Madras Kural

கரி கிருஷ்ணர் -சிவபெருமான் சித்திரை சந்திப்பு|

சித்திரை திருவிழாவை முன்னிட்டு பொன்னேரியில் அரியதொரு நிகழ்வாக நடைபெற்றது ஹரிஹரன் சந்திப்பு. பெருந்திரளான பக்தர்கள் ஓம் நமோ நாராயணா ஓம் நமச்சிவாயா என்ற மந்திரத்தை உச்சரித்தபடி பக்தி பரவசம்!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சௌந்தரவல்லி தாயார் சமேத அருள்மிகு ஸ்ரீ கரி கிருஷ்ண பெருமாள் திருக்கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு 10 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்று விழா 1ஆம் தேதி நடைபெற்றது.

ஐந்தாம் நாளான இன்று பரத்வாஜ் முனிவருக்கும்-அகத்திய முனிவருக்கும், மகாவிஷ்ணுவும்- சிவபெருமானும் ஒரு சேர காட்சி தந்து அருளிய புராண முக்கிய நிகழ்வை போற்றும் வகையில் கரி கிருஷ்ண பெருமாள் சிவபெருமானை சந்திப்பதற்காக நேற்று இரவு கருட வாகனத்தில் புறப்பட்டு பரத்வாஜ் ஆசிரமம் வந்தடைந்தார், இதனைத் தொடர்ந்து விஷ்ணு பகவானை சந்திப்பதற்காக அங்கு கோவில் கொண்டுள்ள அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் பெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தனது துணைவியார் அருள்மிகு ஸ்ரீ ஆனந்த வள்ளி தாயார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுடன் மாடவீதி வந்தடைந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக சிவாச்சாரியார்கள் அகத்தீஸ்வரர் பெருமானின் திருமேனியை அலங்கரித்த மாலை உள்ளிட்ட சீர்வரிசைகளுடன் சென்று கருட வாகனத்தில் ராஜ பராக்கிரத்துடன் வீற்றிருந்த கரி கிருஷ்ண பெருமாளுக்கு சமர்ப்பணம் செய்து வழிபட்டனர். இதனை அடுத்து வைணவ சான்றோர் கரி கிருஷ்ண பெருமாள் திருமேனியை அலங்கரித்த மலர் மாலை அடங்கிய சீர் வரிசையுடன் ரிஷப வாகனத்தில் மாப்பிள்ளை முறுக்குடன் மைத்துனர் சீர்வரிசையை புன்னகையுடன் வரவேற்று ஏற்றுக்கொண்டு அரி – அரன் இருவரும் ஒன்றாக சேர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருளினர்.

இந்தியாவில் உள்ள எந்த திருக்கோவிலிலும் நடைபெறாத இந்த அரிய நிகழ்வில் கலந்து கொண்ட பெரும் திரளான பக்தர்கள் ஓம் நமோ நாராயணா ஓம் நமச்சிவாய என்ற திருமந்திரத்தை உச்சரித்தபடி உற்சவ மூர்த்திகளாக எழுந்தருளிய சிவ பெருமானையும்-மகாவிஷ்ணுவையும் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.

அப்போது விண்மீன்கள் வானத்திலிருந்து உதிர்ந்து பூ மழையாக ஆனந்தத்தில் பூமியில் விழுவது போன்று வான வேடிக்கைகள் நடைபெற்றன. முன்னதாக சந்திப்பு உற்சவத்தை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ சௌந்தரவல்லி தாயார் சமேத அருள்மிகு ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாளுக்கும்-இதேபோன்று அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் பெருமாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீப ஆராதனைகள் நடைபெற்றன. இந்த சித்திரை திருவிழாவை முன்னிட்டு நகரின் பல்வேறு இடங்களிலும் தன் ஆர்வலர்கள், பக்தர்களுக்கு அன்னதானங்கள் வழங்கினர், சித்திரை திருவிழாவின் 7 ஆம் நாளான நாளை தேர் திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

பொன்.கோ.முத்து

Exit mobile version