Madras Kural

விபத்தை ஏற்படுத்தி சீறிப்பாயும் சட்ட விரோத மணல் லாரிகள்…

சட்ட விரோதமாக சவுடு மண் ஏற்றி வந்த சரக்கு லாரி, ஒரு வீட்டின் மீது மோதியதால் மின்கம்பம் உடைந்து, வீடுகளில் இருந்த தொலைக்காட்சி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்ததால் குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட தடபெரும் பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியில் சாலை விரிவாக்க திட்டம் என்ற பெயரில் சட்ட விரோத கனிம வளக் கொள்ளை நடைபெற்று வருவதாக தொடர்ந்து பொதுமக்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. விதிகளை மீறி 30 முதல் 40 அடி ஆழத்திற்கு ஜேசிபி இயந்திரம் மூலம் ஏரியில் குழி தோண்டி நாள்தோறும் நூற்றுக்கணக்கான சரக்கு லாரிகளில் சவுடுமணலை அள்ளி, கள்ளச் சந்தையில் விற்கும் வேலை சிறப்பாகவே நடக்கிறது. தனியார் நிறுவனங்களின் ஆதரவோடு சவுடுமணல் கொண்டு செல்வதால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறித்து வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை விவசாயிகள் புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் கனிம வள கொள்ளையர்களுக்கு துணை போவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் ஏரியிலிருந்து சட்டவிரோதமாக சவுடு மண் ஏற்றி வந்த சரக்கு லாரிக்கு எதிரே ஜல்லிகற்களை ஏற்றி வந்த மற்றொரு சரக்குலாரி சாலையோரம் இருந்த மின் கம்பம் மீது மோதியதில் மின்கம்பம் உடைந்தது. அதனால் ஏற்பட்ட அதிர்வில், அதில் இணைக்கப்பட்டிருந்த உயர் அழுத்த மின்கம்பிகள் ஒன்றின் மீது ஒன்று உரசி தீப்பொறிகள் ஏற்பட்டது. வீடுகளில் இருந்த தொலைக்காட்சிகள், குளிர் சாதனப் பெட்டிகள், மின்விசிறிகள் போன்ற மின்சாதனப் பொருட்கள் சேதம் அடைந்ததால் அங்கு வசிக்கும் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். “சவுடு மண் ஏற்றிச் செல்லும் சரக்கு லாரிகளால் சாலைகள் சேதம் அடைவதோடு அந்தப் பகுதியில் விபத்துக்கள் அதிகரித்து வருவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்” என்ற பொதுமக்களின் கோரிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நம்பி

Exit mobile version