Madras Kural

கல்வி தொலைக்காட்சி மூலம் நாளைமுதல் அரிய வாய்ப்பு|

போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கான வழிகாட்டியாக நாளை முதல் (டிசம்பர்-8), 2025 டிசம்பர் 12-ஆம் தேதி வரை, “கல்வி தொலைக்காட்சி” யில் அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் விதமாக கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை பயிற்சி வகுப்புகள் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது.

மறு ஒளிபரப்பானது, மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வெளியாகிறது.
TN Career Service Employement என்ற யூடியூப் சேனல் வாயிலாகவும் மாணவர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்புகளை காண முடியும். அதேபோன்று Tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்திலும் அனைத்து தேர்வுகளுக்குமான மென்பாடக் (Soft note) குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் வழிமுறை சொல்லப்பட்டுள்ளது.

ஐந்துநாள்கள் நடக்கும் பயிற்சி வகுப்பில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம், பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வு வாரியம், வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம்” ஆகிய அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, டெட் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், இந்த இலவச பயிற்சி வகுப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நாள்களுக்கு முன்னர் 2026-ஆம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அட்டவணை வெளியானது நினைவிருக்கலாம். அதற்குத் தயாராகும் மாணவர்களுக்கும் இந்த அறிவிப்பு உத்வேகத்தை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஏற்கெனவே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்டவை நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு தமிழ்நாடு அரசு இலவசப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்நிலையில்தான் மேற்கண்ட முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

பியெஸ்கேபி

Exit mobile version