Madras Kural

கொசஸ்தலை ஆற்றில் மீனவர்கள் தொடர் பலி- பின்னணி…

திருவள்ளூர் அருகே கொசத்தலை ஆற்றில் படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு. நீரோட்ட பாதையில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதின் காரணமாகவே விபத்து ஏற்பட்டதாக குற்றச்சாட்டு. மீனவர் உடலுடன் எண்ணூர் பகுதி மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

சென்னை எண்ணூர் முகத்துவாரம் குப்பத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (30) மீனவர். வழக்கம்போல் மீன் பிடிக்க தனது படகில் சென்றவர், நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், படகுகளில் சென்று அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் உள்ள கொசத்தலை ஆற்றில் அவரது படகு கவிழ்ந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து ஆற்றில் குதித்த மீனவர்கள்; மாயமான விக்னேஷை தேடி வந்தனர். நீண்டநேர தேடலுக்குப் பின்னர், சேற்றில் புதைந்து கிடந்த அவரது உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

“வடசென்னை அனல்மின் நிலைய மூன்றாம் நிலை விரிவாக்க திட்டத்திற்காக கடலும், ஆறும் சந்திக்கும் முகத்துவாரத்திற்குச் செல்லும் மையப் பகுதியில்; நீரோட்ட பாதையில் மண்ணை நிரப்பி; சிமெண்ட் கலவையைக் கொண்டு உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதால்; அடிக்கடி இதுபோன்ற விபத்துக்கள் நடக்கிறது. மீனவரின் உயிரிழப்பிற்கு தமிழக மின்வாரி அலட்சியமே காரணம்” என, மீனவமக்கள் குற்றம் சாட்டினர். எண்ணூர் – அத்திப்பட்டு இடையே ஆற்றின் குறுக்கே செல்லும் மேம்பாலத்தில் உயிரிழந்த மீனவரின் சடலத்துடன் மறியலிலும் ஈடுபட்டனர். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் அப்போது வலியுறுத்தினர். இந்த போராட்டத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார், சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டார். மீனவர்களின் கோரிக்கை குறித்து அரசிடம் பேசுவதாக தெரிவித்தும், அதனை ஏற்க மறுத்து மீனவர்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

பொன்.கோ.முத்து

Exit mobile version