
‘வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை மதரஸா-இ-ஆஸம் வளாகத்தில் சிறுபான்மை மாணவர்கள் பயன் பெறும் வகையில் கல்வி நிறுவனங்களை உருவாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்’ என்று – எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஏ.கே.கரீம் வெளியிட்டுள்ள அறிக்கை :
சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள மதரஸா-இ-ஆஸம் மேல்நிலைப்பள்ளி வரலாற்றுச் சிறப்புமிக்கது. 1851 ஆம் ஆண்டு நவாப் குலாம் கவுஸ்கான் பகதூர், ‘மதரஸா-இ-ஆஸம்’ என்னும் மதரஸாவை தொடங்கினார். பின்னர், நாட்டு விடுதலைக்காக ஆங்கிலேயர்களின் கல்வியை புறக்கணித்த சிறுபான்மை சமூக மக்களுக்கு, நவீன கல்வியை போதிப்பதற்காக 15 ஏக்கர் அளவிலான அந்த இடத்தை அரசிடம் ஒப்படைத்தார் நவாப். சிறுபான்மை சமூக மாணவர்கள் மட்டுமின்றி பல்வேறு சமூக மக்களும் அங்கு நவீன கல்வியை பயின்றனர்.
தமிழகத்தின் முதல் நவீன பள்ளிக்கூடமாக 1859 முதல் செயல்பட்ட அந்த பள்ளியில் படித்த பலர், அரசின் உயர் பதவிகளை பெற்றுள்ளனர். முதலில் உயர்நிலைப்பள்ளியாக செயல்பட்டு தற்போது மேல்நிலைப் பள்ளியாக அது செயல்பட்டு வருகிறது.
மதரஸா-இ-ஆஸம் மேல்நிலைப் பள்ளியில் 20 ஆண்டுகளுக்கு முன்புவரை சுமார் 2,000 க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயின்ற நிலையில், தற்போது, 300 க்கும் குறைவான மாணவர்களே அங்கு படித்து வருகின்றனர். இதற்கு, வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த பள்ளியின் கட்டிடங்களை பராமரிப்பதில் அரசு காட்டிய மெத்தனமே முக்கிய காரணமாகும்.
அழிவின் விளிம்பில் இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பள்ளியை, தமிழக அரசு உரிய கவனம் எடுத்து மேம்படுத்த வேண்டும் என பெற்றோர்களும், ஆசிரியர்களும் முன்னாள் மாணவர்களும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த கோரிக்கை கேட்பாரற்று கிடந்ததால், சிதிலமடைந்த கட்டிடம் மற்றும் பள்ளி வளாகம் சமூக விரோதிகளின் ஆக்கிரமிப்பிற்குள்ளானது.
மறுபுறம், முழுக்க முழுக்க சிறுபான்மை சமூக மக்களின் கல்விக்காக வழங்கப்பட்ட அந்த இடத்தை வேறு பயன்பாட்டிற்காக கையகப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்த இடத்தின் ஒரு பகுதியில் முஸ்லிம் மாணவிகளின் நலனுக்காக காயிதே மில்லத் மகளிர் கல்லூரி துவங்கப்பட்டது. ஆனால், துவங்கப்பட்டதன் நோக்கத்திற்கு மாறாக சிறுபான்மை முஸ்லிம் மாணவிகள் இடஒதுக்கீடு அடிப்படையில் மட்டுமே அதில் சேர்த்து பயில முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
அதன் பின்னர் குறைந்த மாணவர் விகிதம் உள்ளிட்ட பல காரணங்கள் மூலம், அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றி, அந்த இடத்தை வேறு பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் ஆளும் அரசுகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. முன்னாள் மாணவர்கள், எஸ்டிபிஐ கட்சி மற்றும் சிறுபான்மை அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக கடந்த ஆட்சிவரை அந்த முயற்சிகள் தடுக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், தற்போதைய திமுக ஆட்சியில் அந்த இடத்தின் ஒரு பகுதியில் கட்டணம் செலுத்தி பயிற்சி பெறும் சிறு விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சி மையம் அமைக்கப் பட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் கூட மதரஸா-இ-ஆஸம் பெயர் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது மட்டுமின்றி, அந்த அரங்கில் மதரஸா-இ-ஆஸம் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கூட இலவச அனுமதி கிடையாது.
சிறுபான்மை மாணவர்கள் நவீன உயர் கல்வி பெறுவதற்காகவே சென்னையின் பிரதான அண்ணாசாலையில் இயங்கி வந்த மதரஸா-இ-ஆஸமை அரசிடம் ஒப்படைத்தார் நவாப் குலாம் கவுஸ்கான் பகதூர். ஆனால், அந்த நோக்கம் கொஞ்சம் கொஞ்சமாக பாழாக்கப்பட்டு வருகிறது. கல்விக்காக வழங்கப்பட்ட அந்த இடத்தை வேறு பயன்பாட்டிற்காக மாற்றுவது கண்டனத்திற்குரியது. இந்த முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, வரலாற்றுச் சிறப்புமிக்க மதரஸா-இ-ஆஸம் பள்ளியை புனரமைத்து, முஸ்லிம்களே நிர்வகிக்கும் வகையில் மிகச்சிறந்த கல்வி நிலையமாக அதனை உருவாக்க, அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், அந்த வளாகத்தில் சிறுபான்மை முஸ்லிம் சமூக மாணவர்கள் அதிகளவில் பயன்பெறும் வகையில், தொழிற்கல்வி நிறுவனம், பாராமெடிக்கல் கல்லூரி, முஸ்லிம் மாணவர்களுக்கான தங்கும் விடுதிகள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்திக் கொடுத்திட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.