திருவள்ளூர் அருகே மூன்று தினங்களுக்கு முன்பு மகிழுந்தில் (கார்) கடத்தப்பட்ட மாற்றுத்திறனாளியின் கதி என்னவென்று இதுவரையிலும் தகவல் இல்லை. இதுகுறித்து உரிய துப்பு கிடைக்காமல் காவல்துறையினர் திணறுவதால் உறவினர்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம், நெடுவரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்.மாற்றுத் திறனாளி. மூன்றுசக்கர வாகன உதவியுடன் நெகிழி கழிவுகள், காலி மதுபாட்டில்களை சேகரித்து விற்று கிடைக்கும் வருவாயில் மனைவியுடன் வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். கடந்த ஞாயிறன்று வழக்கம்போல் தொழிலுக்கு சென்றுவிட்டு மூன்று சக்கரவாகனத்தில் வீடு திரும்பிய போது, சென்னிவாக்கம் என்ற இடத்தில் மர்ம நபர்கள் குண்டுக்கட்டாக ராஜேந்திரனை தூக்கி ஆந்திர பதிவெண்கொண்ட மகிழுந்தில் கடத்திச் சென்றுள்ளனர்.
சம்பவத்தை நேரில் கண்டவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அவரது மனைவி பொன்னேரி போலீசில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மாற்றுத் திறனாளியான ராஜேந்திரனை கடத்திய கும்பல் குறித்தும் கடத்தலுக்கு பின்னணி குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிட்னி திருடும் கும்பலால் ராஜேந்திரன் கடத்திச் செல்லப்பட்டாரா என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது. ராஜேந்திரன் கடத்தப்பட்ட தகவலறிந்ததும் ஏராள மாற்றுத் திறனாளிகள், கடந்த மூன்று நாட்களாக பொன்னேரி காவல் நிலைய பகுதிக்கு வந்து, ராஜேந்திரன் குறித்து விசாரித்தபடி வருகின்றனர்.
P.K.M.