்தில் அமைத்த குளத்தைத் தூர்வாரி மூன்று ஆண்டுகளுக்கு முன் ஆழப்படுத்தினர். தற்போது அரசு இரண்டு பக்கங்களில் படிக்கட்டுகள் அமைத்து மக்களுக்குப் பயன்பட வைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் மழையின் சேமிப்பால் கொஞ்சம் நீர்வளம் உயர்ந்துள்ளது. விவசாயிகள் பெருமளவு நம்பியுள்ள கிராம. நீராதாரமான ஏரியை தூர்வாரி, ஆழப்படுத்தி, கரையை அகலமாக்கி, பாதை அமைத்து இருபது ஆண்டுகளுக்கு மேலானதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்துவதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ள 200 நீர்நிலைகளின் பட்டியலில் தங்கள் கிராமத்தின் பெயரும் இடம் பெறுமா என்று மக்கள் ஆவலுடன் கேட்கின்றனர். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒலக்கூரிலிருந்து சிறுதாமூர் கிராமம் 6 கிலோ மீட்டர் தொலைவில்இருந்தும் சாலை வசதியோ, பேருந்து வசதியோ இல்லை. சிறுதாமூர் கிராமத்தினை நாம் பாராட்டும் இந்தத் தருணத்தில் அரசின் சிறப்புக் கவனத்தோடு கிராம நலப்பணிகள் உடனடியாக அங்கு மேற்கொள்ளப்பட்டு இன்னும் ஒரு சில ஆண்டுகளில் தன்னிறைவு பெற்று வளர்ந்த கிராமம் என்னும் சிறப்பைப் பெறும் என்பதில் ஐயமில்லை.
மேலும் விபரம் பெற:
கவிஞர் விஜயகிருஷ்ணன்
9600644446-