Madras Kural

யாரையாவது நியமித்துப் போங்கள்|

யாரையாவது நியமித்துப் போங்கள்.😡

ஒரு மாநில முதலமைச்சர் நினைத்தால் அவர் அதிகார வரம்புக்குட்பட்ட எந்த பதவிக்கும் யாரையும் நியமிக்கலாம்.
எந்தப் பெயரிலாவது புதிய பதவியையும் உருவாக்கலாம்.

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்ற பதவியை புதிதாக யாரும் உருவாக்க முடியாது. அது ஏற்கெனவே இருக்கிற முக்கிய பதவி. மாநிலங்களை ஆளுகிற மாநிலக் கட்சிகள் அனைத்துமே தங்களுக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஒருவரை டெல்லிக்கு அனுப்பி வைக்கும்.
நேர்முக உதவியாளர், தனிச்செயலர், டைப்பிஸ்ட், சுருக்கெழுத்தாளர் உள்ளிட்ட பலர் டெல்லி பிரதிநிதியின் பணிகளுக்கு உதவியாக இருப்பர். தனி அலுவலகம், மாநிலஅமைச்சர் தகுதிக்கு உண்டான அந்தஸ்து என பணிக்காலம் முழுவதும் கவனித்து கொண்டாடப்படும் ஒரு பதவி அது.

அப்படி என்னதான் டெல்லி சிறப்புப்
பிரதிநிதிகள் செய்கிறார்கள்?
உதாரணமாக :
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி படகுகளை பறித்துச் சென்றுவிட்டதா? பதற்றமே படாமல் முதலமைச்சரோ தலைமைச் செயலரோ டெல்லி பிரதிநிதியை ஹாட் லைனில் பிடித்து தகவலை சொல்லிவிட்டால் போதும். ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் மாண்புமிகு ஜெய்சங்கரை, தமிழகத்துக்கான டெல்லி பிரதிநிதி நேரில் பிடித்து பிரச்சினையை பேசி நல்லவிதமாக முடித்து விடுவார்.

அப்படி தகவலை பரிமாறிக்கொள்ளும் போது, “இலங்கை கடலோர காவல்படை ஏன் இப்படி தொடர்ந்து செய்து வருகிறது, தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்குமான மோதல் போக்கின் அடிப்படை என்ன, எந்த ஆண்டிலிருந்து இப்படி நடக்கிறது?” என்று வெளியுறவு மாண்புமிகு, நம்முடைய டெல்லி பிரதிநிதி மாண்புமிகுவிடம் கேட்கிறார் என்றே வைத்துக்கொள்வோம்… கச்சத்தீவு தொடங்கி, கடல் எல்லை, பண்டார நாயக – சிறீமாவா ஒப்பந்தம் வரை வரிசையாக அடுக்கி சொல்ல வேண்டும். அப்படி வரிசையாகச் சொல்லும் போது ஒன்றிய வெளியுறவுத்துறை மாண்புமிகு எங்காவது திருப்தி இல்லாமல் உதட்டை பிதுக்கினால் தமிழ்நாட்டு மீனவனை இலங்கையில் பிதுக்கி விடுவார்கள் என்ற நுண்ணறிவு, சுரப்பியில் கலந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.

ஒருமணிநேரத்துக்கும் மேலாக பேச்சு வார்த்தை நீடித்தாலும் ஒன்றிய வெளியுறவுத்துறை மந்திரிதான் களைத்துப் போகவேண்டுமே தவிர, தமிழ்நாட்டுக்கான டெல்லிபிரதிநிதி களைத்துப்போகக் கூடாது. தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினை மட்டும்தான் என்றில்லை, நீட், இருமொழிக்கொள்கை, முல்லைப்பெரியாறு, நவோதயா பள்ளிகள், பதவி நியமனங்கள் என்று தமிழ்நாட்டின் வாழ்வாதாரம் மற்றும் உணர்வுநிலையோடு பின்னிப்பிணைந்து போய்விட்ட அத்தனை பிரச்சினைகள் குறித்தும் தமிழ்நாட்டுக்கான டெல்லிப் பிரதிநிதிக்கு தெரிந்து இருக்க வேண்டும். மொழிவாரி மாகாணத்துக்கு முன்னும் பின்னுமான 1956-2026 காலகட்டங்களை போகிற போக்கில் ‘கில்லி’ யாக சொல்லி அடிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
ஜோசப் விஜய் அவர்களால், டெல்லி பிரதிநிதியாக நியமிக்கப் பட்டிருக்கும் வெங்கட நாராயணா கர்நாடகக்காரர், சினிமாப்படத் தயாரிப்பாளர் என்கிறார்கள். தமிழ்நாட்டின் அத்தனை ஜீவாதாரப் பிரச்சினை குறித்தும் ஆதியந்தம் நன்கறிந்த நபராக இவரை முதலமைச்சர் கருதுகிறார், சரி -கருதட்டும், கருதிப்போகட்டும்.

டெல்லியில் இருந்தபடியே கர்நாடக மாநில ஆட்சியாளர்களுடன் நட்புடன் கலந்து பேசி காவிரிநதிநீர் விவகாரத்துக்கு ஒரு முற்றுப் புள்ளி வைப்பார், இவருக்கு அதற்கான தகுதி இருக்கிறது, தமிழ்நாட்டின் மொத்த வரலாறும் இவருக்கு ஆணிவேர் தொடங்கி தெரியும் என்று மாண்புமிகு முதலமைச்சர் நினைக்கிறார். நினைக்கட்டும், நினைத்துக் கொண்டு போகட்டும்…

பக்கென பற்றிக்கொள்ளும் பிரச்சினையோடு வாழும் மாநிலங்கள் தங்களின் பிரதிநிதிகளாக டெல்லிக்கு
அனுப்பி வைக்கும் ஒருவர், அத்தனை லேசுப்பட்ட நிலக்கரியாக இருக்கமாட்டார் என்பதுதான் யதார்த்தமும்- கடந்தகால வரலாறும்.

நமக்கு, ஒன்றை பிடிக்கும் என்பதற்காக வயது, கல்வி, சமூகமதிப்பு, வகிக்கும் பொறுப்பு, இவை யாவும் மறந்து விசில் அடித்துக் கொண்டாடும் மனநிலையானது, நமக்கு பிடித்த அந்த ஒன்றுக்கு மொத்தமாக சங்கு ஊதி முடித்து வைக்கும் செயலாகவே முடியும் – பிள்ளை வளர்ப்பு போல பொறுப்பு வேண்டும்.

கடந்த பத்தாண்டுகளில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக இருந்த இருவர். என். தளவாய்சுந்தரம் (அதிமுக) 2011 -16 காலகட்டம். ஏ.கே.எஸ். விஜயன் (திமுக) 2021- 26 காலகட்டம். இவர்கள் பற்றிய முழுமையான தகவல்களை சாட் ஜிபிடி (அ) பிடித்த வேறெந்த தளத்திலோ, யாரிடமோ கேட்டுப்பாருங்கள்- தெரியும், டெல்லி சிறப்பு பிரதிநிதியின் உயரமும் எடையும்…

ந.பா.சேதுராமன்
(27.06.2026)

Exit mobile version