திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது நேரில் வந்து மீட்பு பணிகளை மேற்கொள்ளாமல், பாதிக்கப் பட்டவர்களுக்கு தாமதமாக நிவாரண பொருட்களை வழங்க வந்ததாக அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மூர்த்தி ஆகியோரை முற்றுகையிட்டு மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் அண்மையில் கொட்டி தீர்த்த கனமழை மற்றும் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பேரழிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி ஆகியோர் வந்தபோது சாலையிலேயே அவர்கள் வந்த வாகனத்தை மீனவர்கள் மறித்தனர்.
புயல் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது உடனடியாக வந்து மீட்பு பணிகளை மேற்கொள்ளவும் ஆறுதல் கூறவும்
உரிய நேரத்தில் வராமல் கண் துடைப்புக்காக நிவாரண பொருட்களை வழங்க காலதாமதமாக வந்தீர்களா என மீனவ கிராம மக்கள் அமைச்சர்களைப் பார்த்து கேட்டனர். தொடர்ந்து அமைச்சர்களை முற்றுகையிட்ட மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணனும், மூர்த்தியும் மாவட்டம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டதால் ஒவ்வொரு பகுதிகளாக சென்று வர தாமதம் ஏற்பட்டதாக மீனவ கிராமத்து மக்களிடம் தெரிவித்தனர்.
இதனை அடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மீனவர்களை கிராம நிர்வாகிகள் தலையிட்டு சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் பேரழிவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை அமைச்சர்கள் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்,
” பழவேற்காட்டில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குறித்து கணக்கிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. 53 மீனவ கிராமங்களுக்கும் மீன்வளத்துறை அதிகாரிகள் சென்று கணக்கெடுக்கும் பணியை செய்கின்றனர்.
எண்ணூரில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு குறித்து ஆய்வு செய்யப்படும்,
இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார். அதேபோல் மீன்பிடி படகுகள், வலைகள் சேதம் குறித்து கணக்கெடுக்கும் பணி இரண்டுநாளில் முடிவடையும், அது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் மூர்த்தி, தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என தெரிவித்தார். மீனவ மக்கள் வேதனையும் கோபமுமாக முற்றுகையிட்ட போதும் அமைச்சர்கள் மூர்த்தியும் அனிதா ராதாகிருஷ்ணனும் பதற்றமடையாமல் மிகப் பொறுமையாக தங்களின் சூழ்நிலையை விளக்கியதோடு மீனவ மக்களை சமாதானப்படுத்தி நிலைமையை சரி செய்த பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்கி விட்டுச் சென்றனர்.
PKM