திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு அன்பழகன் நகரை சேர்ந்தவர் புவனேஷ்வர் (27). சில நாட்களுக்கு முன் இவருடைய நண்பர் கிரண் என்பவர் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். அதைத் தடுக்க முயன்ற, புவனேஸ்வர் வெட்டப்பட்டார். படுகாயமடைந்த புவனேஸ்வர், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக மீஞ்சூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் புவனேஸ்வரை வெட்டிய மூவர், மீண்டும் புவனேஸ்வரைத் தேடி அவரது வீட்டிற்கு வந்து தேடினர். வீட்டில் இருந்தவர்களிடம் தகராறிலும் ஈடுபட்டனர். அப்போதுதான் நெஞ்சை பிசையும் ஒரு பாசப்போராட்டம் அங்கே காணக்கிடைக்காத காட்சியாக அமைந்தது. ஆம்.போகும் போதும் வரும் போதும் தெரு நாய்களுக்கு உணவளிப்பதை வழக்கமாக வைத்திருந்த புவனேஸ்வருக்கு நன்றியை தெரிவிக்கும் விதமாக ஒரு நாய், புவனேஸ்வர் வீட்டிற்குள் பாய்ந்து குரைத்தது.
புவனேஸ்வரை தேடிக்கொண்டு கத்தியுடன் வந்தவர்களை மேலும் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாத அளவுக்கு பாய்ச்சலை குறைக்காமல் குறைத்தபடியே இருந்தது அந்த பாசக்கார நாய். புவனேஸ்வரை தேடி வந்தவர்கள் இதனால் ஆத்திரம் அடைந்தனர். கொஞ்சமும் தாமதிக்காமல், மாறி மாறி கத்தியால் அந்த நாயை வெட்டினர். இதில் அதே இடத்திலேயே அந்த நாய் பரிதாபமாக உயிரை இழந்தது. இது குறித்து மீஞ்சூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அதேபகுதியை சேர்ந்த சங்கர் (23), பிரபாகரன் (22), ரோகித் (22) ஆகிய மூவரை கைது செய்து விசாரணைக்கு பின்னர் சென்னை புழல், மத்திய சிறையில் அடைத்தனர்.
நம்பி