நக்சல்பாரிகள் மீதான நடவடிக்கையை முடுக்கிவிட தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த மக்கள்திலகம் எம்ஜிஆர், ‘ஆபரேசன் அஜந்தா’ என்ற பெயரில், தனி போலீஸ் குழுவை உருவாக்கினார். போலீஸ் குழுவுக்கு ஆபரேசன் அஜந்தா என்ற பெயரை எம்ஜிஆர் வைத்ததற்கும், நாற்பது ஆண்டுகளாக வேலூர் – திருப்பத்தூர் ஜோலார் பேட்டைக்கு வால்டர் தேவாரம் (பணி ஓய்வு டி.ஜி.பி.) நேரில் போய் அஞ்சலி செலுத்துவதற்கும் என்ன பின்னணி ? இதேநாளில்தான் அப்படியொரு துயர நிகழ்வு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.
திருப்பத்தூர் அடுத்த ஜோலார்பேட்டை அருகில் உள்ளது, வக்கணம்பட்டி கிராமம். இதே கிராமத்தைச் சேர்ந்தவர், சிவலிங்கம். 11 கொலை வழக்குகள் சிவலிங்கம் மீது இருப்பதாக போலீஸ் ரெக்கார்டில் உள்ளது. அந்த நிலையில்தான் சிவலிங்கம், கூட்டாளிகள் பெருமாள், ராஜப்பா, செல்வம், சின்னத்தம்பி ஆகியோர் தேடப்படும் நக்ஸல்பாரிகளாக போலீசார் அறிவித்தனர்.
அந்தநாள்… இதே ஆகஸ்ட் 6ஆம் தேதி (1980 ஆம் ஆண்டு).
இரட்டைக் கொலை வழக்கு தொடர்பாக வக்கணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிலரை, திருப்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான போலீஸ் டீம், காரில் ஏற்றிக் கொண்டு கிளம்பியது. போலீஸ் ஜீப்பில் இன்ஸ்பெக்டர் பழனிசாமியும் சில போலீசாரும் இருந்தனர்.
அதிகாலை ஐந்தரை மணி. சிவலிங்கத்தை ஏற்றிக் கொண்டு போன கார், சேலம் நெடுஞ்சாலையை தொட்டபோது, காரில் நாட்டு வெடிகுண்டு வெடித்தது. சிவலிங்கமும், அவர் கூட்டாளி சின்னத்தம்பியும் இதை பயன்படுத்திக் கொண்டு தப்பினர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி, ஏட்டு ஆதிகேசவலு, கான்ஸ்டபிள்கள் யேசுதாஸ், முருகன் மற்றும் சிவலிங்கத்தின் கூட்டாளிகள் செல்வம், ராஜப்பா மற்றும் பெருமாள் ஆகியோர் அதே இடத்தில் உயிரிழந்தனர். கான்ஸ்டபிள்கள் மாசிலாமணி, உன்னிகிருஷ்ணன் காயமடைந்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி, ஏட்டு ஆதிகேசவலு, கான்ஸ்டபிள்கள் யேசுதாஸ், முருகன் ஆகியோரின் இறுதி அஞ்சலி ஊர்வலத்தில் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் எம்ஜிஆர் கலந்து கொண்டு நடந்து வந்தார். தமிழ்நாடு முழுவதும் நக்சல்பாரி அமைப்பினரை முற்றாக ஒழிக்க, எம்ஜிஆர் முடிவெடுத்தார். அதன்படி, உயிரிழந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமியின் மகள் ’அஜந்தா’ பெயரில், ஆபரேசன் அஜந்தா தொடங்க உத்தரவிட்டார். ஆபரேசன் அஜந்தாவை வால்டர் ஐ.தேவாரம் தலைமையிலான போலீஸ் டீம் நிர்வகித்தது. பல நக்சல் பாரிகள் இதில் கொல்லப்பட்டனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி, ஏட்டு ஆதிகேசவலு, கான்ஸ்டபிள்கள் யேசுதாஸ், முருகன் ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கு சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு போனது. சிவலிங்கமும், சின்னத்தம்பியும் சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
காவல்துறையின் தலைமை இயக்குநராக (டிஜிபி) பொறுப்பு வகித்து, பணி ஓய்வு பெற்று 25 ஆண்டுகளுக்குப் பின்னரும் இந்த அஞ்சலிநாள் நிகழ்வுக்கு தவறாமல் நேரில் வந்து சிறப்பிக்கிறவர் வால்டர். 39 ஆண்டுகள் நேரில் வந்தவர், 2020 -21- 2022 ஆகிய ஆண்டுகளில் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் பங்கேற்கிறார். தமிழ்நாடு காவல்துறையினர் இந்தநாளை மிக முக்கியநாளாக கருதுகின்றனர்.
ந.பா.சேதுராமன்