Madras Kural

‘மேட்ரிமோனி வெப்சைட் மோசடி’- போலீஸ் எச்சரிக்கை…

மேட்ரிமோனி இணையதளம் மூலம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணிடம் பணம் மோசடி செய்த நைஜீரியாவை சேர்ந்தவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர்தான் பாதிக்கப்பட்ட பெண் ஆவார். அவர் அளித்த புகாரில், “மேட்ரிமோனி இணையதளத்தில் திருமணத்திற்காக பதிவு செய்தேன். அதன்பிறகு ஆஷிஸ் சன்னார் (மாற்று பெயர்) என்பவருடன் வாட்ஸப்பில் தொடர்பு கொண்டு குறுஞ்செய்தி அனுப்பி பேசத் தொடங்கினேன்.
பின்னர் அந்த நபர், திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து எனக்கு பரிசுகளை அனுப்ப விருப்பம் தெரிவித்தார்.

அதன்பேரில், புதுடெல்லி விமான நிலையத்திலிருந்து ஒருவர் என்னை தொடர்பு கொண்டு, ‘மேற்படி தங்களுக்கு ஒரு பார்சல் வந்துள்ளது, அந்த பார்சலை பெற்றுக் கொள்ள வேண்டி பணம் அனுப்புங்கள்’ என்றதை உண்மையென நம்பி பல்வேறு வங்கி கணக்குகளில்; ரூபாய் 10லட்சத்து 33ஆயிரத்தை அனுப்பி வைத்தேன். அதன்பிறகுதான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து புகார் அளித்தேன்.” இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப் பிரிவு, சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது.சந்தேகத்திற்குரிய வங்கிக் கணக்கின் KYC details மற்றும் வங்கி கணக்கு விவரங்கள், செல்போன் எண் பெறப்பட்டது. அந்த வங்கி கணக்கு விவரத்தில் பீஹார், மத்திய பிரதேசம். தெற்கு டெல்லி ஆகிய இடங்களில் வசிக்கும் போலி வங்கிக் கணக்கு வைத்திருப்போர் இருப்பதாக தெரிய வந்தது. உத்தரபிரதேசத்தின் நொய்டா செல்போன் எண்கள் செயல்பாட்டில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக தனிப்படை போலீசார் உத்தரபிரதேசம் சென்று மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபரை (Thankgod Chukwuemeka Ikedinobi, M/A -33 -S/o.Nnamdikediobi, Dankaur, Gautham Buddha Nagar, Uttar Pradesh-) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 8 செல்போன்கள், 1 லேப்டாப், 3 டெபிட் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை, எழும்பூர், கூடுதல் தலைமை பெருநகர நீதிபதி முன் குற்றஞ்சாட்டப் பட்டவர் நேர்நிறுத்தப்பட்டு, சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.

“மேட்ரிமோனி இணைய தளத்தில் திருமண வரனுக்காக பதிவு செய்பவர்களை குறிவைத்து திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து ஏமாற்றி மோசடியில் சிலர் ஈடுபடுகின்றனர். மேலும் மதிப்புமிக்க பார்சல்கள் கொரியர் மூலம் அனுப்பியதாக பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றி பண மோசடி செய்கின்றனர். அதேபோல் சுங்கத்துறை அதிகாரி போல் ஏமாற்றி பாதிக்கப்பட்டவரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பல்வேறு வங்கிக் கணக்குகளில் சுங்க கட்டணம் மற்றும் அபராதத்தொகையை தெரிவித்து பணத்தை செலுத்த வைக்கின்றனர்.
இதுபோன்ற மேட்ரிமோனி இணையதள பரிசு மோசடி குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாகவும், விழிப்புடனும் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 1930 என்ற எண்ணை அணுகலாம். ஆன்லைனில் www.cybercrime.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் புகார் அளிக்கலாம்” -என சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சேரான்

Exit mobile version