
திருவள்ளூர் அருகே கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் பாறை துவல்களுடன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வட்டகை வெடித்து சரக்குந்து தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு சூழல் உண்டானது.
ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியில் இருந்து -திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நோக்கி கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும், பாறை துவல்கள்களுடன் தண்டலச்சேரி என்னுமிடத்தில் சென்று கொண்டிருந்த சரக்குந்தின் பின்புற வட்டகை ஒன்று வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த சரக்குந்து தாறுமாறாக கவரப்பட்டை நெடுஞ்சாலையில் ஓடியது.
இதனால் எதிர் முனையில் வந்து கொண்டிருந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர், மேலும் சரக்குந்தின் முன் பகுதியில் தீ பற்றி எரிவதைக் கண்டு பதற்றம் அடைந்த சரக்குந்தின் ஓட்டுனர் பாஸ்கர் உயிரையும் பொருட்படுத்தாமல் அறிவுப்பூர்வமாக சரக்குந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே குதித்து தப்பினார். இதனால் பெரும் சாலை விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து நிகழ்வு இடத்திற்கு விரைந்து வந்த கும்மிடிப்பூண்டி தீயணைப்பு வீரர்கள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த சரக்குந்தை ரசாயனம் கலந்த தண்ணீரைக் கொண்டு பீய்ச்சு அடித்து பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர், இதனிடையே இந்த தீ விபத்து தொடர்பாக கவரப்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் சென்று கொண்டிருந்தபோது வட்டகை வெடித்து சரக்குந்து தீ பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தோழர்தோழன்