செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சுகன்யா (38) இவர் கணவர் வெங்கடேசன், வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். புதுப்பாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகே வாடகை கட்டிடத்தில் ஜெராக்ஸ் கடை ஒன்றையும் சுகன்யா நடத்தி வந்துள்ளார். கடைக்கு அருகில் மின் மோட்டார் சர்வீஸ் ஷாப் நடத்தி வந்த பாலாஜி (26) என்பவருக்கும், சுகன்யாவுக்கும் அப்போது திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விஷயம், சுகன்யாவின் கணவர் வெங்கடேசனுக்கு தெரியவே இருவரையும் கண்டித்துள்ளார். பாலாஜியின் தந்தை குமாரும் அதே போல் இருவரையும் கண்டித்துள்ளார். இரு தரப்பும் கண்டித்த பிறகும், இருவரும் தொடர்பை கைவிடாமல் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் 2022 நவம்பர் 7- ஆம் தேதி இரவு சுகன்யாவின் கடை திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயில் சிக்கிக் கொண்ட சுகன்யா, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தீ விபத்து குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திய போது, பாலாஜியின் தந்தை குமார், கடைக்கு பெட்ரோல் ஊற்றி சுகன்யாவை கொலை செய்தது தெரிய வந்தது. குமார் அளித்த வாக்குமூலத்தில், சுகன்யாவை அடைய முயன்று, அதற்கு சுகன்யா சம்மதம் தெரிவிக்காததால் பெட்ரோல் ஊற்றி கொலை செய்ததாக கூறியுள்ளார். குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். தற்பொழுது வரை சென்னை மத்திய புழல் சிறையில் இருக்கும் குமாரை பழி வாங்க, சுகன்யாவின் அண்ணன் ரவி துடித்தார். வாய்ப்பு அமையவில்லை. தங்கை இறப்புக்கு காரணமாக இருந்த குமாரின் மகன் பாலாஜியை, கூட்டாளிகள் ஆறுபேருடன் சேர்ந்து கொலை செய்ய, ரவி திட்டமிட்டார். புதுப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரேயுள்ள, பாலாஜியின் ஒர்க் ஷாப் கடை அருகிலேயே பாலாஜி சிக்கிக் கொள்ள அவரை வெட்டி கொலை செய்துவிட்டு கூட்டாளிகளுடன் காரில் வண்டலூர் வழியாக, ரவி தப்பிச்சென்றார். கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிளாட்சன் ஜோஸ் தலைமையிலான போலீசார், பாலாஜியின் உடலை மீட்டு உடற்கூராய்வு மருத்துவ அறிக்கை பெற, செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களை சேகரித்தனர். இன்னொரு பக்கம், மூன்று தனிப்படையுடன் குற்றவாளிகளை தேடிவந்தனர். வண்டலூர் வழியாக பாண்டிச்சேரி நோக்கி மதுராந்தகம் வழியாக போன போது தொழுப்பேடு பகுதியில் கொலையாளிகள் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர். சுகன்யாவின் சகோதரர் தஞ்சாவூர்ரவி(42), கூட்டாளிகள், சரவணன் (22), ஆனந்த் (24), அரவிந்த் (24), திருமாவளவன் (25), ஸ்டீபன்ராஜ் (22) ஆகிய ஆறு பேரை கைது செய்து வீச்சரிவாள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கேளம்பாக்கம் போலீசாரின் விடா முயற்சி காரணமாக கொலையாளிகள் கூண்டோடு சிக்கிக் கொண்டனர்.
பிரீத்தி எஸ்