Madras Kural

காரைக்கால் சிவன் கோயில் சொத்து – பட்டா நிலமான அதிசயம் …

புதுவை மாநிலம் காரைக்கால் பார்வதீஸ்வரர் கோயிலின் நில மோசடி விவகாரத்தில் துணை மாவட்ட ஆட்சியர் ஜான்சன், தாசில்தார் மதன்குமார், வருவாய் அலுவலர் சுகதேவ் மற்றும் பெண் ஊழியர் இருவருக்கு விசாரணைக்கு வரச்சொல்லி காரைக்கால் நகர போலீசார் சம்மன் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் நீட்சியாக சுற்றுலாத்துறை நிகழ்ச்சி ஏற்பாடுகளில் துணை மாவட்ட ஆட்சியர், தாசில்தார் ஜான்சன் பங்கேற்க வேண்டாம் என மாவட்ட கலெக்டர் டாக்டர் டி. மணிகண்டன் அறிவுறுத்தியுள்ளார்.

காரைக்காலில் புகழ் பெற்ற பார்வதீஸ்வரர் கோயிலின் பலகோடி மதிப்புள்ள நிலத்தை வருவாய் அதிகாரிகள் துணையுடன் போலி பட்டா, போலி அரசு உத்தரவு, போலி சீல், போலி கையெழுத்து போட்டு மோசடி செய்த விவகாரம் புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் -பாஜக அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

கோயில்பத்து பார்வதீஸ்வரர் கோயில் நிலமோசடி குறித்த சாராம்சம் என்ன? இதுதான்

காரைக்கால் கோவில்பத்து வருவாய் கிராமம், கீழவெளியில் ஜிப்மர் மருத்துவமனையை ஒட்டிய பைபாஸ் சாலைக்கு மேற்கு, ரயில்வே பாதைக்கு செல்லும் பைபாஸ் சாலைக்கு வடக்கு, துணை மின் நிலையத்துக்கு கிழக்கு, பனங்கரைக்கு தெற்கில் சுமார் 50 ஏக்கர் நிலம் காணப்படுகிறது. இந்த 50 ஏக்கர் நிலத்தில் 2 ஏக்கர் நிலத்தை கெயில் நிறுவனம் குத்தகைக்கு கேட்டது. வருவாய் அதிகாரிகள் பார்வதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலத்தை முதலில் கையகப்படுத்தினர். அன்றைய கலெக்டர் குலோத்துங்கன் இந்த இடத்தில் கெயில் நிறுவனத்துக்காக 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி, கையகப்படுத்த உத்தரவிட்டார்.

அதன்பின் கெயில் நிறுவனத்துக்காக பார்வதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்திலிருந்து வருவாய் அதிகாரிகள் 10 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தினர். ஆனால், கெயில் நிறுவனமோ தங்களுக்கு இரண்டு ஏக்கர் போதுமானது என்று கூறிவிட்டது. 10 ஏக்கரில் மீதி 8 ஏக்கரை தங்களிடம் தரும்படி புதுச்சேரி இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு காரைக்கால் வருவாய்த்துறை கடிதம் அனுப்பியது.

இதை காரைக்கால் பார்வதீஸ்வரர் கோயில் நிலத்தை அபகரிக்க அலைந்து கொண்டிருந்த நில மோசடிக் கும்பல் முன்கூட்டியே மோப்பம் பிடித்தது.

கோயில் நிலத்துக்கென மோசடியாக போலி அரசு உத்தரவு ஒன்றை தயாரிக்க மேற்படி கும்பல் முடிவெடுத்தது. அதே நேரம், புதுச்சேரி அரசு புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக வரைவு ஒன்றைத் தயாரித்திருந்தது. புதுச்சேரி விரிவு படுத்தப்பட்டு நவீன புதிய பேருந்து நிலையம் அமைக்க நில ஆர்ஜித உத்தரவை வெளியிட்டது.

இந்த உத்தரவின் நகலை அப்படியே நிலமோசடிக் கும்பல், காரைக்கால் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ற பெயரில் உத்தரவு கோப்பாக தயாரித்தது. மேற்புறம் புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான உத்தரவு எண் இருக்க, அந்த உத்தரவின் விவரங்களை அழித்துள்ளனர். அழிக்கப்பட்ட வேற்று இடத்தில் காரைக்கால் ஸ்மார்ட் சிட்டி, ஜிப்மர் அருகில் வருவதைப் போன்றும், அதற்காக பார்வதீஸ்வரர் கோயில் நிலம் கையகப்படுத்தப்பட்டதாகவும் போலி ஆவணங்களை உருவாக்கியுள்ளனர்.

இந்த போலி ஆவணத்தில் காரைக்காலில் முந்தைய கலெக்டர் குலோத்துங்கன் கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர். குற்ற சாட்சியாக துணைமாவட்ட ஆட்சியர் ஜான்சன் கையொப்பத்தை இட்டதும் தெரிய வந்திருக்கிறது. அதற்காக போலி ரப்பர் ஸ்டாம்ப்பில் அரசு சீல் தயாரித்துள்ளனர். இதற்கு தாசில்தார் மதன்குமார், வி.ஏ.ஓ. சுகதேவ் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

மேற்கண்ட கோயில் இடத்தை கையகப்படுத்தி புறம்போக்கு மனைகளாக 164 மனைகளாகப் பிரித்துள்ளனர். இதில் 70 மனைகளை மனை ஒன்று ரூ.5 லட்சம் முதல், ரூ.10 லட்சம் வரை பலரிடம் விற்றுள்ளனர். மீதி இந்த 94 மனைகளுக்கு தலா ரூ .3 லட்சம் அட்வான்ஸ் பெற்றுள்ளனர். மனைகளுக்கும் போலியான மனைப் பட்டாவையும் தயாரித்தது அம்பலமாகியிருக்கிறது.

இவ்விவகாரத்தில் தொடர்புடைய புதுச்சேரி கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் பி.ஆர்.என்.திருமுருகனின் ஆதரவாளர் சிவராமனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த ஜேசிபி ஆனந்த், டாகுமெண்ட் ரைட்டர் செந்தில்நாதன், வி.ஏ.ஓ சுகதேவ் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இவ்விவகாரத்தில் வயோலா கார்டனுக்கு வந்து செல்லும் துணை மாவட்ட ஆட்சியர் ஜான்சனின் “சினேகிதி” (?) ஒருவரிடம் போலீசார் முதற்கட்ட விசாரணையை செய்து முடித்துள்ளனர்.

மேலும், ஜான்சனின் கட்டுப்பாட்டில் இருக்கிற மூன்று “உய்யலாலா சமஸ்தானத்து கிளிகளின்” வங்கிக் கணக்கில் ஊழல் பணம் ரூ. 78 லட்சம் செலுத்தப்பட்டதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மணிநேர காண்டிராக்ட் ஊழியரான இளம்பெண்ணை, ஜான்சன் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மாதம் ரூ.15,000 ஊதியம் பெறும் ஊழியராக்கியதும் அடுத்தடுத்த விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தாசில்தார் மதன்குமாருக்கு அதே அலுவலகத்தில் வேலைபார்க்கும் பெண், புதுச்சேரியில் ஐ.ஏ.எஸ். பயிற்சியில் இருக்கும் பட்டம்மாள் நகர் “அசின்” போன்றோரிடம் போலீசார் விசாரணையைத் துவக்கியுள்ளனர். மதன்குமார்-அசின் தொடர்பை அறிந்து, தனியார் பள்ளி ஆசிரியையான மதன்குமாரின் மனைவி, புயல்போல தாலுகா அலுவலகத்தில் நுழைந்து “அசினுக்கு” பளார் விட்டிருக்கிறார். பதிலுக்கு அசினும் கமலின் முடியைப் பிடித்து, அடித்துள்ளதை தாலுகா அலுவலக ஊழியர்கள் புகார் மனுவாக புதுச்சேரி தலைமை செயலர் வரை அனுப்பியுள்ளனர்.

மேலும், பலகோடிகளை கையூட்டாகப் பெற்றுக் கொண்டு ஜான்சன், மதன்குமார், வி.ஏ.ஓ சுகதேவ் கோஷ்டி மதுபான வியாபாரி ‘மஞ்சக் கடுதாசி’ செல்வத்துக்கு காரைக்கால், வாஞ்சூர், நிரவி உள்ளிட்ட இடங்களில் சட்ட விரோதமாக 8 ரெஸ்டோ பார்களை வழங்கியதும் முதல்வர் ரங்கசாமியின் கவனத்துக்கு சென்றுள்ளது. இந்த உதவிக்காக ஜான்சனுக்கும், மதன்குமாருக்கும் ‘மஞ்சக் கடுதாசி’ செல்வம், கடந்த ஆகஸ்ட் 2023-இல் புத்தம் புதிதாக ஆளுக்கொரு “கியா மோட்டார்ஸ்” கார்களை பரிசளித்துள்ள ஆதாரங்களையும் போலீசார் விசாரணை நடத்தி சேகரித்துள்ளனர்.

தாசில்தாரின் தோழி பட்டம்மாள் நகர் ‘அசின்’ புதுச்சேரி சென்றுவர ஸ்கோடா காரை சாராய வியாபாரிகள் வாங்கித் தந்துள்ளனர். மதன்குமார், ‘அசின்’ சந்திப்பு பொருட்டு, தலத்தெரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ‘மஞ்சக் கடுதாசி’ செல்வத்தின் லாட்ஜில் சொகுசு அறையையும் உருவாக்கித் தந்திருப்பது ஊழியர்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது.

மேலும் அசினுடன் (?) தாசில்தார் மதன்குமார் தனது வீட்டில் சந்திக்க, தரங்கம்பாடியில் ஒரு சொகுசுவிடுதி, அக்கம்பேட்டை ஐஸ் பிளான்ட்டில் கொஞ்சம் விசாலமான இடம் என பல விஷயங்களுக்கு உடந்தையாக வி.ஏ.ஓ.சுகதேவ் இருந்ததையும் போலீசார் விசாரணையில் அறியவே சுகதேவை சுருட்டிவர விரைந்துள்ளனர்.

காரைக்கால் பார்வதீஸ்வரர் கோயில் நில அபகரிப்பு, மோசடியாக பட்டா தயாரித்து மனை விற்பனை விவகாரத்தில் போலீசில் புகார் தரும்படி துணை மாவட்ட ஆட்சியரிடம் கலெக்டர் டாக்டர். டி.மணிகண்டன் உத்தரவிட்டார்.

“எனக்கு உடம்பு சரியில்லை” என விடுமுறையில் செல்ல முயன்ற ஜான்சனை, ‘நீ ஆம்புலன்சிலாவது படுத்துக் கொண்டே வந்து போலீசில் புகார் கொடு. தப்பிக்க முயன்றால், புதுச்சேரி அரசே உன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்’ என்று எச்சரிக்கை செய்தார். வேறுவழியின்றி ஜான்சன் தனக்காக மாமூல் வசூலிக்கிற வி.ஏ.ஓ சுகதேவ் சகிதம் நகர காவல் நிலையம் வந்து இரவு 2 மணிக்கு புகார் மனுவை அளித்துள்ளார்.

காரைக்காலில் வட்டிக்கடை, நகைக்கடை, ஒயின்ஷாப், பார், சாராயக்கடை, ரெஸ்டோபார் போன்ற இடங்களில் துணை மாவட்ட ஆட்சியர் ஜான்சன், தாசில்தார் மதன் குமாருக்காக கலால் உதவி எஸ்.ஐ. பன்னீர்செல்வம் மாத மாமூலை வசூல் செய்து கொடுத்ததை கலெக்டர் டாக்டர்.டி.மணிகண்டனிடம் வருவாய் ஊழியர்கள் விலாவாரியாக தெரிவித்துள்ளனர்.

கோயில் மனை அபகரிப்பு, போலி பட்டா மோசடி விவகாரத்தில் புதுச்சேரி கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகனின் ஆதரவாளர்களான பார்வதீஸ்வரர் கோயிலின் முந்தைய அறங்காவல் குழுவினர், முதல்வர் ரெங்கசாமியிடம் அமைச்சர் திருமுருகனால் பரிந்துரைக்கப்பட்ட தற்போதைய கோயில் நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் உள்ளிட்டோருக்கு நேரடி தொடர்பு இருப்பதாக உளவுத் துறையினர் முதல்வர், கவர்னருக்கு தகவல் தந்துள்ளனர்.

முறைகேடாக விற்கப்பட்ட இரண்டரை ஏக்கர் கோயில் நிலத்தில் அமைக்கப்பட்ட 164 மனைகளுக்கான பலகோடிகளை பங்கிட்டது யார்? நகர காவல்நிலைய போலீசாரால் “தலைமறைவு குற்றவாளிகள்” என்று லுக்-அவுட் போஸ்டர் ஒட்டியும், ஜேசிபி ஆனந்த் இருக்கும் இடம் தெரிய வில்லை. ஆனால் அவர் பயன்படுத்தும் இன்னோவா காரை போலீசார் தூக்கி வந்துள்ளனர்.

எனவே குற்றவாளிகள் போலீசாரின் தேடுதல் நாடகத்தை பயன்படுத்தி ஜாமீனில் செல்ல, போலீசாரே வழி ஏற்படுத்துகிறார்களா? என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது. தற்போது ஜேசிபி ஆனந்தை போலீசார் கைது செய்திருப்பதாகவும், துணை மாவட்ட ஆட்சியர் ஜான்சன், தாசில்தார் மதன்குமார், வி.ஏ.ஓ சுகதேவ், அமைச்சர் திருமுருகனால் பார்வதீஸ்வரர் கோயிலுக்கு நியமிக்கப்பட்ட முந்தைய அரங்காவல் குழுவினர், தற்போதைய கோயில் தனி அதிகாரியும் ஆசிரியருமான சுப்பிரமணியன், உள்ளிட்டோருக்கு போலீசார் விசாரணைக்கான சம்மன் தரப்பட்டிருக்கிறது.

புதுச்சேரியில் தேர்தல் நேரத்தில் பிடிக்கப்பட்ட சாராய விற்பனை தொடர்பாக கலால் உதவி ஆணையர் சீட்டிலிருந்து காரைக்காலுக்கு ஜான்சன் மாற்றப்பட்டார். வந்த இடத்திலாவது சுழியை வைத்துக் கொண்டு சும்மா இருந்திருக்கலாம். காரைக்காலில் ஆட்கொல்லி கலப்பட மது விற்பனை, சட்ட விரோத ரெஸ்டோபர் அனுமதி, பினாமி பெயரில் புதிய பார்கள், கார்கள் மற்றும் பலகோடி லஞ்சப்புகார், சாரயக்கடை கிஸ்தி கட்டாதவர்களுக்கு சலுகை என்று சட்டம்பிள்ளையாக வலம் வந்த துணை மாவட்ட ஆட்சியர் ஜான்சனுக்கு கோயில் நில மோசடி விவகாரம் சுருக்கை வீசியிருக்கிறது. கடந்த கால தவறுகளில் முதல்வர் ரங்கசாமியின் கால்களைப் பற்றி தப்பிய ஜான்சன், அதே முதல்வர் ரங்கசாமியால் தற்போது கை கழுவப் பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்களில் ஓடுகிற தகவல்தான் இன்றைய தேதியில் புதுவையின் பரபரப்பு விஷயமே.

நமது சிறப்பு நிருபர்

Exit mobile version