Madras Kural

சாலை விரிவாக்கமா- கனிமவள கொள்ளையா ?!

சாலை விரிவாக்க திட்டம் என்ற பெயரில் அதிகாரிகளின் துணையோடு ஏரியின் அடிமடியை வெட்டி சிதைத்து சட்ட விரோத கனிமவள கொள்ளையை சாதாரணமாக நடத்தி வருகிற கும்பலை என்ன செய்யப் போகிறது தமிழ்நாடு அரசு? திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடக்கிற இயற்கையை சீரழிக்கும் பேரழிவை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக கவனத்தில் வைத்து நடவடிக்கை மேற்கொண்டால் எதிர்வரும் மழைக்காலங்களில் நீர் நிலைகளை தாய்மையோடு கையிறுத்தி வைத்துக் கொள்ளலாம்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகேயுள்ள தடபெரும்பாக்கம் கிராமத்து ஏரிதான் மழைக்காலங்களில் தண்ணீரை தன்னகத்தே நிறுத்திப் பிடித்து விவசாய பாசனத்திற்காக, கால்நடைகளை பராமரிப்புக்காக பயன்பட்டு வருகிறது. சாலை விரிவு (எ) சாலை விரிவாக்க திட்டம் என்ற பெயரில் ஜேசிபி எந்திரம் வைத்து ஏரியில் 30 முதல் 40 அடி ஆழத்திற்கு குழியைத் தோண்டி (இத்தனை ஆழத்துக்கு ஏரியின் அடிமடியில் கை வைக்க சட்டத்திலும், விதிமுறையிலும் இடமே இல்லை என்கிறார்கள்) நூற்றுக்கணக்கான பெரிய லாரிகளில் சவுடு மண்ணை ஏற்றிக்கொண்டு ‌கள்ளச் சந்தையில் சாதாரணமாக விற்றே விடுகிறார்கள். வாங்கத்தான் போட்டியில் ஆட்கள் உள்ளனரே!

பகுதிவாழ் பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு தினமும் துடிதுடித்து கண்ணீர் வடிக்கிற நிலை தொடர்கிறதே! நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உருவாகி உள்ளதையும் சுட்டிக்காட்டும் பொதுமக்கள், இதுபற்றி பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும், “விதிமுறைகளின்படி (?!) ஏரியில் மண் அள்ளிச் செல்லலாம்” என்று ஊராட்சி மன்ற நிர்வாகம், கிராமசபா கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் கொண்டு வந்ததாக, ‘மண் அள்ளி மகான்கள்’ சொல்லித் திரிவதை பொதுமக்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

மேலும், “ஏரியில் மண் அள்ளினால், சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாதவாறு ஊராட்சி நிர்வாகம் பார்த்துக்கொள்ளும் என்று உறுதி கொடுக்கிறவர்கள், அந்த உறுதியை பொதுமக்களிடம் ஒப்புதல் பெற்று அதற்கான தீர்மான நகலை மாவட்ட ஆட்சியரின் பார்வைக்கு அனுப்பி வைத்தார்களா? பொதுப்பணித் துறை ஒப்புதல் கடிதமாவது மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டதா? ஏரியில் மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டு இருந்தால் எத்தனை சதுரஅடி மீட்டர், எத்தனை அடி ஆழம் மண்ணை எடுக்கலாம், எத்தனை லோடு வரை நாளொன்றுக்கு அனுமதி ?போன்றவற்றை மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தி அனுமதிக் கடிதம் கொடுத்ததா?” என்ற கேள்விகள் நிறையவே அணிவகுக்கிறது.

அதே கேள்விகளுடன் பொதுமக்கள் அதிகாரிகளை அணுகினால் (வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை) முறையான பதில் இல்லை என்கின்றனர் வேதனை குறையாமல். அதிகாரிகளின் துணையோடு நடக்கும் கனிமவளக் கொள்ளையை தமிழ்நாடு அரசு உடனே தடுத்து நிறுத்துவதோடு சமூக விரோதிகளுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தடபெரும் பாக்கம் ஏரியை தூர்வாரி பாசன பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தும் மக்கள், சட்டவிரோத கனிமவளக் கொள்ளையை விரைவில் தடுத்து நிறுத்தாவிட்டால் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடப் போவதாக எச்சரித்துள்ளனர்.

நம்பி

Exit mobile version