Madras Kural

கோயில் நிலத்தை விற்ற அதிகாரிகள்…

காரைக்காலில் ஜிப்மர் மருத்துவமனைக்கு மேற்கில் புகழ்பெற்ற பார்வதீஸ்வரரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு நஞ்சை, புஞ்சை நிலங்களும், தோப்பு துறவுகளும் உள்ளன. கோயில் நிலங்களை ஓட்டல், பேக்கரி, ஷோரூம்கள், துணிக்கடைகள், சூப்பர் மார்க்கெட், தனியார் எலும்பு முறிவு மருத்துவமனை, காம்ப்ளக்ஸ் என பல வகைகளில் பலர் ஆக்கிரமித்துள்ளனர்.

குறைந்த வாடகையாக இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதை முறையாக செலுத்தவில்லை. கோயில் இடத்தில் வீடுகட்டி வாடகைக்கு விடுகிற கில்லாடிகளும் இங்கு வசிக்கின்றனர். இந்நிலையில் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை 192 குடியிருப்பு மனைகளாக்கி ஒரு மோசடிக்கும்பல் விற்று 15 கோடி ரொக்கத்தை சுருட்டியிருக்கிறது.

துணை மாவட்ட ஆட்சியர் ஜான்சன், தாசில்தார் மதன்குமார், சர்வேயர் ரேணுகாதேவி, விஏஓ சுகதேவ், கிளார்க் செந்தில்குமார், சர்வே உதவியாளர் பிரபு என்று வருவாய் அலுவலக கில்லாடிகள் இந்த பிளாட் விற்பனை மோசடிக்கு தலைமை வகித்திருக்கின்றனர்.

“புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமிதான் கோயில் நிலத்தை மனைகளாக்கி, விற்று காசு புரட்டச் சொன்னார்” என்று முதல்வர் ரெங்கசாமிக்கு நெருக்கமாக காட்டிக் கொள்கிற புளியங்கொட்டை சாலை ஜேசிபி ஆனந்த், எம்.ஜி.நகர் 4 ஸ்கொயர் ஆனந்தன், போட்டோகிராபர் ‘பாரீஸ்’ ரவி என்கிற ரவிச்சந்திரன், திருநள்ளாறு டாக்குமெண்ட் ரைட்டர் கார்த்தி ஆகியோர் சகட்டுமேனிக்கு அளந்து விடுவது பலரை யோசிக்க வைத்திருக்கிறது.

மோசடி வரைபடம், மனைப்பட்டா, அரசு வங்கிக் கணக்கில் பணம் செலுத்த ஏதுவாக துணை மாவட்ட ஆட்சியர் ஜான்சன் கையெழுத்து போட்ட ஒரு ‘செலான்’ என பல்வேறு விவகாரங்கள் இதன் பின்னணியில் சொல்லப்படுகிறது.

இந்த மோசடிக்கு அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகனின் நம்பிக்கைக்குரிய சிவராமன், திருமலைநாதன் போன்றோர் முக்கிய காரணியாக வலம் வந்ததால் பலருக்கும் சந்தேகம் எழவில்லை என்பது இதன் இன்னொரு நகர்வாக பார்க்கலாம்.

மொத்தத்தில் 30 பிளாட்டுகளின் சாவியும் பத்திரமும் அமைச்சர் கையால் வழங்கப்படும் எனச் சொல்லப்பட்டதால் பலரும் மனைகளை போட்டி போட்டு வாங்கினர்.

4 ஸ்கொயர் ஆனந்தனுக்கு 4 மனை, அவரது மாமியார் பெயரில் 4 மனை, பாரீஸ் ரவி மற்றும் அவரது மனைவி பெயரில் 8 மனை, பட்டா பிரிவு கிளார்க் செந்தில் குமாருக்கு 10 மனை என பங்கு போட்டிருக்கின்றனர். ”டின்டாங்” ஒயின்ஸ் செந்தில், இட்லிக்கடை ரமேஷ், சுரக்குடி திவ்யா போன்றோரிடம் மீதி மனைகளை மளமளவென்று விற்றுள்ளனர்.

பணத்தை சர்வேயர் ரேணுகாதேவி மற்றும் ஜான்சனின் அறிமுகம் உள்ள மூன்று பெண்களின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளனர்.

இது தவிர வீட்டு மனைக்காக பலரிடம் லட்சக்கணக்கில் வசூலித்து சொன்னபடி மனைகளைத் தரவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. பாதிக்கப்பட்டவர்கள் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் டாக்டர் டி. மணிகண்டனிடம் புகாராக தெரிவித்தனர். இதுகுறித்து நேரடி விசாரணையைத் தொடங்கிய கலெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டார்.

போலீசில் இருக்கும் கறுப்பாடுகள் சிலவற்றின் உதவியுடன், துணை மாவட்ட ஆட்சியர் ஜான்சன், ஜேசிபி ஆனந்தன், 4 ஸ்கொயர் ஆனந்தன், பாரீஸ் ரவி ஆகியோர் தப்பியது தெரியவர, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மணீஷ் ஐபிஏஸ், களத்தில் குதித்தார். முதற்கட்டமாக பெண் சர்வேயர் ரேணுகா தேவி, திருநள்ளாறு டாக்குமெண்ட் ரைட்டர் கார்த்தி, திருமலைநாதன், சர்வே உதவியாளர் பிரபு கைது செய்யப் பட்டனர். முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மணீஷ் ஐபிஎஸ், தமிழ் அறியாதவர் என்பதால், இந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள், ஆதாரங்கள் அவருக்கு முழுதாக வழங்கப்படவில்லை.இதனால் எரிச்சலுற்ற முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மணீஷ், காவல் தலைமையகத்தில் புகார் செய்தார். காரைக்கால் போலீசாரை நம்பாமல், புதுச்சேரி கவர்னர் கைலாஷ் நாதன் புதுச்சேரியிலிருந்து சைபர் கிரைம், STF. (கமாண்டோ போலீஸ்)போலீசாரைக் கொண்ட தனிப்படையை அனுப்பி குற்றவாளிகளை சிறையிலடைக்க காவல்துறை தலைமையகத்துக்கு உத்தரவிட்டுள்ளதால் கோயில்மனை மோசடி விவகாரம் மேலும் விறுவிறுப்பு அடைந்துள்ளது.

இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தி.மு.க. விடுதலை சிறுத்தைகள் மௌனம் சாதித்து வருகிறது. எதிர்க்கட்சிகளின் இந்த மௌனம் பொதுமக்களுக்கு பல்வேறு சந்தேகங்களை உருவாக்கியிருக்கிறது.

சின்ன குண்டூசிப் பிரச்னைகளுக்கு கூட போராட்டம் ஆர்ப்பாட்டம், மறியல் என்று குரல் கொடுக்கும் எதிர்க்கட்சிகள் காரைக்கால் நகரின் நடுவே பலகோடி மதிப்புள்ள கோயில் நில மோசடியில் ஏன் மௌனம் சாதிக்கின்றன? காங்கிரஸ், தி.மு.கவின் இந்த மௌனத்தின் பின்னணி குறித்து புதிய தகவல் ஒன்றும் பொதுமக்கள் மத்தியில் பரவி வருகிறது.

காங்கிரஸ், தி.மு.க., கட்சிகள் மீது ஏற்கெனவே கோயில் நில அபகரிப்பு குற்றச்சாட்டுக்கள் உள்ளன. கோயில் நில அபகரிப்பு மோசடியானது புதுச்சேரியில் கடந்த 2016 -இல் காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு இருந்தபோதே முளைத்த பழைய விவகாரம்.

வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயில், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில், காரைக்கால் கைலாசநாதர் கோயில், வரிச்சிக்குடி சிவன் கோயில், திருப்பட்டினம் பெருமாள் கோயில், புதுச்சேரி காமாட்சியம்மன் கோயில், புதுச்சேரி பெருமாள் கோயில் நிலத்தை “பலருக்கும் பங்கிட்டதாக” நாராயணசாமி தலைமையிலான அரசு மீது புகார்கள் எழுந்தன.

இப்போது இதைக் கிளறினால், “காங்கிரஸ், தி.மு.க. கட்சிகளைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் சிலரும் சிக்குவார்கள். அதனால்தான் காங்கிரஸ், தி.மு.க. மௌனம் சாதிக்கிறது” என அரசு அதிகாரிகள் தரப்பில் முணுமுணுப்பு பரவி வருகிறது.

பொதுமக்களின் மனதில் அலை மோதும் சந்தேகங்களாகவும், அரசியல்வாதிகளிடம் பொதுமக்கள் கேட்கும் நியாயமாகவும் இருப்பது இதுதான்!

தவறுகள் நடந்தபோது மெளனமாக இருக்கிறீர்கள். தவறுகளை தடுக்காமல், கண்டிக்காமல் மௌனமாக இருக்கிறீர்கள். தவறுகள் கண்டு பிடிக்கப்படும்போதும் மெளனமாக இருக்கிறீர்கள். தவறுகள் ஊர்ஜிதம் ஆகியும் மௌனமாகவே இருக்கிறீர்கள்.

புதுவை மாநில அரசியல் கட்சிகள் “தேசிய நீரோட்ட ஒற்றுமையுடன்” ஓத்துழைப்பது என்பதாக இந்த மௌனத்தின் பின்னணி ஆகிவிடாதா?

அரசியல் கட்சிகளில் “பாம்பும் சாகாமல், தடியும் உடையாமல்” என்பது போல மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அறிக்கை விட்டு அமைதியாகிவிட்டார்.

மற்றபடி ‘முதல்வர் ரங்கசாமியை எதிர்ப்பது மட்டுமே அரசியல் என்கிற கொள்கையுடைய’ முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., புதுச்சேரி அரசியலில் ”அச்சு அசலாக என்.ஆர். காங்கிரசின் தோழமைக் கட்சி போல” நடக்கிற எதிர்கட்சித் தலைவரும் தி.மு.க.மாநில அமைப்பாளருமான சிவா போன்றோர் இனியாவது வாய் திறப்பார்களா?

‘சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும்’ என்ற வாசகம்தான் நினைவுக்கு வருகிறது.

Exit mobile version