Madras Kural

பேரரசன் நந்திவர்மனின் 108 ஈஸ்வரர்… அகத்தியரை மிரட்டிய பிள்ளையார்!

பேரரசன் நந்திவர்மன் நிர்மாணித்த 108 சிவாலயங்களும் அகத்திய மாமுனியை அலறவைத்த (பிள்ளையார்) ஸ்ரீ அங்கோலன் தும்பிக்கையின்றி காட்சி தரும் திருத்தலமும் சென்னை புறநகர் பொன்னேரி -திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

பல்லவ மாமன்னன் நந்திவர்மன் பெயர் தாங்கிய வரலாற்று ஆவணத்தை படமாக்கியுள்ள திரைப்பட இயக்குநர் ஜி.வி.பெருமாள்வரதனிடம் இந்த கோயில் குறித்த அவர் கருத்தை கேட்டபோது,

“நந்திவர்மன் எனது இயக்கத்தில் வெளிவரவுள்ள முதல் சினிமாப்படம். இதுபோன்று பல கோயில்களை நந்திவர்மன் கட்டியுள்ளார். திருப்பணிகள் பல செய்துள்ளோர். வீரத்தையும் மக்கள் நலனையும் வாழ்வியல் நெறியாய் வகுத்துக் கொண்டவரை நிறைவாகவே படத்தில் பதிவு செய்துள்ளோம்” என்றார். இனி ஆலய வரலாற்றை பார்ப்போம்!

ஏறு அழிஞ்சில் அபூர்வமான மரம். மரத்திலிருந்து கீழே விழும் இதன் விதைகள், தாமே ஊர்ந்து சென்று மரத்தோடு ஒட்டிக் கொள்ளும் இயல்புடையவை. வேத வித்து என இந்த விதையை குறிப்பிடுவது அதனால்தான். அரிதாய் மட்டுமே காணப்படும் இந்த மரத்தை தல விருட்சமாகக் கொண்ட தலம் சின்னக்காவணம் என்ற (ஊர்) இடத்தில் அமைந்துள்ளது.

சென்னையில் இருந்து சற்றேர 40 கி.மீ. தொலைவில் திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த சிறு கிராமம் சின்னக்காவணம். ஆலய அமைவிடம் அங்கேதான் இருக்கிறது. அங்கேதான் கட்டுரையின் தொடக்கத்தில் நாம் குறிப்பிட்ட சிவனார் தலம் உள்ளது. அஷ்டோத்திர வல்லி சமேத ஸ்ரீ நூற்றியெட்டு ஈஸ்வரர் அங்கேதான் அமைந்துள்ளார்.

அகத்திய மாமுனிவர் காசிக்கு பயணம் மேற்கொண்டார். போகும் வழியில் நான்மறை கற்றுணர்ந்த – அறிந்த வேத விற்பன்னர்கள் சின்னக்காவணம் என்ற சிற்றூரில் உள்ளதை அறிந்து அதே ஊரில் தங்கி ஓய்வெடுத்தார். அன்று இரவு சிவபெருமான் அகத்திய மாமுனி கனவில் தோன்றி, ‘நீங்கள் காசிக்கு வர வேண்டாம், இங்கேயே தங்கி 108 நாள் சிவலிங்க பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தாலே எனக்குப் போதும்’ எனக் கூறினார்.

அதன்படியே அகத்திய மாமுனிவர் அருகில் உள்ள ஆரண்ய நதியில் நீராடி, தினமும் ஒரு பிடி மணல் கொண்டு வந்து ஏர் அழிஞ்சில் மரத்தடியில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டார்.

நூற்றியெட்டாவது நாளில் வேதங்களுக்கு அதிபதியாகிய விநாயகரை மறந்து சிவவழிபாட்டை அகத்திய மாமுனி தொடங்கியதால் ஆங்கோர் விபரீதம் விளைந்தது. மணலால் உருவான சிவலிங்கம் ஆக்ரோஷம் கொண்டு தும்பிக்கை இல்லா விநாயகராக உருவெடுத்து அங்கே நிற்கவே பதறிப்போன அகத்திய மாமுனி, தவறை உணர்ந்து 108 தோப்புக்கரணங்கள் போட்டு விநாயகரை வணங்கி நின்றார். அகத்திய மாமுனியின் பணிதலால் சாந்தம் அடைந்து அவர் முன் தோன்றிய விநாயகப் பெருமான், ‘நம்பிக்கையோடு தம்மை நாடிவரும் அடியார்களின் அகக்கண்ணுக்கு துதிக்கையுடனும், நம்பிக்கை அல்லாதவர்களுக்கு அகந்தையை அழிக்கும் பொருட்டு துதிக்கை இன்றி ஆக்ரோசமாக காட்சி அளிப்பேன்’ எனக் கூறி மறைந்ததாக தல வரலாறு சொல்கிறது.

இப்பொழுதும் ஏறு அழிஞ்சில் மரத்தடியில் ஸ்ரீ அங்கோல கணபதி என்ற திருப்பெயரில் வினாயகரைக் காணலாம். இந்த அதிசய நிகழ்வை கேள்வியுற்ற பேரரசன் நந்திவர்மன் பொன்னேரி – திருக்காவணம் பகுதியில், அருள்மிகு ஸ்ரீ அஷ்டோத்திர வல்லி சமேத அஷ்டோத்தர ஈஸ்வரர் திருக்கோயில் எழுப்பியுள்ளார். ஆலயத்தில் இரண்டு கருவறைகள் உள்ளன. ஒன்று ராஜ கோபுரத்தின் நேர் எதிரே உள்ள அஷ்டோத்திர வல்லி ஈஸ்வரர் மூலஸ்தானம். மற்றொன்று அதன் பின்புறம் மேற்கே நோக்கி உள்ள நூற்றெட்டீஸ்வர் மூலஸ்தானம். இங்கு அஷ்டோத்திர வல்லி தனியாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள்.

விநாயகர், நடராஜர், சுப்பிரமணியர், வள்ளி- தெய்வயானை, சிவகாமி, நவகிரக சன்னதி, சூரியமூர்த்தி, பைரவர், அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞானசம்பந்தர் உள்ளிட்ட மூர்த்திகள் ஆலயத்தில் உள்ளனர். ஆலயத்தின் மற்றொரு சிறப்பு, இந்தியாவில் இங்கு மட்டுமே, ஆதிசிவனின் பிரதான அருள்மிகு ‘பூமீஸ்வர்’ தனி லிங்கம் உள்ளது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் இங்கு நூற்றியெட்டு திரு உருவமாக காட்சி தந்ததில்

அதில் ஒரு மேனி பூமியில் தோன்றியதாக வரலாறு. ஆலயத்தில் உள்ள அஷ்டோத்திர வல்லிக்கு, தாமரைத்தண்டு இழை திரியிட்ட நூலினால் நெய்தீபம் ஏற்றி, சிவனை 108 முறை வலம் வந்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும்; பெண்களுக்கு திருமண பாக்கியமும் நல் வாழ்வும் அமையும் என்கிறார்கள். ஸ்ரீ அங்கோல கணபதியை பக்தியுடன் வணங்கி 108 நாட்கள் தொடர்ந்து நாள்தோறும் 108 தோப்புக்கரணம் போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினால் வேண்டுதல் நிறைவேறுவது திண்ணம்.

பொன்னேரி பொன்.கோ.முத்து

Exit mobile version