Madras Kural

காணாமல்போன சென்னை மாணவி மதுரையில் சடலமாக மீட்பு!

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். டிராவல்ஸ் பணியில் இருப்பவர். இவருடைய மகள், சென்னையிலுள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர், மகளை கண்டித்துள்ளனர். இந்நிலையில் 09ஆம் தேதி பகல், வீட்டில் இருந்து வெளியில் சென்ற மகள் வீட்டுக்குத் திரும்பாததால் காணவில்லை என்று இரவு 21.30 மணியளவில் அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் திருவான்மியூர் போலீசார் வழக்குப் பதிந்து செல்வராஜியின் மகளை தேடி வந்தனர். மாணவியின் நட்பு வட்டாரத்தில் விசாரித்தனர். அப்போது, மாணவி படித்து வந்த அதே பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவர், காணாமல் போன மாணவிக்கு நெருங்கிய நண்பர் என தெரியவே அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். மாணவரிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே அவருடைய செல்போன் லைனில் வந்த மாணவி, “திருச்சி மாவட்டம் துறையூரில் தற்போது இருக்கிறேன்” என்று தெரிவித்தார். இதையடுத்து போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் இராஜகோபால் தலைமையிலான போலீசார் 11ஆம் தேதி மாலை, திருச்சி சென்றனர். மாணவி கொடுத்த தகவலின் அடிப்படையில் அவரை துறையூரில் தேடினர்.
இதற்கிடையே 12ஆம் தேதி பகல், திருவான்மியூர் போலீசாரை மதுரை மாவட்ட அலங்காநல்லூர் போலீசார் தொலைபேசியில் அழைத்தனர். “வாகைகுளம் முதல் கீழபனங்குடி சாலை அருகே புதிதாய் கட்டப்பட்டு வரும் கட்டிட முதல் மாடியில், தேடப்படும் மாணவி, தூக்கில் சடலமாக கிடக்கிறார்” என்ற தகவலைக் கொடுத்தனர். அலங்காநல்லூரைச் சேர்ந்த சின்னசாமி என்பவருக்கு சொந்தமான அந்த இடத்தில் புதிதாய் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டிடத்தின் முதல் மாடியில் சேலைத் துணியில் தூக்கில் தொங்கியபடி மாயமான மாணவி சடலமாய் மீட்கப் பட்டிருக்கிறார். “பெற்றோர் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்கிறார்கள், நான் ஆசைப்பட்டதை அவர்கள் வாங்கி தரவில்லை” என்று மாணவி எழுதி வைத்திருந்ததாக கூறப்படும் கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மாணவியின் பெற்றோர் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் இராஜகோபால் ஆகியோர் மதுரையில் உள்ளனர்.
அலங்கநல்லூர் போலீசார், மாணவியின் உடலை உடற்கூராய்வுக்காக மதுரை இராஜாஜி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

– விகடகவி எஸ். கந்தசாமி

Exit mobile version