Madras Kural

பாமக உட்கட்சி மோதல்| இன்று முக்கிய முடிவு|

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இன்று முக்கிய சட்டமுடிவை மேற்கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பா.ம.க.,வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதலின் அடுத்த கட்டமாக, “தேர்தல் ஆணையத்தில் போலி ஆவணங்களை அன்புமணி ராமதாஸ் கொடுத்துள்ளார்” என்று டில்லி போலீசில், மருத்துவர் ராமதாஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

கட்சியின் சின்னமான மாம்பழம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக, சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து, மருத்துவர் ராமதாஸ் தரப்பு இன்று முடிவெடுக்க உள்ளது. பா.ம.க., தலைவராக அன்பு மணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக, அன்புமணி ராமதாஸ் தரப்பில் தொடர்ந்து சொல்லி வருகிற நிலையில்; கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாசின் இந்த முன்னெடுப்பு; முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

அன்புமணி தரப்பினரின், ‘கட்சித் தலைவர் அன்புமணிதான்’ என்ற வாதத்தை எதிர்த்து, மருத்துவர் ராமதாஸ் தரப்பு தொடர்ந்த வழக்கை டில்லி உயர் நீதிமன்றம் விசாரித்தது. பின்னர், சிவில் நீதிமன்றத்தை அணுகும்படி மருத்துவர் ராமதாஸ் தரப்புக்கு அறிவுறுத்தியது.

அதே வேளையில், தேர்தல் ஆணையத்தை கண்டித்து, டில்லி ஜந்தர் மந்தரில் ராமதாஸ் ஆதரவாளர்கள் கடந்த 4-ஆம் தேதி போராட்டம் நடத்தினர். அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, டில்லி போலீஸ் துணை கமிஷனரிடம், மருத்துவர் ராமதாஸ் தரப்பிலிருந்து, பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி புகார் மனு அளித்தார்.
“பா.ம.க., தலைவர் அன்புமணியின் பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில், அவர் தாக்கல் செய்த போலி ஆவணங்கள் அடிப்படையில், அவரை தலைவராக தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. போலி ஆவணங்கள் வாயிலாக, பா.ம.க., தலைமை அலுவலகத்தின் முகவரியையும், தேர்தல் ஆணையத்தில் அன்புமணி மாற்றியுள்ளார். பா.ம.க., நிறுவனரான என்னிடம் (மருத்துவர் ராமதாஸ்) இருந்து கட்சியை பறிக்கும் முயற்சிதான் இது. இந்தச் செயலானது, ஜனநாயகத்திற்கும், சட்டத்திற்கும்; எதிரானது. போலி ஆவணங்கள் அளித்த அன்புமணியிடம் விசாரணை நடத்த வேண்டும். அன்புமணி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. எனவே, தேர்தல் ஆணையத்தில் போலி ஆவணங்களை ஒப்படைத்த உண்மை குற்றவாளிகளை தண்டிக்கவும், நீதி கிடைக்கவும், இந்த வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும்” இவ்வாறு மருத்துவர் ராமதாஸ் சார்பில் அளித்துள்ள மனுவில் ஜி.கே.மணி மூலமாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மனு குறித்து ஜி.கே.மணி பேசியபோது, “பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கையெழுத்திட்ட புகார் கடிதத்தை, டில்லி போலீஸ் துணை கமிஷனரிடம் வழங்கியுள்ளோம். கடந்த ஐந்து மாதங்களாக, எங்கள் தரப்பில் உண்மையான ஆவணங்களை அளித்தும், மருத்துவர் ஐயாவுக்கு தேர்தல் கமிஷன் துரோகம் செய்துள்ளது. ஒரு தரப்புக்கு ஆதரவாக நடந்து கொண்டால், தேர்தல் கமிஷன் மீது யாருக்கும் நம்பிக்கை வராது. தேர்தல் கமிஷனரும், அன்புமணியும் கூட்டு சேர்ந்து, இந்த சதியை செய்துள்ளனர். எனவே, அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்த கேட்டுள்ளோம். வரும் சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி பேச்சை ஐயா ராமதாஸ் தான் நடத்துவார். தற்போதுள்ள பிரச்னை மற்றும் சின்னம் தொடர்பாக, சிவில் நீதிமன்றத்தை அணுகுவது குறித்து இன்று (டிசம்பர் 7) முடிவு செய்வோம்” என்றார்.

பா.ம.க., செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு இது குறித்து பேசும்போது, “மருத்துவர் அன்புமணியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், எந்த முகாந்திரமும் இல்லாமல், டில்லி போலீசில் ஜி.கே.மணி பொய்ப்புகார் கொடுத்துள்ளார். இது, சட்ட விரோதம். உண்மைக்குப் புறம்பானது. பா.ம.க.,வை கைப்பற்றும் உள்நோக்கத்துடன் ஜி.கே.மணியும், அவரது மகனும் செயல்பட்டு வருகின்றனர். உடனடியாக அவர் தன் கருத்துகளை திரும்பப் பெற வேண்டும், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையெனில்; அவர் மீது அவதூறு வழக்கு தொடர்வோம். பா.ம.க. வில் பிரச்சினை ஏற்பட்ட பின் எடுத்த அனைத்து முயற்சிகளிலும், அவர்கள் (ராமதாஸ் தரப்பு) தோல்வி அடைந்துள்ளனர். அதனால் என்ன செய்கிறோம் என்று தெரியாமல், அன்புமணி மீது களங்கம் கற்பித்து வருகின்றனர்” என்றார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான நேரம் நெருக்கமாக உள்ள இந்த சூழலில், பாமக தொண்டர்கள் இந்த போட்டிச் சூழலால் மிகுந்த வேதனையில் இருக்கின்றனர்.

ந.பா.சே.

Exit mobile version