
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு பவானிஅம்மன் திருக்கோயிலில் சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை வழிபட ஆடிமாதத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
ஆடி மாதம் முதல் வாரம் தொடங்கி 14வாரங்கள் இந்த பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம் விழா கோலம் பூண்டிருக்கும். இந்த ஆலயத்தில் பெண் பக்தர்களுக்கு மங்கலப்பொருட்களை வழங்கும் திட்டத்தை இந்து சமயங்கள் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
ஆடி மாதம் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 5 அம்மன் ஆலயங்களில் 20 ஆயிர பெண் பக்தர்கள் உள்பட ஒட்டு மொத்தமாக ஒரு லட்சம் பக்தர்களுக்கு மங்கலப்பொருட்கள் வழங்கப்படும் என்ற சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் இந்த திட்டத்தை பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
பெண் பக்தர்களுக்கு கூழ் வார்த்து, மங்கலப் பொருட்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு பேசினார்.
“பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் திருக்கோவில் பணிகளுக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக அனுமதி வழங்கப்படாமல் இருந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிதி ஒதுக்கீடு செய்து 173.58 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன.பக்தர்கள் தங்கும் விடுதி, வரிசை மண்டபம், அன்னதான கூடம், சுகாதார வளாகம், ராஜ கோபுரங்கள், உப சன்னதிகள், பிரகார மண்டபம் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. திருச்செந்தூர் முருகன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் சிறு அசம்பாவிதம் கூட ஏற்படாமல் திராவிட மாடல் ஆட்சி நடத்தி முடித்துள்ளது. பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் வாகன நிறுத்தும் இடத்திற்காக 6 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
“அதேபோல், திருவிழா காலங்களில் திருத்தணி முருகன் கோவிலில் கட்டணம் ரத்து, திருப்பரங்குன்றம் திருவிழாவில் அண்மையில் கட்டணம் ரத்து போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 1119 அம்மன் திருக்கோவில்கள், 131 முருகன் கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. 4 ஆண்டு கால திமுக ஆட்சியில் 7727.47 கோடி ரூபாய் மதிப்பிலான, 7863.08 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு நபர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. திருக்கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் பிரத்தியேக கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டு மீட்கப்பட்டு வருகின்றன. 2,04,885.45 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. திருக்கோவில் பணிகளுக்காக 12,876 திருக்கோவில் களுக்கு திட்ட அனுமதி வழங்கப் பட்டுள்ளது. திருத்தணி முருகன் கோவிலுக்கு மாற்றுப்பாதை அமைக்கும் பணிகள், சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு செல்லும் சாலை விரிவாக்க பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்திலும் சாலை விரிவாக்கம் மேற்கொள்ளப்படும்’ என்றார். நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொகுப்பு : பொன்.கோ.முத்து